Monday, February 14, 2011

கதாபாத்திரங்களின் உரையாடல் - II


என்னுடைய "கதாபாத்திரங்களின் உரையாடல்" கதையில் காணாமல் போன மூன்றாவது குமாரை கண்டுபிடித்து மீண்டும் உயிர் கொடுக்கும் முயற்சிகளை செய்துக்கொண்டு இருக்கிறேன். நேற்று நண்பன் ஒரு விசயத்தை நினைவுப்படுத்தியதற்க்கும், நான் இன்று மூன்றாவது குமாரை தேடத் தொடங்கியதற்க்கும் ஒரு முக்கியமான சம்மந்தம் இருக்கிறது. " ஒரு காலத்தில் சரவண வடிவேல் என்கின்ற நான் வலைப்பதிவில் கதைகள் எழுதிக்கொண்டிருந்தேன் " இதுதான் நண்பன் எனக்கு நினைவுப்படுத்தியது. நான் உடனே என் கதைகளில் வருகின்ற கதாபாத்திரங்களை தேடத் தொடங்கினேன்.

கிட்டத்தட்ட கதைகள் எழுதி நான்கு மாதங்கள் மேலானதால், அவர்களை தேடிக்கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டமாகவே இருந்தது. சிலர் என்னை மறந்தே விட்டனர். நான்தான் உங்களை உருவாக்கினேன் என்பதை  சொன்னபோது, அவர்கள் என்னைப்பார்த்து சிரிக்கவே செய்தனர். அவர்கள் என்னை மறந்ததால், நானும் அவர்களை மறந்துவிட முடியுமா என்ன??.

என்ன காரணம் என்றே தெரியாமல் என்னை தவிர்க்க தொடங்கிய ஒரு பெண்னை மறக்க முடியாமல்,  தினமும் இரவில் முழித்துக்கொண்டு எதாவது புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். அப்படிப்பட்ட நான், எப்படி என் கதாபாத்திரங்களை மறக்க முடியும். என் கதாபாத்திரங்கள் மீது நான் அக்கரைக்காட்டவில்லை என்றால், பின் யார்தான் அவர்களுக்கு அக்கரைக்காட்டுவது.

அசோக்கை பற்றி விசாரிப்பதுதான் எனக்கு மிகவும் சிக்கலாக இருந்தது. உங்களை பற்றி நீங்களே மற்றவர்களிடம் விசாரிக்கும் போது, அவர்கள் உங்களை பைத்தியம் என்று எண்ணக்கூடும். இப்பொழுது அசோக் முன்னர்போல் இல்லை, தினமும் ஒரு குவாட்டர் அடித்து பின்னர்தான் தூங்க செல்கிறான். அவனது அறையில் புதிதாக இரண்டு உதவி இயக்குனர்கள் சேர்ந்திருப்பதால், எல்லா திரைப்படங்களையும் முதல் நாளே பார்க்கவேண்டியதாயிருக்கிறது. இனிமேல் அந்த இரண்டு உதவி இயக்குனர்களையும் என் கதையில் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு பெயர் கூட முடிவுசெய்துவிட்டேன்.  ஒருவன் பெயர் அரவிந்த், இன்னொருவன் நாகு. பெயர் பிடிக்காதவர்கள் என்னிடம் தனியாக போன் செய்து சொல்லலாம்.

இதைப்போல்,  சில கதாபாத்திரங்களை தேடிக்கண்டுபிடித்த போது, அவர்களுடன் இன்னும் சிலரும் புதிதாக சேர்த்துக்கொண்டார்கள்.  (எ.டு) காவ்யாவிற்க்கு  இப்பொழுது கல்யாணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது. நான்கு மாத இடைவெளியில் எப்படி குழந்தை பிறக்கும் என்ற அறிவுபூர்வமான கேள்வியை நீங்கள் கேட்பீர்கள் என்றால், தயவு செய்து இந்த பாராவுடன் படிப்பதை நிறுத்திவிட்டு, என் வலைப்பதிவை மூடிவிடுங்கள். " வாசகர்கள் என்னைவிட அறிவாளியாக இருப்பதை நான் ஒருபொழுதும் விரும்புவதில்லை ".

நான் அசோக்கை பார்த்துவிட்டு திரும்பிய போது, "இனி தன்னைப் பற்றி எதுவும் எழுத வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டான். வேண்டுமானால், இந்த நாகு, அரவிந்த, பேரின்பா இவர்களைப்பற்றி எழுதிக்கொள் என்கிறான்.

இப்படி எல்லாரையும் தேடி கண்டுபிடித்தும், அந்த மூன்றாவது குமாரை மட்டும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அவனைப் பற்றி விசாரித்த போது,  அது போல் ஒருவனே இல்லை அது ஒரு கற்பனை என்றாள் கவிதா. கவிதாவே ஒரு கற்பனைத்தானே, அவள் மட்டும் இருக்கும் போது எப்படி மூன்றாவது குமார் காணாமல் போக வாய்ப்பிருக்கிறது???.  ஆனால், இந்த கவிதாவையும் நம்ப முடியாது,  இவள்தான் ஒருமுறை என்னிடம் கூறினாள், "உன் கதையில் வரும் பெண் யார் என்று எனக்கு தெரியும்", இவள் இப்படி சொல்லியபின் எனக்கு எதாவது ஒருவகையில் உதவுவாள் என்று நினைத்தேன். ஆனால்..... சரி அதை விடுங்கள், அது அசோக்கின் சொந்த பிரச்சனை.

எனக்கு, மூன்றாவது குமாரை காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்க ஆசையில்லை. ஆகவே அவனை எப்படி மீண்டும் கொண்டுவருவது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் மூன்றாவது குமாருடன் சந்திக்கிறேன்.

5 comments:

தனி காட்டு ராஜா said...

//விரைவில் கடைசி குமாருடன் சந்திக்கிறேன்.//

ஒத்துகறேன் ...நீ இலக்கிய வாதி தான் ...
Be Careful [ம்...என்னை சொன்னேன் ...] ....:)

சரவண வடிவேல்.வே said...

இலக்கியவாதியா??? அப்படினா என்ன சார்???...

ரொம்ப பெரிய வியாதியோ????

தனி காட்டு ராஜா said...

//ரொம்ப பெரிய வியாதியோ????//

ஆமா சரவணா...அது ஏதோ குணப்படுத்தவே முடியாத வியாதி -நு எங்க ஊரு பக்கம் பேசிக்கறாங்க ....

அப்புறம் இந்த வியாதி வந்துருச்சுனா ....வியாதி வந்தவனுக்கே தனக்கு இப்படி ஒரு வியாதி இருக்கரதே தெரியாதமா..:))

சரவண வடிவேல்.வே said...

கேட்கவே பயங்கரமா இருக்கே..

அந்த வியாதி உள்ளவர்கள் எழுத்தை படித்தால் அவ்வளவுதான் போல்....

நீங்கள் சொன்னது சரிதான். Be Careful ( உங்களுக்கு சொன்னேன் )

சுப்பிரமணி சேகர் said...

" வாசகர்கள் என்னைவிட அறிவாளியாக இருப்பதை நான் ஒருபொழுதும் விரும்புவதில்லை ".

சிரிக்காமல் இருக்க முடியவில்லை.