என்னதான் எல்லா திரைப்படங்களையும் முதல் வாரமே பார்த்தாலும், சில திரைப்படங்கள் மட்டும் தப்பித்துவிடுகின்றன. அப்படி தப்பித்த ஒரு திரைப்படத்தை நேற்று விஜய் டி.வி'யில் பார்க்க நேர்ந்தது. அந்த திரைப்படம் "இனிது இனிது" , இதன் ஒரிஜினல் காப்பி "Happy Days"யை நண்பன் ஒருவன் அடிக்கடி புகழ்வான், ஆனால் "Happy Days"யை இன்னும் நான் பார்க்கவில்லை.
"இனிது இனிது" அப்படி ஒன்றும் சிறந்த திரைப்படம் இல்லைதான், ஆனால் கண்டிப்பாக நமது கல்லூரி வாழ்க்கையைத் திரும்பி பார்க்கவைக்கும் திரைப்படம். உங்களை திரும்பி பார்க்க வைத்ததோ, இல்லையோ, என்னை திரும்பி பார்க்கவைத்தது. சமீபத்தில் வந்த "ஈசன்" திரைப்படத்தில் ஒரு கல்லூரி வாழ்க்கையை எந்தளவு மோசமாக காட்ட முடியுமோ அந்தளவு மோசமாக காட்டியிருப்பார்கள். ஆனால், எந்த கல்லூரி மாணவர்களிடம் இருந்தும் ஈசன் திரைப்படத்திற்க்கு எதிர்ப்பு வரவில்லை. வழக்கம் போல் இதையும் ஜாலியாக எடுத்துக்கொண்டிருப்பார்கள் என்று நம்புவோம். "ஈசன்" திரைப்படம் நன்றாக ஒடவில்லை என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி. இந்த திரைப்படம் மட்டும் வெற்றி அடைந்திருந்தால் அவ்வளவுதான், இன்னேரம் ஒரு பத்து திரைப்படமாவது இதைப்போல் வெளிவந்திருக்கும். நான் சொன்னதற்க்கு சிறந்த எடுத்துக்காட்டு "பருத்தி வீரன்". இந்த திரைப்படத்தின் கடைசியில் வந்த அந்த கொடூரமானக் காட்சியின் பாதிப்பில் இதுவரை எத்தனைத் திரைப்படங்கள் வந்துவிட்டன், "ஈசன்" திரைப்படம் கூட அதன் ஒருவகையானப் பாதிப்புதான்.
"ஒரு கொடூரமானத் திரைப்படம் மட்டுமே சிறந்த திரைப்படமாக மாற முடியும்" என்று நம் தமிழ் இயக்குனர்கள் நம்பத் தொடங்கிவிட்டார்கள். "நடுநிசி நாய்கள்" போன்ற திரைப்படம் தமிழ் சமூகத்தில் எந்தவிதமான மோசமானப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வழக்கம்போல் எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன். எல்லாருடைய வாழ்க்கையைப் போலவே என்னுடைய கல்லூரி வாழ்க்கையும் மிகவும் இனிமையாது. அதை அசை போட வைத்த "இனிது இனிது" திரைப்படத்திற்க்கு நன்றி, அந்த நான்கு வருடங்களைக் கண்டிப்பாக மறக்க முடியாது. எத்தனை விதமான மனிதர்கள், எத்தனை விதமான நண்பர்கள். எனக்கு எப்பொழுதும் நண்பர்கள் எண்ணிக்கை அதிகம், சொல்லப்போனால் நான் அவர்களுக்காக ஒன்றுமே செய்திருக்கமாட்டேன். ஆனால், அவர்கள் எனக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். இது இன்றுவரை தொடர்கிறது. இதை நான் கண்டிப்பாக மிகைப்படுத்தி சொல்லவில்லை, இதற்க்கு ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்.
கல்லூரி மூன்றாம் வருடம், வழக்கம் போல் நான் எதையோ காமெடியாக சொல்ல போக, நண்பன் ஒருவன் சும்மா என்னை ஒரு தட்டு தட்டினான். இதை பார்த்த இன்னொரு நண்பன் என்னை எப்படி அவன் அடிக்கலாம், என்று அவன் கண்ணத்தில் 'பளார்' என்று அறைந்துவிட்டான். இந்தப் பிரச்சனை பெரிதாகி அன்று மாலை கல்லூரி பின்புறம் இரண்டு கேங்குக்கிடைய சண்டையாக மாறிவிட்டது. இந்த சண்டை நடந்துக்கொண்டிருந்த அந்த மாலைப்பொழுதில் நான் கல்லூரி கேண்டினில் ஒரு பெண்கூட அமர்ந்து 'சமோசாவும் பானி பூரி'யும் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.
இதைப்போல் எத்தனையோ உதாரணம் சொல்லிக்கொண்டே போகலாம். அப்பறம் இன்னொரு நண்பனைப் பற்றி கண்டிப்பாக சொல்ல வேண்டும். அவன் பெயர் "போனி". அவனிடம் எல்லாவற்றிக்கும் பதிலிருக்கும் ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டான். "இகனாமிக்ஸ் தொடங்கி, உலகத்திரைப்படம், உலக ஆரசியல், தீவிரவாதம், பூட்பால்" என்று எல்லாவற்றையும் தெரிந்துவைத்திருப்பான். நீங்களே அவனிடம் அதைப்பற்றி பேசினால் தவிர அவன் எதைப்பற்றியும் வாய்திறக்க மாட்டான். நானும் அவனும் பேசிக்கொள்ளாத விசயங்களே இல்லை என்று சொல்லலாம்.
இப்படி எத்தனையோ விதமான நண்பர்கள், எத்தனையோ விதமான் அனுபவங்கள். யாரையும் மறக்க முடியாது. கையில் அப்பொழுது 50 ரூபாய் இருந்தாலே அதிகம், அதையும் அப்பொழுதே காலி செய்துவிடுவோம், அடுத்த நாளைப் பற்றிய கவலை எங்கள் யாருக்குமே இல்லை. கல்லூரி அருகில் உள்ள ஹோட்டலில் ஒருவனுக்கு மட்டுமே அக்கவுண்ட் இருக்கும், அதில் நாங்கள் ஒரு பத்து பேராவது சாப்பிடுவோம். கல்லூரி வாழ்க்கையை பற்றி எழுதினால், ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு சொல்லிக்கொண்டே போகலாம். ஆகவே, இத்துடன் இந்தப் பதிவை முடித்துக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment