Tuesday, January 3, 2012

ஒரு பின்னூட்டம்

எனது பழையப் பதிவுகளை புதிய டெம்ப்ளேட்டில் பார்த்தால் எப்படி இருக்கும் என்ற ஆசையில், பழையப் பதிவுகளை மேய்ந்துக்கொண்டு இருந்தேன். அப்பொழுது பேரின்பா எனது பதிவு ஒன்றுக்கு எழுதிய ஒரு பின்னூட்டத்தை படிக்க நேர்ந்தது. 

பேரின்பாவின் பின்னூட்டம் கீழே.....
என் வரையில் கவிதையை நான் ரகம் பிரிப்பதில்லை. அது நல்லது அல்லது லாயக்கற்றது என்பதை அடுத்த கவிதை எழுதும் போதுதான் தீர்மானிக்கிறேன். எழுத்துப்பிழை இல்லாமல் இருப்பதில்லை. கவிதையை அதுபாட்டுக்கு நடை பழகவிட்டுவிடுவதே என் வழக்கம். “இந்த கவிதை புரியவேயில்லை” என்பது, “அவனுக்கு கோர்வையாக பேசத்தெரியாது“ என்பதைப் போன்றது.

வார்த்தைகளை கைபிடி அளவே பயன்படுத்துவது கவிதையின் அடிநாதம். ஒருவன் சொல்லவந்த விஷயத்தை அவன் பார்வைக்கே சென்று பார்ப்பது மேலோங்கிய ரசனை. எழுதிய அத்தனை கவிதைகளும் அனைவருக்கும் புரிவதில்லை. ‘இதுதான் என் கவிதையின் சாரம்‘ என பிரச்சார வார்த்தைகளைக் கொண்டு புனைவது கவிதையாகாது என்பது என் சார்பு.

என்றோ நான் பார்த்த என் அம்மாயி வீட்டின் திண்ணையை நான் கவிதையாய் சொல்லும்போது அது காட்சி விவரிப்பில் அம்சமானதாக இருப்பினும் , வாசிப்பவர் மனது என்றோ தான் பார்த்த அழுக்கு கிராமத்துத் திண்ணையை ஞாபகப்படுத்திக்கொள்ளும். நான் பார்த்த திண்ணை இப்படித்தான் இருந்தது என்பதை விவரிக்கிறேன். அவர்கள் கற்பனையில் அது வேறு ஒரு திண்ணை. வேறுபாடு வந்தேதீரும். அதை எற்றுக்கொள்ளும் மனம் என்னிடமுண்டு.

-பேரின்பா

No comments: