Saturday, December 31, 2011

மெளனகுரு - அமைதியான மாபெரும் வெற்றி

என்னதான் உலக சினிமாக்களை தேடித் தேடி பார்த்தாலும், ஒரு சில தமிழ் சினிமாக்கள் அவை அனைத்தையும் மிஞ்சி விடுகின்றன. அப்படி சமீபத்தில் பார்த்த ஒரு திரைப்படம் சாந்தகுமார் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் 'மெளனகுரு'.

சிதம்பரத்திலிருந்து நண்பன் ஒருவன் "படம் சூப்பரா இருக்கு, கண்டிப்பாக பாரு" என்று சொல்லி ஒரு வாரமாகியும் திரைப்படத்தை பார்க்க முடியாமல் தள்ளிக்கொண்டே போனது. கடைசியாக நேற்று இரவுதான் அதற்கான வாய்ப்பு வாய்த்தது. மழை காரணமாக திரையரங்குக்கு கொஞ்சம் தாமதமாக செல்ல, அதற்குள் திரைப்படம் தொடங்கி பதினைந்து நிமிடங்கள் கடந்துவிட்டது. சென்னையில் சரியான நேரத்துக்கு இயங்கப்படும் ஒன்றே ஒன்று உண்டு என்றால், அது திரையரங்கு காட்சிகள் மட்டும்தான்.

நான் திரையரங்கில் நுழைந்துபோது, ஹீரோ அருள்நிதி ஒரு பிரச்சனையின் காரணமாக கல்லூரியிலிருந்து டி.சி வாங்கிக்கொண்டு இருந்தார். அதன் பின்னர் ஹீரோ சென்னை வந்துவிடுகிறார். இப்படி கதையை வரி வரி'யாக சொல்லாமல், சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், "விபத்தில் அடிப்பட்ட ஒருவனிடமிருந்து, நான்கு போலீஸ் அதிகாரிகளுக்கு பல கோடி மதிப்புள்ள பணம் கிடைக்கிறது. யாருக்கும் தெரியாமல், அதை அவர்களுக்குள் பங்கிட்டுக்கொள்ள முடிவு செய்கிறார்கள். ஹீரோ அவனுக்கே தெரியாமல் இந்த பிரச்சனையில் மாட்டிக்கொள்ள. அவன் வாழ்க்கை திசை திரும்பிவிடுகிறது. இதனால் ஏற்படும் பிரச்சனைகள்தான் கதை"கதையை விட திரைக்கதையில் இயக்குனர் கலக்கி உள்ளார். கிளைமாக்ஸை தவிர வேறு எங்குமே தேவையில்லாமல் ஒரு காட்சியைக் கூட சேர்க்கவில்லை. இரண்டாவது பாதியில் வரும் மனநலக் காப்பக காட்சிகள் "கோபி கிருஷ்ணன்" கதைகளை நினைவுப்படுத்துகிறது. மனநலக் காப்பகத்தில் வரும் வசனங்கள் அனைத்துமே அற்புதம்..

"எத்தனை வருஷமா இங்கே இருக்கீங்க??"

"இரண்டு வருஷமா இருக்கேன். இரண்டு வருஷமுனா, வெளியில் போய் உள்ளே வந்து, வெளியே போய் உள்ளே வந்து. அப்படி.."

மெளன குரு திரைப்படத்தின் நடித்திருக்கும் யாரையுமே பாராட்டாமல் இருக்க முடியாது. ஜான் விஜய், அருள்நிதி, இனியா, உமா ரியாஸ், பாதர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஒருவர் என்று அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். உமா ரியாஸ் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடத்தும் விசாரனைகளை, இதுவரை எந்த திரைப்படத்திலும் பார்த்திருக்க முடியாது. போலிஸ் விசாரனை என்றாலே இப்படிதான் இருக்க வேண்டும் என்ற மாய தோற்றத்தை இந்த திரைப்படத்தில் உடைத்திருக்கிறார்கள்.

கதையில் ஹீரோவின் வாழ்க்கை திசைமாற, எல்லாருமே ஒரு வீதத்தில் காரணமாகிறார்கள், ஆரம்பத்தில் வரும் அந்த விலை மாது, பாதர், அவர் பையன், ஹீரோவை பழிவாங்க துடிக்கும் கல்லூரி மாணவன், மனநலக் காப்பகத்து மருத்துவர், அவரின் உதவியாளர்கள், கல்லூரி வாட்ச்மேன் என்று திரைப்படத்தில் வரும் சின்ன சின்ன கதாபாத்திரம் கூட ஹீரோவின் அந்த நிலைமைக்கு காரணமானவர்களே.

திரைப்படத்தின் ஆரம்பத்தில் வந்த அருள்நிதி, இனியா ஆகியோரின் காதல் காட்சிகளும் நன்றாகவே இருந்தது. "வாகை சூடவா" திரைப்படத்தில் இனியா செய்த மூகப்பாவனைகளை பார்த்து எங்கே அடுத்த ஜோதிகா வந்துவிட்டாரோ என்று கூட பயந்து இருந்தேன். ஆனால் இந்த திரைப்படத்தில் அப்படி எந்த ஒரு மூகப்பாவனைகளும் இல்லை.

"ஓரம்போ, வா குவாட்டர் கட்டிங்" ஆகிய இரண்டுமே எனக்கு பிடித்த திரைப்படங்கள், அந்த திரைப்படங்கள் பிடித்துப் போக ஜான் விஜயின் நடிப்பும் ஒரு காரணம். அதே போல், மற்றும் ஒரு அற்புதமான நடிப்பை இந்த திரைப்படத்தில் வெளிகாட்டியுள்ளார் ஜான் விஜய்.

கேமராமேன் முத்துசாமி, அற்புதமான பின்னனி இசைக்கு தரண், எடிட்டர் என்று அனைவரையும் பாராட்டியே ஆக வேண்டும். இன்னும் யாரையாவது இங்கு நான் பாராட்ட மறந்து இருந்தால், அது என் தவறு என்பதை தவிர வேறு ஒன்றும் காரணம் அல்ல...

இந்த ஆண்டில் நான் பார்த்த கடைசி திரைப்படம், மற்றும் கடைசி பதிவு ஆகிய இரண்டும்  'மெளனகுரு'வாக மாறியது எனக்கு மகிழ்ச்சியே. இப்படி ஒரு அற்புதமான திரைப்படத்தை இயக்கிய சாந்தகுமாருக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்..

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகள். 

1 comment:

BADRINATH said...

100 சதம் உண்மை... இந்த மாதிரி இரண்டு படங்கள் வந்தால் போதும் தமிழ்த்திரைப்படங்கள் உலக வரிசையில் முதல் இடம் வந்து விடும்....தற்போது இருக்கும் HERO சேஸ்டைகள் , இரைச்சல்கள், வீண் பஞ்ச் டயலாக் கருமாந்திரங்கள்.. அசிங்க இரட்டை அர்த்த வசனங்கள் சம்பந்தமேயில்லாத பாடல்கள் முட்டாள் கோமாளி டான்ஸ் அசைவுகள் இப்படி எந்த அபத்தங்கள் இல்லாமல் ஒரு படம் எடுக்க முடியும் என்று நிருபித்திருக்கிறார் சாந்தகுமார்.. உண்மையில் கதாநாயகன் அருள்நிதி அல்ல.. உமாரியாஸ்தான்.. ஒரு பெண் அதுவும் கர்ப்பிணிப் பெண் அத்தனை புத்திசாலித்தனமாக அனைத்தையும் கண்டுபிடிப்பது தமிழ்சினிமாவின் புதிய உத்தி... படத்தை எத்தனை பாராட்டினாலும் தகும்... உண்மையான கலையை நேசிப்பவர் அனைவரும் பார்க்க வேண்டிய அற்புதப் படைப்பு......