Monday, December 12, 2011

ஒரு புகைப்படத்தை முன் வைத்து

முகநூலில், ஒரு புகைப்படத்தை தற்பொழுது பலருடைய Profile'ல் பார்க்க முடிகிறது. மூன்று மனிதர்கள் ஒரு திண்ணையில் உட்கார்ந்திருக்க இன்னொரு மனிதர் தரையில் உட்கார்ந்திருப்பார், மேலும் மூன்று குழந்தைகளும் அந்த புகைப்படத்தில் இருப்பார்கள். இங்கே குழந்தைகள், மனிதர்கள் என்று சொல்வதைவிட  எலும்புக்கூடுகள் என்று சொல்லிவிடலாம். அந்த புகைப்படத்தில் உள்ள எல்லோருடைய கண்களிலும் பசியைப் பார்க்கலாம்.

இப்பொழுது உங்களுக்கு தெரிந்திருக்கும், நான் எந்த புகைப்படத்தைப் பற்றி சொல்கிறேன் என்று. ஆம், முல்லை பெரியார் அணை கட்டும் முன்பு அந்த பகுதி தமிழர்கள் இப்படிதான் இருந்தார்கள் என்று சொல்லி முகநூலில் ஒரு புகைப்படம் உழாவிக்கொண்டிருக்கிறதே அதைப் பற்றி சொல்கிறேன்.

அந்த புகைப்படத்தை பார்த்தவுடனேயே, முல்லைப் பெரியாறு அணை காப்பாற்றாவிட்டால், நம் தமிழர்களின் நிலைமை இப்படியாகிவிடும் என்ற பயம் எல்லா தமிழர்களுக்கும் வந்துவிடும். அது தான் அந்த புகைப்படத்தின் வெற்றி. அந்த காலத்தில் "நேஷனல் ஜியோகிராபிக் சேனல்" வழங்கும் அற்புதமானப் புகைப்பட விருதுகள் இருந்ததா என்று தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால், கண்டிப்பாக அந்த விருது இந்தப் புகைப்படத்துக்குதான் கிடைத்திருக்கும்.

அந்த புகைப்படத்தை பார்த்தவுடனேயே எனக்கு ஒரு சந்தேகம், அந்த புகைப்படம் உண்மைதானா? அதிலிருப்பவர்கள் தமிழர்கள் தானா?? அணை கட்டப்பட்ட ஆண்டு 1895. அப்படியென்றால், அதற்கு முன்னரே இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட'தா?? அதுவும் இவ்வளவு தெளிவாக.  இந்த புகைப்படம் எடுத்தவர் யார்?? இப்படி எத்தனையோ கேள்விகள்.

அந்த புகைப்படத்தில் வலது ஓரத்தில் இருப்பவரைப் பார்த்தால், நம் தமிழர் போல்தான் தெரிகிறார். ஆனால், மற்றவர்கள்?? எதற்காக அவர்களுக்கு மொட்டை அடிக்கப்பட்டுள்ளது?? வறுமையிலிருந்தாலே மொட்டை அடிக்கப்பட வேண்டியது கட்டாயமா?? சோமாலியா நாட்டில், அவர்கள் தலைமுடியே இப்படிதான் இருக்கும் என்றல்லாவா நினைத்திருந்தேன். இப்பொழுதுதான் தெரிகிறது, அது வறுமையால் எற்பட்ட தலைமுடி என்று,

அந்த புகைப்படத்தைப் பற்றிய சந்தேகம் அதிகரித்துக்கொண்டே போக, இணையத்தில் தேடத் தொடங்கினேன். கூகுளின் Goggles உதவியுடன் அந்த புகைப்படத்தை தேடிய போது, அந்த புகைப்படம் விக்கிப் பக்கத்திலேயே இருப்பது தெரியவந்தது. இந்தியாவில் நடந்த பஞ்சங்களைப் பற்றி விக்கியில் சொல்ல இந்த புகைப்படம் உதவியாக இருந்துள்ளது. இந்த புகைப்படத்துக்கு விக்கியில் குறிப்பிட்டுள்ள ஆண்டு 1876–78. விக்கியில் இருந்தால் அது சரியாகதான் இருக்கும் என்று நீங்கள் நினைப்பது போலவே நானும் நினைப்பதால் இந்த புகைப்படம் பற்றி உள்ள சந்தேகங்களை இங்கேயே நான் நிறுத்திக்கொள்கிறேன்.

சரி, இப்பொழுது என் கேள்வியெல்லாம், இந்த புகைப்படங்களை இந்நேரத்தில் பரப்பத் தொடங்கியது யார்?? இது போன்ற புகைப்படங்களால் நம் மக்களை மிகவும் சுலபமாக கொந்தளிக்க வைக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அப்படி இருந்தும், எதற்காக இந்த புகைப்படத்தை நாம் அனைவரும் தொடர்ந்து Share செய்துக்கொண்டே இருக்கிறோம். கேரளாவுக்கும், நமக்கும் இப்பொழுது எற்பட்டுள்ள இந்த இறுக்கமான சுழ்நிலையில், இது போன்ற புகைப்படங்கள் பிரச்சனையை இன்னும் பெரிதாக்கவே உதவும்.  எல்லாவற்றையும் ஒருவீத பொழுதுபோக்காகவே பார்க்கும் இன்றைய சமூகத்தில், இந்த புகைப்படத்தையும் ஒரு பொழுதுபோக்காகவே பார்க்கிறோம், ஆனால் ஒரு கட்டத்தில் இது பெரும் மன எழுச்சியை உண்டாக்கும் என்ற உண்மை தெரியாமல்.

மேலும் அந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் தமிழர்களோ, வங்காளர்களோ யாராக இருப்பினும், அந்த புகைப்படத்தை நான் ஒரு அவமானச் சின்னமாகவே பார்க்கிறேன்.

அந்த புகைப்படத்தை எதிர்க்கிறேன் என்பதுதான் நான் இங்கு சொல்லவருவது. அதை எப்படி தெளிவாக சொல்வது என்று தெரியாமல், எதோ எதோ சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

இதைப் போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வலம் வர நண்பர்கள் யாரும் உதவி செய்ய வேண்டாம் என்றும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

(அந்த புகைப்படத்தின் விளம்பரத்துக்கு எந்தவீதத்திலும் இந்த கட்டுரை உதவக் கூடாது என்பதற்காக அந்த புகைப்படம் இங்கே வலையேற்றப்படவில்லை).

10 comments:

Thekkikattan|தெகா said...

உண்மையை உண்மையாக அதன் முகத்தில் விழிக்க இத்தனை பயமா?

அது போன்ற ஒரு பட்டினிச் சாவுகள் (famime) நிதர்சனத்தில் நடந்ததுனாலேதான் அந்த அணையின் தேவையே உணரப்பட்டது. நாளை அது போன்ற ஒரு நிலை வராது என்று என்ன நிச்சயம்.

இருக்கும் நீர் நிலையை பகிர்ந்து கொள்வதில் என்ன பிரச்சினை. படத்தை பார்ப்பதற்கே இப்படி பயப்பிடுகிறோமே இன்னும் ஈழத்தில் முள் வேலிக்கு பின்னால் மக்கள் படும் கஷ்டத்தை நாம் அனுபவிக்க நேர்ந்தால்... ??

Thekkikattan|தெகா said...

a typo re- read FAMIME as = famine.

சொல்லாமல் விட்டுப் போனது. அந்தப் புகைப்படத்தை ஒரு விழிப்புணர்வேற்று விசயமாக பாருங்க. நிச்சயம் சொல்ல வந்த விசயம் புரியும். அது அவமானச் சின்னமல்ல... உண்மை

கோவி.கண்ணன் said...

//அந்த புகைப்படத்தின் விளம்பரத்துக்கு எந்தவீதத்திலும் இந்த கட்டுரை உதவக் கூடாது என்பதற்காக அந்த புகைப்படம் இங்கே வலையேற்றப்படவில்//

தெகா கருத்தை வழிமொழிகிறேன்

*******

அட நீங்க நம்ம ஊர்(நாகை) !

:)

☀நான் ஆதவன்☀ said...

அந்த புகைப்படம் உண்மை என்று தெரிந்தும் கூட அதை ஏற்க மறுப்பது ஏன்?

மலையாளிகளை போல் கிராபிக்ஸ் காட்சிகள் நிரம்பிய லூசுத்தனமான படங்களை ஒன்றும் நாம் வெளியிடவில்லையே?

கலகலப்ரியா said...

lemme share some videos here... this page seems to be apt for these stuff..

http://www.youtube.com/watch?v=5ccWdSdqCYk

http://www.youtube.com/watch?v=oLNUsS2hLBM&feature=related

கலகலப்ரியா said...

இது இப்படியாக இருந்தது...
இது இப்படியாக இருக்கிறது...
இது இப்படியாக ஆகலாம் என்பதைச் சொல்லக் கூட முடியாது... சௌகர்யமாக உட்கார்ந்து கொண்டிருப்பது வசதியாகத்தான் இருக்கிறது...

என் டிஃபன் பாக்ஸிலிருக்கும் சாப்பாட்டை மற்றவன் பறித்துச் சாப்பிட்டால்... ஒன்று சண்டை வரக் கூடாதென்று பட்டினி கிடக்கலாம்... இல்லை என்னுடையது என்று சண்டை போடலாம்... அல்லது.. பேச முடிந்தால் ஓக்கே... உனக்கும் பசிக்குதா... அப்போ உக்காரு பாதி பாதி சாப்ட்டுக்கலாம்னு பேசித் தீர்த்துக்கலாம்...

பொத்திக்கிட்டே இருந்தா... கஷ்டம்..

சரவண வடிவேல்.வே said...

@கோ.வி கண்ணன்..

ஆமாம் நண்பா, நானும் நாகைதான்...

இப்பொழுது சென்னையில் :)

சரவண வடிவேல்.வே said...

@நாம் ஆதவன்...

அந்த புகைப்படம் உண்மை என்று என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.

மேலும் பஞ்சம் வந்த ஆண்டு 1870களில். அந்த ஆண்டில் இந்தியாவே பஞ்சத்தில் இருந்தது நாம் அனைவரும் அறிந்ததே...

நான் புதிய அணை கட்டுவதைப் பற்றியோ, அதை இடிப்பதைப் பற்றியோ இங்கு எந்த கருத்தும் வைக்கவில்லை. அந்த புகைப்படத்தை நாம் அனைவரும் விளம்பரப்படுத்துவது தேவையில்லாத ஒன்று என்றே சொல்லுகிறேன்..

வங்காள பஞ்சத்துக்கும் இதே புகைப்படம் தான் காட்டப்படுகிறது என்பதை இணையத்தில் தேடினால் உங்களுக்கும் தெரியவரும்....

சரவண வடிவேல்.வே said...

@கலகலப்ரியா

இரண்டு வீடியோவையும் பார்த்தேன்..


நான் கூட லிங்கைப் படித்தவுடன் அணைகளைப் பற்றி இன்னொரு குறும்படமா என்று முதலில் பயந்துவிட்டேன்..

உண்மையாகவே உட்கார்ந்து பேசி தீர்க்க வேண்டிய விசயம் இது.. இரு மாநில அரசுகளும் அமைதியாக இருப்பது ஆபத்தானதே....

:)

சரவண வடிவேல்.வே said...

@தெகா..

இந்த புகைப்படம் விழிப்புணர்வு தருவதை விட மன எழுச்சியைதான் அதிகம் தரும் என்று நினைக்கிறேன். அது கொஞ்சம் ஆபத்தானது... இன்னொரு 'டேம் 999' என்று சொல்லலாமா??? (திரைப்படத்தை நான் பார்த்தது இல்லை)...