Wednesday, December 10, 2008

காதல் கடிதம்

நான் இது வரை யாருக்கும் காதல் கடிதம் எழுதியது இல்லை. இது தான் என் முதல் காதல் கடிதம். கடிதத்தை எப்படி ஆரம்பிக்கவேண்டும் என்று கூட எனக்கு தெரியவில்லை. அன்புள்ள என்று ஆரம்பித்து இருக்கலாம், ஆனால் அப்படி ஆரம்பித்தால் அது அனைவராலும் எழுதப்பட கூடிய ஒரு சாதாரண கடிதம் ஆகியிருக்கும். முதல் வரியை படித்தவுடனே இது காதல் கடிதம் என்று தெரியவேண்டாமா??.. ஏன் உயிரே என்று ஆரம்பிக்கலாமா?? வேண்டாம் இது திரைப்பட பாடல் போல உள்ளது. சரி கடிதத்தை எப்படி தான் ஆரம்பிப்பது. அதை உன்னிடமே விட்டு விடுகிறேன். நீயே உனக்கு பிடித்தது போல் கடிதத்தை ஆரம்பித்துக்கொள். அதற்குமுன் இது ஒரு காதல் கடிதம் என்பதை மனதில் வைத்துக்கொள்.

நான் எல்லோரையும் போல காதல் கடிதத்தில் கவிதைகளை எழுதுவதாக இல்லை. அப்படி எழுதினால் நீ இந்த கடிதத்தை உடனே கிழித்துவிடுவாய் என்று எனக்கு தெரியும். உன்னை பற்றி நினைத்தவுடனே தமிழில் உள்ள வார்த்தைகள் எல்லாம் எனக்கு மறந்துவிடுகின்றது. இந்த கடித்தை எழுதும் போது தமிழ் வார்த்தைகளுக்கு கூட பஞ்சம் எற்படுகின்றது. இந்த கடிதத்தை நீ படிக்கும் போது என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் நீ நினைத்துக் கொள்ளலாம், அதற்கு உனக்கு உரிமை உண்டு. இந்த ஒன்றரை மாதத்தில் உனக்கு எத்தனையோ முறை தர நினைத்த இந்த கடிதம், இப்பொழுது தான் உயிர் பெற்று உன் கைக்கு வந்து இருக்கிறது.

உன்னிடம் கடந்த ஒன்றரை மாதங்களாக நான் வைத்து இருக்கும் காதலை கண்டிப்பாக இந்த இரண்டு பக்க கடிதத்தில் என்னால் சொல்ல முடியாது. உன்னை காதலிக்கிறேன் என்பது ஏன் இந்த ஒன்றரை மாதத்தில் ஒரு முறைக்கூட உனக்கு தெரியாமல் போனது. அல்லது தெரிந்தும் தெரியாதது போல இருக்கிறாயா??. எப்பொழுதும் மற்றவர்கள் கண்களை பார்த்தே பேசும் நான், உன் கண்களை நேரடியாக பார்க்க தைரியம் இல்லாமல் எத்தனை முறை தவித்து இருக்கிறேன் தெரியுமா??

நீ என்னை எப்பொழுதும் “ என்ன உளறுகிறாய்?, என்ன உளறுகிறாய்? ” என்று சொல்வாயே அது உண்மையாக தான் இருக்கிறது. ஒரு பக்கம் எழுதியும் காதல் கடிதத்தை என்னால் ஆரம்பிக்க கூட முடியவில்லை. சரி போதும் இத்துடன் கடிதத்தை முடித்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன், என்னடா ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் முடிக்க போகிறான் என்று பார்க்கிறாயா. நான் உன்னை காதலிக்கிறேன் என்பதை சொல்ல தானே இந்த கடிதம், அதான் சொல்லிவிட்டேனே. மேலும், உன்னுடைய பொன்னான நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. காதல் கடிதத்தை எப்படி முடிப்பது. நல்ல வாக்கியங்களை சேர்த்து கடிதத்தை ஆரம்பித்த உனக்கு முடிக்கவா தெரியாது?? நீயே உனக்கு பிடித்த வாக்கியங்களை சேர்த்து இந்த கடிதத்தை முடித்துக்கொள்.

இப்படிக்கு காதலுடன்,
அசோக்.


பின்குறிப்பு::
---------------

மேலே உள்ள கடிதத்தை அவளுடைய ஆபிஸ் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி விட்டு பதிலுக்காக அசோக் காத்துக்கொண்டு இருந்தான். அவளிடம் இருந்து வந்த பதில் “ அசோக், கடிதம் நன்றாக இருந்தது. யாருடா அந்த பெண் ???”. எல்லாம் சும்மா கற்பனை தான் என்று சொல்லி அசோக் சமாளித்துவிட்டான். அசோக் செய்த ஒரே தவறு கடிதத்தில் எங்கேயும் அவள் பெயரை சொல்லாதது தான்.

No comments: