Sunday, July 18, 2010

சத்தியமாக, இது ஒரு காதல் தோல்வியின் கதை

"எல்லாமே விளையாட்டு தான் அவளுக்கு.அதனால் தான் உன்னைப் பற்றியும் , என் காதல் பற்றியும் நான் சொல்லியதை ஒரு போதும் நம்பியதேயில்லை அவள். மிகவும் பிரயாசைப் பட்டு உன் பெயரை நான் உச்சரிக்கும் தருணம் தான் என் நடிப்பின் உச்சம் என்பாள்.அவளைப் போலவே இருப்பதால் தான் என்னவோ , உனக்கும் என் காதல் தெரிவதே இல்லையா ?" - ரெஜோ ("அம்மாவும் நீயும்" பதிவில்)


எனது இருபத்தி நான்கு வருட அரசியல் வரலாற்றில் இப்பொழுதுதான் ஒரு பெண்ணுக்கு ப்ரொபோஸ் செய்து இருக்கிறேன். உண்மையாகவே அந்த பெண்ணை மிகவும் தீவிரமாகவே காதலித்தேன். என் அம்மாவிடம் "நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன், அவளைதான் கல்யாணம் செய்வேன்" என்று சொல்லிய பின்தான், அவளிடமே சொன்னேன். ஆனால் அந்த பெண்ணோ, என்னைப் பற்றி தவறாக புரிந்துக்கொண்டாள். "மாதம் ஒரு பெண்ணை காதலிப்பவன் இவன்" என்று. அவளை சொல்லியும் குற்றம் இல்லை, பழகிய ஒரே மாதத்தில் காதலை சொன்னால், இப்படித்தான் எல்லா பெண்களும் நினைப்பார்கள்!!!.

இது'ல என்ன காமெடி என்றால், என் அம்மாவும், நான் காதலிப்பதை நம்பவே இல்லை "உனக்கு இதுவே வேலையா போச்சு, ஒவ்வொரு தடவை ஊருக்கு வரும்போதும் எப்படி என் கூட சண்டை போடலாம் என்று யோசிப்பியா?? " என்று கேட்டாள். அந்த பொண்ணும், இதே கேள்வியை பலமுறை என்னிடம் கேட்டு இருக்கிறாள்."டேய் அசோக், ஏன்டா எப்பப்பாரு என் கூட சண்டை போட்டுக்கிட்டே இருக்க??"

நான் எந்தளவு அவளை காதலித்தேன் என்று உங்களிடம் எனக்கு சொல்ல தெரியவில்லை. ஏற்கனவே பேசும் போது, எனக்கு வார்த்தைகளில் பஞ்சம் ஏற்படும், எனக்கு மட்டும் நன்றாக பேச தெரிந்து இருந்தால், எப்பொழுதோ அந்த பெண்ணிடம் காதலை சொல்லி இருப்பேன். எப்படி எப்படியோ பேசி, அந்த பெண்ணை சம்மதிக்க வைத்து இருக்கலாம். அவள் சொன்ன அந்த கடைசி வார்த்தை, இன்னும் என் பின்மண்டையில் கேட்டு கொண்டே இருக்கிறது "A Huge Thanks For Everything".

இந்த "Everything" என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறீர்களா??. போன வாரம் சத்தியம் திரையரங்கில் "களவாணி" படம் பார்க்கும் போது "Caramel Popcorn" இரண்டு பாக்கெட் சாப்பிட்டுவிட்டு, "என் தம்பிக்கும் ரொம்ப பிடிக்கும்" என்று சொல்லி இரண்டு பாக்கெட் பார்சல் வேறு எடுத்துக்கொண்டு போனாளே, அதுவாகக்கூட இருக்கலாம். ஒரு பாக்கெட்டின் விலை 80 ருபாய். கணக்கில் "ஒரு large Pepsi, மற்றும் இரண்டு Online டிக்கெட்" இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

என்ன "யாரு பணம்??" என்றா கேட்டீர்கள். இதுவரை எந்த பெண்கூடவும் சேர்ந்து திரைப்படம் பார்க்காத உங்களை நினைக்கும்போது பாவமாக இருக்கிறது. நீங்கள் எதாவது ஒரு பெண்கூட சேர்ந்து திரைப்படம் பார்த்து இருந்தால் கண்டிப்பாக இந்த கேள்வியை கேட்டு இருக்க மாட்டீர்கள். அந்த Everything என்ற வார்த்தைக்கு இன்னும் பல அர்த்தம் இருக்கிறது. ஆனால், நான் அவளை உண்மையாக காதலிக்கிறேன் என்ற ஒரே காரணத்தால், அவற்றை எல்லாம் சொல்ல முடியவில்லை. Chit Chat'ல் அவளுக்கு பிடித்த "Hot Chocolate Role" கணக்குகளை கேட்டால் நீங்கள் மயங்கி விடுவீர்கள். வேண்டாம், என் வாயில் இருந்து வார்த்தைகளை பிடுங்காதீர்கள். நான் அவளை, ஒவ்வொரு நொடியும் காதலிக்கிறேன்.(அவளுக்காக என்னால் எழுத முடிந்த அதிகபட்ச கவிதை இதுதான்)

"இதுக்கே இப்படி சலிச்சுக்கிறாயே, அவனவன் காதலிக்காக என்னனமோ செய்கிறான்" என்று சொல்பவர்கள், கொஞ்சம் நில்லுங்கள். அது காதலிப்பவர்களுக்கு,. அவள்தான் என்னை காதலிக்கவே இல்லை என்று சொல்லிவிட்டாளே. அவள்தான் என்னை ஒரு மனிதனாக கூட மதிக்கவில்லையே. அவள் மட்டும் என்னை காதலிக்கிறேன் என்று சொல்லியிருந்தாள், "அவளுக்கு தாஜ்மஹாலை வாங்கி கொடுத்து இருப்பேன்!!!!!!!!!!"

இந்தமுறை ஊருக்கு போகும் போது அம்மாவே கேட்டாள்,

"போன தடவை வந்தபோது, ஏதோ ஒரு பெண்னை கல்யாணம் செய்ய போறேன் சொன்ன.. என்னடா ஆச்சு ???" என்றாள். அவளை போலவே அம்மாவுக்கும் எல்லாவற்றிலும் கிண்டல்.

"அவள் வேற பையனை காதலிக்கிறாளாம்"

'அதுனால என்ன, இப்ப புதுசா ஒரு தனுஷ் படம் வந்துச்சுல, அது மாதிரி நீயும் லவ் பண்ணு" என்றாள்.

"அம்மா, ஏற்கனேவே பயங்கர Feeling'ல இருக்கேன், அமைதியா இரு மா"

"நீ ஒரு பெண்ணை லவ் பண்ணுகிறாய் என்பதே பொய்.. இதுல Feelings வேறயா???. பேசாம அமைதியா கொஞ்ச நாள் இரு, நானே அப்பாட்ட சொல்லி ஒரு நல்ல பெண்னை பார்க்க சொல்றேன்" என்றாள் என் அம்மாவுக்கே உரிய கோபம் மட்டும் கிண்டலுடன். இல்லை இல்லை, அவளுக்கும் உரிய கோபம் மட்டும் கிண்டலுடன்.

10 comments:

ஆறுமுகம் முருகேசன் said...

ம், நல்ல ரசனையா இருக்கு நண்பா.

சரவண வடிவேல் said...

நன்றி நண்பா. நானும் எழுத்து பிழைகளை குறைக்க எவ்வளவோ முயற்சிக்கிறேன்.. முடியல நண்பா!!!!!!!!!! :(

ரெஜோ said...

இது வெறும் புனைவாக மட்டுமே இருக்கக் கடவது ...

தனி காட்டு ராஜா said...

// இது ஒரு காதல் தோல்வியின் கதை//

காதலனின் தோல்வி கதை என்பது தானே சரி ...........[இவன் வேற என்று நினைகீரிகளா ?]

சரவண வடிவேல் said...

@ ரெஜோ,

இதன் மூலக்கதை எழுதியவருக்கே இந்த கேள்வி சேரும்.. ஆமென்,

சரவண வடிவேல் said...

@ ராஜா..

தல... நீங்களாவது எனக்காக கொஞ்சம் feel பண்ணுறீங்களே... ரொம்ப நன்றி..

anu said...

Hey even i din believe...
so sad.......

சரவண வடிவேல் said...

@anu,,,

கஷ்டப்பட்டு ஒரு பக்கம் எழுதியிருக்கேன். கொஞ்சமாவது நம்புங்க பா!!!!!!!

Subramania Athithan said...

"இந்த "Everything" என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறீர்களா??. போன வாரம் சத்தியம் திரையரங்கில் "களவாணி" படம் பார்க்கும் போது "Caramel Popcorn" இரண்டு பாக்கெட் சாப்பிட்டுவிட்டு, "என் தம்பிக்கும் ரொம்ப பிடிக்கும்" என்று சொல்லி இரண்டு பாக்கெட் பார்சல் வேறு எடுத்துக்கொண்டு போனாளே, அதுவாகக்கூட இருக்கலாம்" வழக்கமான சரவண நக்கலோ :) சூப்பரப்பு :)

Vilva said...

"en inamadaa nee!!". I have crossed a simillar one!

PS: directed from Rejo's blog.