உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும், நீங்களும் முன்னரே கேள்விப்பட்டிருப்பீர்கள்; "ஒருவன் தலையணைக்கும் அவன் கனவுகளுக்கும் சம்பந்தம் உள்ளது" என்பதை, "அழுக்கான தலையணைகள்" துர்க்கனவுகளை உருவாக்கும் என்பதை.
அவன் தன் அறையில் தான் உபயோகப்படுத்துவதற்காகவே மூன்று தலையணைகளை வைத்துள்ளான். அந்தத் தலையணைகளை உபயோகப்படுத்த வேறு யாரையும் இதுவரை அவன் அனுமதித்ததில்லை. அவனது நண்பன் ஒருவன், மூன்று நாள் தூக்கமில்லா பயணத்திற்குப் பிறகு அவனைப் பார்க்க வந்த ஓர் இரவில், நண்பன் உறங்குவதற்கு அவன் தன் தலையணைகளில் எதையுமே தரவில்லை. கடைசியில், அவனது நண்பன் தன் கைகளையே தலையணையாக உபயோகித்துத்தான் தூங்கினான்.
அவனுடைய மூன்று தலையணைகளும் மூன்று விதமான கனவுகளைத் தரக்கூடியவை. உங்களைப்போல்தான் அவனும் இதை முதலில் நம்பவில்லை; நூறு நாட்கள் சோதனைக்குப் பின்தான் அவன் இதை நம்பத் தொடங்கினான். தலையணைகளின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாகக் கனவுகளின் விதங்களும் அதிகமாகும் என்பதாலும், மேலும் இந்த மூன்று விதமான கனவுகளுக்கே அவன் அடிமையாகிவிட்டான் என்பதாலும், நான்காவதாக ஒரு தலையணை வாங்க முடிவு செய்தான். ஆனால், அந்த நாட்களில் வந்த கனவுகளில் எல்லாம், "நான்காவதாக வாங்கிய தலையணையில் உள்ள பஞ்சுகள் தனித்தனியாகப் பிரிந்து, பல கோடி எறும்புகளாக மாறி அவன் உடலை அரித்துக் கொல்வது போல் கனவு கண்டதால்", நான்காவது தலையணை வாங்கும் எண்ணத்தை அவன் முற்றிலுமாக உதிர்த்துவிட்டான்.
மூன்று விதமான தலையணைகள் தரும் மூன்று விதமான கனவுகளை அவன் சோதனை செய்த அந்த நூறு நாட்களில், ஒவ்வொரு நாளும் தூக்கம் கலைந்து எழுந்தவுடன், அன்றைக்கு அவன் கண்ட கனவினை நினைவில் கொண்டுவர முயற்சிப்பான். கனவுகள் நினைவுக்கு வந்தவுடன், அந்தக் கனவினை அந்தந்தத் தலையணைகளுக்கான டைரியில் எழுதிவிடுவான். இதற்காகவே மூன்று வண்ணங்களில் டைரிகள் வைத்திருந்தான். சிவப்பு, ஊதா, பச்சை என்ற மூன்று வண்ணங்களில் இருந்த மூன்று தலையணைகளுக்கு மூன்று விதமான டைரிகள்.
பல நேரங்களில் அந்தக் கனவுகள் உடனே நினைவுக்கு வராது; அன்றைய நாள் முழுவதும் அந்தக் கனவினைப் பற்றியே யோசித்துக்கொண்டிருப்பான். கடைசி வரை நினைவுக்கு வராத கனவுகளும் உண்டு. நாற்பத்தைந்து நாட்களில் முடிய வேண்டிய சோதனை இதன் காரணமாகவே நூறு நாட்கள் நீடித்தது. இப்படி நூறு நாட்களுக்கு அவன் செய்த சோதனைக்குப் பின்னரே, அவனுடைய மூன்று தலையணைகள் மூன்று விதமான கனவுகளைத் தருகின்றன என்பதை ஆழமாக நம்பத் தொடங்கினான்.
அதன்படி,
சிவப்பு நிறத் தலையணை — தற்கொலைக் கனவுகளைத் தரக்கூடியது ஊதா நிறத் தலையணை — கடவுளைப் பற்றிய கனவுகளைத் தரக்கூடியது பச்சை நிறத் தலையணை — அவன் கதைகளைப் பற்றிய கனவுகளைத் தரக்கூடியது
இனி, அவனுடைய தலையணைகளைப் பற்றியும் அவனது கனவுகளைப் பற்றியும் இங்கே பார்ப்போம்.
No comments:
Post a Comment