Thursday, April 19, 2012

கண்காணிப்பு கேமரா

கண்காணிப்பு கேமராக்களைப் பார்க்கும் போதேல்லாம் தேவையில்லாமல் பதற்றம் அடைகிறேன். எனக்கும் என் முகத்துக்கும் சம்மந்தம் இல்லாத ஒரு சிரிப்பை வரவழைக்கிறேன். ஒரு கையால் தலையை கோதுகிறேன். நான் கண்காணிப்பு கேமராவை பார்ததை வேறு யாராவது பார்த்தார்களா? என்று ஒருமுறை சுற்றி முற்றி பார்க்கிறேன். அதே இடத்தில் நிற்பதா அல்லது வேறு இடத்திற்கு சென்று விடுவதா என்று ஒரு முறை யோசிக்கிறேன்.



ஒரு கண்காணிப்பு கேமராவை பார்க்கும் போது உங்களுக்கு என்னவிதமான எண்ணங்கள் உதிக்கும் என்பது எனக்கு தெரியாது. ஒருவேளை அந்த கேமரா உங்களை எந்தவீதத்திலும் பாதிக்காமல் இருக்கலாம், அப்படி இருந்தால் நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டம் செய்தவர். நானும் உங்களை போல்  இருக்கதான் ஆசைப்படுகிறேன், ஆனால் முடியவில்லை. யாரோ ஒருவர் கேமராவில் நம்மை பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்பதை நினைக்கும் போதே, நெஞ்சு கொஞ்சம் அதிகமாக துடிக்க தொடங்கிவிடுகிறது.

கண்காணிப்பு கேமராவின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே போகிறது. கடைகள் என்றில்லாமல் இப்பொழுது தெருவுக்கு தெரு கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. நான் போகும் இடமெல்லாம், என்னைப் சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் வைக்கிறார்களோ? என்று எனக்கு ஒரு மாயை. எப்பொழுதுமே, என் ரகசியங்களை யாருக்கும் தெரியாமல் பாதுகாத்துக்கொண்டு இருக்கும் எனக்கு, இந்த கேமராக்கள் ஒரு பயத்தை உண்டு பண்ணுகின்றன. ரகசியங்களை பாதுகாப்பது என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். எனது விருப்பங்களை இந்த கேமராக்கள் நிராகரிக்கின்றன. ஒரு தனிமனித சுதந்திரத்தை இந்த கேமராக்கள் அழிக்கின்றன. சில நேரங்களில் என் வீட்டிற்கு உள்ளே கூட நான் கண்காணிக்கப்படுகிறேனோ என்ற அச்சம் தோன்றுகிறது.

யாருக்கு தெரியும், என் படுக்கையறையில் கூட கண்காணிப்பு கேமராக்கள் இருக்கலாம், "என் படுக்கையறையில் யாரோ ஒழிந்து இருக்கிறார்கள்" என்று மனுஷ்ய புத்திரன் எழுதியது போல்.

சமீபத்தில் நடந்த வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கி சூட்டில், அவர்களை எந்தவிதமான கேள்வியும் கேட்காமல் கொலை செய்தமைக்கு போலீஸ் சொல்லும் ஆதாரம், கண்காணிப்பு கேமராவில் அவன் முகம் பதிவானது என்பதுதான். ஒருவேளை அந்த நேரத்தில் நான் அந்த வங்கிக்கு சென்று கொஞ்சம் முழித்து இருந்தால், நானும் அந்த லிஸ்டில் சேர்ந்து இருப்பேனோ?? என்று பயமாக உள்ளது.

"இது எல்லாம் தேவையில்லாத பயம். இதற்கெல்லாம் பயந்தால் இப்படியே பயந்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்" என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆனால், கண்காணிப்பு கேமராக்களை பார்க்கும் போதேல்லாம் பதற்றம் அடையும் ஒருவனால் பின் வேறு எப்படி எழுத முடியும்.

3 comments:

...αηαη∂.... said...

நெஜமாவே நல்லா இருக்கு பாஸ்..

அருணா செல்வம் said...

எங்கிட்ட மட்டும் உண்மையை சொல்லிடு சரவணா....
இதுவரைக்கும் எத்தனை முறை திருடியிருக்கிறே... நீ கேமரா முன்னால சிரிச்சாலும உன் முழியைப் பார்த்தாலே சந்தேகமா இருக்குது.

நான் உன்னை காப்பாத்துரேன்பா...

சசிகலா said...

நல்ல பதிவு .