Thursday, October 29, 2009

என்னை துரத்திய வாசனை

எனக்கு எந்த நாளில் இருந்து என்று சரியாக ஞாபகம் இல்லை. சூரியன் அஸ்தமிக்கும் ஒரு மாலை பொழுதில், அவள் எனது அருகில் நின்று பேசிக்கொண்டு இருக்கும் பொழுது முதல்முதலாக அவளிடம் இருந்து அந்த வாசனைவந்ததாக ஞாபகம். நன்றாக ஆறிய பாலையும் ரோஜாவையும் சேர்த்து நுகரும் பொழுது ஒரு வாசனை வருமே, அப்படி ஒரு வாசனை. திடீர் என்று அந்த வாசனை வந்ததால், நான் அவளிடம் அதைப்பற்றி ஒன்றும் கேட்கவில்லை. அவள் அந்த இடத்தைவிட்டு விலகி சென்றவுடன், அந்த வாசனையும் விலகி சென்றது.

அடுத்த இரண்டு நாட்கள் அவள் அருகில் வரும்பொழுது எல்லாம் அந்த வாசனையும் வந்தது. ஒவ்வொரு முறையும் அந்த வாசனை தீவிரம் அடைந்து வருவது போலவே எனக்கு தோன்றியது. மூன்றாவது நாள் அவளிடமே கேட்டுவிட்டேன், "என்ன perfume use பண்ணுகிறாய் ?" என்று. நான் எதிர்பார்த்ததை போல, அவளிடம் இருந்து ஒரு முறைப்பு மட்டும் பதிலாக வந்தது. அருண் எப்பொழுதும் சொல்வான், இந்த உலகத்தில் இரண்டு வகையான பெண்கள் மட்டுமே உண்டு, கண்ணகி போல் வாழாதவர்கள் - கண்ணகி போல நடிப்பவர்கள். இவள் இரண்டாம் வகையை சேர்ந்தவள்.

அடுத்தநாள், நான் நரேன் கேபினில் அமர்ந்து அவனிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, நரேனிடம் சந்தேகம் கேட்க அவள் அங்கே வந்தாள். முந்தைய நாளை விட இன்று வாசனை கொஞ்சம் அதிகமாகவே வந்தது. நான் நரேனிடம் மெதுவாக " உனக்கு எதாவது வாசனை வருகிறதா ?" என்றேன்.

"இன்னைக்கு, தம் அடித்த பின் Halls போட மறந்துவிட்டோம்" என்று சொல்லிவிட்டு அவளிடம் பேசுவதில் தீவிரமானான்.

இப்படியே இரண்டு வாரங்கள் சென்றன. எனக்கு அந்த வாசனை சந்தேகம் மட்டும் போகவே இல்லை. இப்பொழுது எல்லாம், நூறு அடிக்கு அப்பால் அவள் கடந்து சென்றால் கூட, அவள்தான் நடந்து செல்கிறாள் என்று வாசனையை வைத்துசொல்ல முடிந்தது.

மீண்டும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளிடமே கேட்டு விடுவது என்று முடிவு செய்தேன். இந்தமுறை " என்ன சோப் use பண்ணுகிறாய் ?" என்று சற்று வித்தியாசமாக கேட்டேன்.

"Johnson Baby Soap" என்று முறைத்துக்கொண்டே சொன்னாள்.

இதுவரை அவள் பொய் சொல்லி நான் பார்த்தது இல்லை. எனவே அதுதான் உண்மை என்று முடிவு செயது, அடுத்தநாள் நானும் Johnson Baby Soap'ல் குளித்து பார்த்தேன். அதில் ஒருவிதமான பால் வாசனை வந்தாலும், அவளிடம் இருந்த வாசனைக்கும் இதற்க்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருந்தன.

அறை நண்பன் அருணிடம் இதை பற்றி கூறினேன். " இந்த உலகத்தில் எல்லா மனிதர்களுக்கும் தனி தனியா வாசனை இருக்கு டா " என்றான்.

"இல்லை எனக்கு அவளிடம் இருந்து மட்டும்தான் வாசனை வருகிறது" என்றேன். அருண் என்னை ஒருமாதிரி பார்த்தான்.

சில நாட்களில், அவள் இல்லாத போதும் அந்த வாசனை என்னை தொடர்வது போலவே இருந்தது. என் அறைகளில், என் தலையனைகளில் கூட அந்த வாசனை வர தொடங்கியது. அவள் அருகில் இருக்கும் நேரம் மட்டும் வாசனை சற்று அதிகமாக இருக்கும்.

இப்படியே சென்றால், எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் என்று தோன்றவே ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊரான நாகபட்டினத்திற்கு சென்றேன்.

ஊரின் கடற்கரை மணலை பார்த்தவுடனே, என்னை சுற்றி இருந்த வாசனை முற்றிலும் மறைந்தது போல தோன்றியது. ஆனால் வீட்டில் நுழைந்தவுடனே மீண்டும் அந்த வாசனை என்னை வந்து அப்பிக்கொண்டது.

வீட்டில் அம்மாவும் அக்காவும் " ஏன் டா, பேய் அடிச்சமாதிரி வந்துருக்க?" என்று கேள்விகளால் துளைத்து எடுத்தனர். எப்படி அவர்களிடம் சொல்வது " என்னை ஒரு வாசனை துரத்திக்கொண்டு வருகிறது" என்று.

அன்று மாலை அக்கா அறையில் அமர்ந்து அக்காவிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அப்பொழுது Ponds Powder அருகில் இருந்த ஒரு வெள்ளை நிற பாட்டில் என் கண்ணில்பட்டது. எதோ ஒரு பொறி தட்ட, அந்த பாட்டிலை எடுத்து முகர்ந்து பார்த்தேன். அதே வாசனை, என்னை இத்தனை நாட்களாக துரத்திக்கொண்டு இருந்த அதே பெண்ணின் வாசனை. அதில் "Palmolvi Milk Moisturizers Cream" என்று எழுதியிருந்தது.

கடைசியில் வாசனையை கண்டுபிடித்துவிட்ட சந்தோஷத்தில், அக்காவிடம் " இதை நீயும் போட ஆரம்பிச்சிட்டியா ?" என்றேன்.

அக்கா " இரண்டு வருடங்களாக Use பண்ணிகிட்டு இருக்கேன் " என்றாள்.

இரண்டு வருடங்களாக இல்லாமல், என் இப்பொழுதும் மட்டும் இந்த வாசனை புதிதாக தெரிகிறது என்று யோசிக்க அரம்பித்த என்னிடம் " உனக்கு எதோ ஆயிடுச்சு" என்று அக்கா சொல்லிவிட்டு போனாள்.

Saturday, October 10, 2009

உண்மையை சொல்

கடவுள் என் முன்னால் நின்றுக்கொண்டு இருந்தான்.

"உண்மையை சொல், நீ யார்?" என்றான்.

சாதித்து விட்ட மகிழ்ச்சியில், அவனை பார்த்து ஏளனமாக சிரித்துக்கொண்டு இருந்தேன்.

"புலியை படைத்து பயமுறுத்துவேன்" என்றான்.

"புலி இனத்தை அழித்தவர்கள் நாங்கள்" என்றேன்.

கொதிக்கும் எண்ணெய் கொப்பரையை காட்டி பயம் காட்டினான்."சென்னையில் வெயில் இதோடு அதிகம்" என்றேன் சிரித்துக்கொண்டே. என் சிரிப்பு மேலும் அவனுக்கு கோபத்தை எற்படுத்தியது.

என்னிடம் இருந்து உண்மையை வரவழைக்க அவனும் பல வழிகளை கையாண்டான். நான் அவனை பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தேன்.

கடைசியில் ஒரு மனிதனை உருவாக்கி என் கண் முன்னே நிறுத்தினான்.

நான் சகமனிதனை பார்த்த பயத்தில் "நான்தான் இந்த உலகத்தின் கடைசி மனிதன்" என்ற உண்மையை உரக்கக் கத்தினேன்.

Monday, September 28, 2009

காற்று ஒரே இடத்தில் நிற்காது

என் முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது, எனக்கே வெறுப்பாக இருந்தது. அறையில் இப்பொழுது யாருமே இல்லை, இந்த தனிமை என்னை மிகவும் பாதித்தது. செல்வா,அருண்,சசி,நரேன் எல்லாரும் எங்கே போனார்கள்??. ஒரு புதிய திரைப்படத்திற்க்கு போக போவதாக நேற்று செல்வா சொன்னது நினைவில் வந்தது. பேசாமல் நானும் சென்று இருக்கலாம். "தீடிர் என்று தற்கொலை செய்துக்கொள்ளலாமா??" என்ற எண்ணம் வந்தது. செல்போன் ஒலித்துக்கொண்டே இருக்கிறது, நான் எடுக்கவில்லை. கண்டிப்பாக அது அவள்தான். இப்பொழுது எனக்குள் என்ன நடந்துக்கொண்டுயிருக்கிறது என்று எனக்கே தெரியவில்லை.

இன்னும் சிறிது நேரம் இங்கு இருந்தால், கண்டிப்பாக தற்கொலை செய்துக்கொள்வேன் என்று தோன்றியது. அறையை பூட்டிவிட்டு வெளியில் வந்தேன். இந்த இரவு நேரத்தில் எங்கே போவது. அருகில் இருக்கும் பூங்கா நினைவில் வந்தது. நானும் நரேனும் ஒரு ஆறு மாதங்கள் முன்னால் இதே பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தது ஞாபகம் வருகிறது. வசந்தமான நாட்கள் அவை.

பூங்கா பூட்டியிருந்தது. ஒரு வாட்ச்மேன் மட்டும் வெளியில் தூங்கிக்கொண்டு இருந்தான். மீண்டும் அறைக்கே திரும்ப எண்ணி, பின் ஏதோ ஒரு தைரியத்தில் பூங்கா சுவர் ஏறி உள்ளே குதித்தேன். நானும் நரேனும் அமர்ந்து இருந்த அதே பெஞ்சில் அமர்ந்தேன்.

எண்ணங்கள் எங்கெங்கோ அலைந்துக்கொண்டு இருந்தது. "சாய்ந்துக்கொள்ள தோள்கள் இல்லாத மனிதன் பைத்தியமாகிறான்" என்ன உண்மையான வரிகள் இவை. நான் சாய்ந்துக்கொள்ள தோள்கள் பல உள்ளன், ஆனால் எனக்குத்தான் சாய்ந்துக்கொள்ள தெரியவில்லை.

எனக்கு எதிரே ஒரு செடி ஆடிக்கொண்டு இருந்தது. என்ன செடி என்று பெயர் சரியாக தெரியவில்லை. அந்த செடி என்னிடம் பேசுவது போல இருந்தது. இல்லை இல்லை, அந்த செடி என்னிடம் தான் பேசுகிறது. அந்த பச்சை இழைகள் என்னை நோக்கி திரும்புகின்றன். "நான் உன்னிடம் பேசவில்லை, காற்றுடன் பேசிக்கொண்டு இருக்கிறேன்" என்றது அந்த செடி.

"காற்றுக்கு பேச தெரியுமா??" என்றேன்.

"ஏன், செடிகள் உன்னிடம் பேசும் பொழுது, காற்று எங்களிடம் பேசக்கூடாதா??" என்றது அந்த செடி.

"உன் பெயர் என்ன??"

"உன்னைபோல் மனிதர்கள்தான் தங்களுக்குள் பெயர்வைத்து தங்களை பிரித்துக்கொள்வார்கள். உங்கள் பிரிவினையே இந்த பெயர்களில் இருந்துதான் அரம்பிக்கிறது." என்றது.

சிறிது நேரம் செடி அமைதியாக இருந்தது.

"என்ன, மாநாட்டில் பேசுவது போல் ஆரம்பித்த உன் பேச்சை உடனே நிறுத்துவிட்டாய்" என்றேன்.

"நான் உன் அமைதியை கெடுப்பதாக இந்த காற்று சொல்கிறது"

"அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் காற்றின் பேச்சை என்னால் கேட்க முடியவில்லையே"

"அதற்க்கு நீ செடியாக மாற வேண்டும்"

உடல் எங்கும் ஒரு குளிர்ச்சி பரவியது. உடல் எங்கும் பச்சைவண்ணாம் அப்பிக்கொண்டது. நரம்புகள் வேர்களை போல வளர்ந்து மண்ணை பற்றிக்கொண்டது. நான் இப்பொழுது செடியாக மாறிவிட்டேன்.

"நான் செடியாக மாறிவிட்டேன்" என்று உரக்க கட்டினேன்.

"என் கத்துகிறாய், அருகில் காவல்காரன் தூங்கிக்கொண்டுயிருக்கிறான்" என்று காற்று என் காது அருகில் சொல்லிசென்றது. அந்த குரலில் அப்படி ஒரு இனிமை.

"இப்பொழுது நீ காற்றின் குரலை கேட்க முடிகிறதா??" என்றது அந்த செடி.

"ஆம், மிகவும் இனிமையான குரல். அந்த காற்றை கூப்பிடு, மீண்டும் பேசலாம்"

"அந்த காற்று சென்றுவிட்டது. நம்மால் மீண்டும் அதோடு பேச முடியாது."

"அது பறந்துவிட்டது, என்னிடம் பேசுங்கள்" என்றது இப்பொழுது வந்த காற்று. ஆனால் அந்த பழைய காற்றின் இனிமையான குரல் இதனிடம் இல்லை.

"அந்த காற்றின் குரல் இனிமையாக இருந்தது" என்றேன்.

"ஆம், இனிமையாகத்தான் இருந்தது. நானும் இப்படி ஒரு குரலை இதுவரை கேட்டதுயில்லை. நீ வரும் வரை அதனிடம்தான் பேசிக்கொண்டுயிருந்தேன். உன் முகம் வாடிப்போய் இருப்பதாக அது என்னிடம் கூறியது" என்று செடி என்னை பார்ர்த்து பேசியது.

"அப்படி என்றால், அந்த காற்றை கூப்பிடு நாம் பேசுவோம்" என்றேன்.

"காற்று எப்பொழுதும் ஒரே இடத்தில் நிற்காது. அது பறந்துக்கொண்டே இருக்கும். அதுதான் அதன் சுபாவம். நம்முடைய நலனுக்காக அதை தடுத்து நிறுத்த நினைப்பது தவறு".

திடுக்கிட்டு எழுந்தேன். காலை வெயில் ஜன்னல் வழியாக அறைக்குள் நுழைந்துக்கொண்டு இருந்தது. அருகில் நரேன், செல்வா தூங்கிக்கொண்டு இருந்தார்கள்.

அருகில் இருந்த செல்போனை எடுத்தேன். அவளிடம் இருந்து "GM" என்று ஒரு SMS வந்துயிருந்தது.

ஆகவே கேள்வி கேளுங்கள்

ஏதாவது கேளுங்கள்
சிறுபிள்ளைத்தனமாக
அல்லது அறிவாழித்தனமாக
ஏதாவது கேளுங்கள்

கேள்வி கேட்காதவன் முட்டாளாகிறான்
கேள்வி கேட்காதவன் அடிமையாகிறான்
கேள்வி கேட்காதவன் ஏமாளியாகிறான்
ஆகவே கேள்வி கேளுங்கள்

உங்கள் இருப்பை
இந்த உலகிற்க்கு காட்டுவதற்க்கு
உங்கள் கேள்வி துணையிருக்கும்
ஆகவே கேள்வி கேளுங்கள்.

உங்களுக்கு பதில் தெரிந்தாலும் கேளுங்கள்
அது இன்னொருவனுக்கு
கேள்வி கேட்க ஊன்றுகோலாய்
இருக்கலாம்

எல்லா கேள்விகளுக்கும்
பதில் இருக்கிறது
ஆகவே கேள்வி கேளுங்கள்

Monday, September 7, 2009

பேசத் தெரியவில்லை

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லை

தந்தையிடம் மகன் என்ற உரிமையுடன்
பேசத் தெரியவில்லை

அக்காவிடம் தம்பி என்ற பாசத்தோடு
பேசத் தெரியவில்லை

நண்பனிடம் நட்போடும், காதலியிடம் காதலோடும்
தோழியிடம் தோழமையோடும் பேசத் தெரியவில்லை

தெரியாதவர்களிடம் வழிப்போக்கனைப் போலவும்,
நன்கு அறிந்தவர்களிடம்
கடைசி சந்திப்பை நினைவு கூர்ந்தும்
பேசத் தெரியவில்லை

வெற்றி பெற்றவனை பாராட்டியும்
தோல்ல்வி அடைந்தவனுக்கு ஊக்கம் அளித்தும்
அழுகின்றவனை சந்தோஷ படுத்தியும்
பேசத் தெரியவில்லை

முதலாளியிடம் அடிமையை போலவும்,
அடிமையிடம் முதலாளி போலவும்
பேசத் தெரியவில்லை

எனக்கு யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லை

ஆம், இவை எல்லாம் நீங்கள் என்னிடம் சொன்னது.

Friday, August 14, 2009

எனக்கு பிடிக்காத நாவல்

சமீபத்தில் நண்பர் ஒருவர் தன் மகளை இவளை போல் வளர்க்க வேண்டும் என்று ஒரு பெண்ணை சுட்டிக்காட்டினார், எனக்கு உடனே சுஜாதாவின் "பிரிவோம் சந்திப்போம்" நாவல்தான் நினைவில் வந்தது. அதன் முன்னுரையில் இப்படிவரும் " இந்த நாவல் தொடர்கதையாக வந்த சமயத்தில், பல அப்பாக்கள் தன் குழந்தைக்கு மதுமிதா என்று பெயர்வைத்தார்கள். தன் மகளை மதுமிதா போல் வளர்க்க ஆசைபட்டார்கள்".

"பிரிவோம் சந்திப்போம்" நாவலை படித்து இரண்டு வருடங்கள் மேல் இருக்கும். பலருக்கு பிடித்த புத்தகம் நமக்கு பிடிக்காமல் போகலாம். அப்படி எனக்கு சிறிதும் பிடிக்காத நாவல் பிரிவோம் சந்திப்போம். காரணம் எனக்கு சரியாக சொல்ல தெரியவில்லை. மதுமிதாவின் முதிர்ச்சியில்லா கதாபாத்திரம் எனக்கு ஒருவிதமான வெறுப்பைதான் உண்டுபண்ணியது. ரகுபதி, கோவிந்தராஜ், ரத்னா போன்ற கதாபத்திரங்களை விட மதுமிதாவிற்கு முன்னுரையில் கூடுத்த முக்கியத்துவம்தான், எனக்கு இந்த நாவல் பிடிக்காமல் போனதற்க்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.

நேற்று "பிரிவோம் சந்திப்போம்" நாவலை தேடி கண்டுபிடித்து மிண்டும் படிக்க தொடங்கினேன். இந்தமுறை முன்னுரையை படிக்கவில்லை. இப்பொழுதும் மதுமிதா கதாபாத்திரம் எனக்கு வெறுப்பைதான் உண்டு பண்ணியது. முழுவதும் படித்த பிறகு மதுமிதாவைவிட ரகுபதியை நினைக்கும் போதுதான் பாவமாய் இருந்தது.

யாருக்கு தெரியும் இன்னும் சில வருடங்களுக்கு பிறகு, மிண்டும் இந்த நாவலை படிக்கும்போது எனக்கு மதுமிதா கதாபத்திரம் பிடித்துபோகலாம். என் குழந்தைக்கு மதுமிதா என்றுகூட பெயர்வைக்கலாம்!!!!

Thursday, August 13, 2009

வத்ஸலா

எனக்கு அவளை பிடித்து இருக்கிறது. மூன்றாவது கேபினில் அமர்ந்து இருக்கும் குமார் சொல்கிறான் "அவள் character சரியில்லையாம்". ஆமாம் இவன் பெரிய உத்தமன் மற்றவர்களை பற்றி பேசவந்துவிட்டான். குமார் பற்றி என்னிடம் நூறு கதைகள் இருக்கிறது. அத்தனையும் உண்மை கதைகள். சாருவே இவனை பார்த்துதான் "ராஸ லீலா" எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன்.


இது அவளை பற்றிய கதை, ஆகவே குமாருக்கு இந்த intro போதும். எனக்கு அவளை பிடிக்க பல காரணங்கள் இருக்கின்றன. முதலில் அவள் பெயர். ஓ சாரி, இன்னும் அவள் பெயரை சொல்லவில்லை. பெயர் வத்ஸலா. பெயரை உச்சரிக்கும் போது "வ-த்-ஸலா" என்றுதான் உச்சரிக்க வேண்டும். இது அவளே என்னிடம் சொன்னது. ஒருமுறை வத்ஸலா பற்றி அருணிடம் சொன்னபோது, "அது என்னடா பெயர் வத்தலா?? " என்றான் அருண். இதுவரை வத்ஸலாவை இவன் நேரில் பார்த்தது இல்லை, பார்த்து இருந்தால் இப்படி வத்தலா என்று கேட்டு இருக்கமாட்டான்.


இரண்டாவதாக பிடித்தது அவள் அழகு.சும்மா கும்கானு இருப்பாள். அது என்ன கும்கா என்கிறீர்களா?? ஒரு பெண்ணை பார்த்தவுடன் மனசுல ஒரு feelings வந்துச்சுன்னா, அது கும்கா figure என்று அர்த்தம். இந்த வார்த்தையை எனக்கு முதலில் அறிமுகம் செய்தது நரேன். அவன் வீடு இருப்பது ஸ்ரீ-நகர் காலணியில். இது சைதாப்பேட்டை கோர்ட் பின்புறம் உள்ளது. மிகவும் அமைதியான, ரம்மியமான் ஏரியா. அண்ணநகர், அடையாறு எல்லாம் தோற்றுவிடும்.


அடுத்து வத்ஸலாவிடம் எனக்கு பிடித்தது. இதை சொல்வதற்க்கு முன்னால் என்னை பற்றி ஒரு உண்மையை உங்களிடம் சொல்லவேண்டும். மற்றவர்கள் எதாவது சாதனை செய்தால், என் நம்மால் அதே சாதனையை செய்யமுடியாதா?? என்ற எண்ணம்தான் எனக்குவரும். நானும் செய்ய துணிந்து, அது முடியாமல் போகும் போது எனக்கே என் மீது கோபமாகவரும். inferiority complex என்பார்களே அது எனக்கு நிறையவே உண்டு. அப்படிபட்ட என்னிடம், என்னைப்பற்றி புகழ்ந்து பேசினால் எப்படியிருக்கும். இது என்மீது எனக்கே எரிச்சலைத்தான் உண்டு பண்ணியது. என்னை புகழ்ந்து பேசும் கூட்டம் என்னை எப்பொழுதும் சுற்றிக்கொண்டே இருக்கிறது. "நீங்கள் புகழும் அளவுக்கு நான் எதுவும் செய்யவில்லை" என்று சொன்னாலும் யாரும் கேட்பதாக இல்லை. உனக்கு தன்னடக்கம் அதிகம் என்று அதற்க்கும் புகழ்ச்சி. ஆனால் வத்ஸலா இதுவரை ஒருமுறைக்கூட என்னை புகழ்ந்து பேசியது இல்லை. நான் அவளிடம் பாராட்டை பேருவதற்க்கு எத்தனையோ வழிகளை கையாண்டேன். ஆனால் அனைத்திலும் தோல்விதான். இந்த தோல்வி எனக்கு மிகவும் பிடித்துஇருந்தது. "நான் புதுசா Blog update செய்து இருக்கேன், படிச்சு பாரேன்" என்றேன். அதற்க்கு வத்ஸலா சொன்ன பதில் " போடா நீயும், உன் Blog'ம்" என்றாள்.


ஒரு கையில் காபியும், மறுகையில் செல்போனையும் வைத்துக்கொண்டு பேசும் அழகு, "போடா பக்கி" என்று திட்டுவது, ஒரு விரலால் தலைமுடியை கோடும் ஸ்டைல், இரவு ஒருமணிக்கு போன் செய்து போனை எடுத்தவுடம் " இன்னும் தூங்கலையா" என்று கேட்கும் குறும்பு, என்று எனக்கு அவளிடம் பிடித்தவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.


இப்பொழுது வத்ஸலாவின் நடவடிக்கை சரியில்லை என்று குமாரை போல் பலர் என்னிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். எனக்கு அது பற்றி கவலையில்லை. மற்றவர்கள் எது சொன்னாலும் பரவாயில்லை, தனக்கு சரி என்று தெரிவதை செய்யும் வத்ஸலாவை எனக்கு இன்னும் அதிகமாக பிடித்துவிட்டது

When they kept on questioning him, he straightened up and said to them, "If any one of you is without sin, let him be the first to throw a stone at her." - John 8:7

Wednesday, August 12, 2009

காதல் தோல்வி

இனி நான் என்
மூன்றாவது காதலியை தேட வேண்டும்.

முதல் காதலியை அழகில்லை என்றார்கள்
இரண்டாவது காதலியை அறிவில்லை என்றார்கள்

அழகோடும் அறிவோடும்
மூன்றாவது காதலியை தேட வேண்டும்.

அவளுக்கு கறுப்பு உடைகள்
பிடிக்காமல் போகலாம்

இனி என் நடை உடை ரசனைகளை
மாற்றிக்கொள்ள வேண்டும்

எனனை யாரும் இனி
தொந்தரவு செய்ய வேண்டாம்

எனக்கு வேலை இருக்கிறது, என்
மூன்றாவது காதலியை தேட வேண்டும்.

Saturday, July 25, 2009

என் கதைகள்

என் கதைகள், உங்களுக்கு

மற்றவர்களின் ரகசியங்களை அறிந்துகொள்ள
உதவும் ஒரு டைரி.

என்னை பார்த்து சிரிப்பதற்கான
ஒரு கேலிப்பொருள்.

உண்மைக்கும் பொய்க்கும் நடுவில் இருக்கும்
ஒர் பிம்பம்.

கையாலாகதவனின் அர்த்தமில்லா
எண்ண கிறுக்கல்கள்.

எனது எழுத்துப்பிழைகளை கண்டுபிடிக்கும்
சதுரங்க விளையாட்டு.

என் கதைகள், எனக்கு மட்டும்
"தினமும் நான் உயிர் வாழ
உதவும் ஒர் டானிக்".

Thursday, July 16, 2009

பைத்தியங்களின் உரையாடல்

"டேய், ஏன்டா அவனுக்கு பத்து ரூபாய் போட்ட??"..

"பாவம்டா, கண்ணு தெரியாதவன். காலையிலயிருந்து இரவுவரை சிக்னல்ல பிச்சை கேட்குறான்"..

"நீ கொடுத்த பத்து ரூபாய் அவனுக்கு போகும்னு கீறியா ??.. கண்டிப்பாக போகாது. அந்த கண்ணு தெரியாதவனை அழைத்துக்கிட்டு போறானே அவனுக்கும், வேன் டிரைவருக்கும்தான் போகும்".

"ஏன்டா, இந்த சின்ன Matter'க்கு இந்தளவு emotion ஆகுற??"..

"எது சின்னவிசயம், அந்த கண்ணு தெரியாதவனை வச்சு இவர்கள் வியாபாரம் பண்ணுறாங்க. இவர்களை ரோட்டுல நிக்கவச்சு அடிக்கனும்"..

"நல்லா நிக்கவச்சு அடி, யாரு வேண்டாம்னு சொன்னா ??"...

"அது என்னால் முடியலயே ??"...

"அப்ப சும்மா வேடிக்கை பாரு"

"அதுவும் முடியலயே"

"டேய், இப்ப என்னதான் உன் பிரச்சனை ??"..

"தெரியலடா, இப்பலாம் இந்த ஊரே எனக்கு பிடிக்கலடா, எதை பார்த்தாலும் தப்பாவே தோணுது, எதை பார்த்தாலும் வெருப்பா இருக்கு. பார்க்கிறவன் எல்லாருடைய கன்னத்துலயும் பளார்னு அறையனும்னு தோணுது. A.C காருல ஜாலியா போறவன், Pizza'வை 500 ரூபாய்க்கு சாப்பிட்டு ரோட்டோரம் கடையில் பத்து ரூபாய் பொருளை 5 ரூபாய்க்கு கேட்கிறவன், இரண்டு ஆயிரம் ரூபாய் Jean போட்டுக்கிட்டு கம்யுனிசம் பற்றி பேசுறவன், சொந்த ஊரைவிட்டு இங்கவந்து வேலைக்கு அலைகிறவன், இப்படி எவனை பார்த்தாலும் அடிக்கனும் தோணுது"..

"டேய், 'கற்றது தமிழ்' ஜீவா மாதிரி பேசுற??"'..

"எனக்கு என்ன பிரச்சனைனு, எனக்கே தெரியலடா. பேசாமா செத்து போயிடலாம்னு தோணுது"

"நீ Serious'தான் பேசுறியா, இல்லை Comedy'க்கு சொல்றியா??"..

"இப்படிதான் நான் எது பேசினாலும், எல்லாரும் அதை Comedy'னு சொல்றாங்க !!""..

"சரி வா, நாம எதாவது நல்ல psychologist பார்க்கலாம் ??"..

"அதுலாம் தேவையில்லடா, நீ ஒரு Officer's Choice Whisky வாங்கிதந்தா எல்லாம் சரியாயிடும். 10 Downing Pub'க்கு போலாமா??"...

"அடப்பாவி, இன்னைக்கு நீ Build-up தரும்போதே கொஞ்சம் சந்தேகபட்டேன். சரி வா போலாம் ".