Sunday, December 25, 2011

கவிதை எனும் கிறுக்கல்கள் சில

1)

தலைப்பு: காதல் கவிதை

அன்புள்ள காதலிக்கு

உனக்கு நான் எழுதும்
முப்பத்தி நான்காவது
காதல் கவிதை இது.

மொத்தத்தில்
நான் எழுதும்
எம்பத்தி ஒன்பதாவது
காதல் கவிதையும் இதுவே.

வழக்கம் போலவே இந்த கவிதையும்
என் வீட்டு குப்பை தொட்டியை மட்டுமே
அலங்கரிக்கப்போகிறது.

உன் காதலிக்கான ஒரு பூவை
வாங்குவதற்கு,
ஒருவனின் உதவி உனக்கு தேவையெற்றால்
அந்த காதலை தூக்கி எறி என்றான்
எனக்கு பிடித்த கவிஞன் ஒருவன்.

உன் காதலை சொல்வதற்கு
உனக்கு தைரியமில்லை என்றால்,
அந்த காதலை தூக்கி ஏறி என்கிறேன் நான்.

மன்னிக்கவும், இதன் தலைப்பு
இப்படிதான் இருந்திருக்கவேண்டும்.

காதல் தோல்வி.
$$$$

2)
என் ப்ரியத்திற்குரிய நண்பனுக்கு

நீயும் உன் காதலியும்
ரோஜா பூக்களை தூவுவதில்
எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
ஆனால்,

அதற்கு என் கல்லறைதானா கிடைத்தது??

$$$

3)
நான் எழுதும் காதல் கவிதையில்
எழுத்துப்பிழையும் இலக்கணப்பிழையும்
இருப்பதாக சிலர் சொல்கிறார்கள்.

பாவம்,
அவர்களுக்கு எப்படி தெரியும்
உன்னை காதலித்த பின்
என் வாழ்க்கையே பிழையான கதை.

$$$

4)
இப்பொழுதாவது புரிந்துகொள்ளுங்கள்
என்னால் காதல் கவிதைகள்
எழுத முடியாது என்பதை

$$$

5)
காதல் கவிதை எழுதுவதற்காக
ஒரு பெண்னைக் காதலிக்க தொடங்கினேன்.

இதோ என் கவிதையின்
முதல் வரி கிடைத்துவிட்டது.
கொஞ்ச நேரம் பொறுத்துக்கொள்ளுங்கள்

அந்த பெண்னைக் காதலித்த பின்
என் கவிதையை தொடர்கிறேன்

$$$

6)
மீண்டும் என்னை
காதல் கவிதைகள் எழுத சொல்லாதீர்கள்.

அவை என் கைகளை நடுங்க செய்கின்றன,
கண்களில் கண்ணீர் உண்டாக்குகிறது,
நரம்புகளைக் கட்டி போடுகிறது.

எல்லாவற்றையும் விட
சில நேரங்களில்
சாம்பல் நிற பூணை ஒன்றை நினைவுப்படுத்துகிறது.
$$$

7)
இரண்டு முறை காதலித்து,
மூன்று முறை கைவிடப்பட்டு,
ஒருமுறை தற்கொலைக்கு முயற்சி செய்த
எல்லோராலும்
இதைப்போன்ற பைத்தியக்கார கிறுக்கல்களை
எழுதிவிட முடியும்.

இப்பொழுது புரிந்திருக்கும்,
இவற்றை நான் யாரிடமிருந்து திருடினேன் என்று.

Friday, December 23, 2011

சென்னை சர்வதேச திரைப்பட விழா

ஒரு வழியாக சென்னை சர்வதேச திரைப்பட விழா முடிந்துவிட்டது. மொத்தம் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டதாக சொல்கிறார்கள். அந்த நூற்றி ஐம்பது திரைப்படங்களில் நான் ஒரு பதினைந்து திரைப்படங்களாவது பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

நான் பார்த்த திரைப்படங்களின் பெயர்களே மறந்துவிட்ட நிலையில், அந்த திரைப்படங்களை வகைப்படுத்தி இங்கே எழுதுவது என்பது முடியாத காரியம். விழா நடந்த நாட்களில் ஒரு சனிக்கிழமை எனது பிறந்தநாள் வேறு. என்னுடைய இந்த வருட பிறந்தநாளை மூன்று திரைப்படங்களுடன் கழித்து இருக்கிறேன். 

ஞாயிறு அன்று ஐந்து திரைப்படங்கள் பார்க்கலாம் என்றிருந்தேன். ஆனால், மூன்று திரைப்படங்களிலேயே தலைவலி வர தொடங்கிவிட்டது. அந்த தலைவலி தொடர்ந்து பார்த்த மூன்று திரைப்படங்களால் வந்ததா?? அல்லது சனி அன்று இரவு அடித்த ஜானி வோக்கரால் வந்ததா?? என்று தெரியவில்லை.

முதலில் திங்கள் மற்றும் புதன் ஆகிய இரண்டு நாட்களும் மதியத்திற்கு மேல் அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு திரைப்பட விழாவுக்கு செல்லலாம் என்று முடிவு செய்திருந்தேன். திங்கள் அன்று நான் திட்டமிட்டது எனது மேனேஜருக்கு தெரிந்ததோ இல்லையோ, என் அலுவலகத்தில் உள்ள ஒரு யுனிக்ஸ் சர்வருக்கு தெரிந்துவிட்டது. அந்த சர்வரில் உள்ள எல்லா அப்ளிகேஷன் டவுனாகி போக அதை அப் செய்வதற்கே திங்கள் கிழமை முடிந்துவிட்டது. அதைப் போல், புதன் அன்று இன்னொரு அலுவலக நண்பன் விடுப்பு எடுத்துவிட, நான் திரைப்பட விழாவுக்கு விடுப்பு எடுக்க வேண்டியதாயிற்று.

ஆக கடைசி நான்கு நாட்களில் நான் பார்த்த திரைப்படங்களின் எண்ணிக்கை ஒன்றே ஒன்று தான். அந்த திரைப்படத்தின் பெயர் மைக்கேல். ஆஸ்திரேலியா மொழி திரைப்படம். இரண்டே இரண்டு கதாபாத்திரங்களை சுற்றியே கதை. ஒருவன் ஒரு சிறுவனை வீட்டு சிறையில் வைத்திருக்கிறான். அந்த பையனை அவன் சந்தோஷமாக வைத்துக்கொள்ளவே ஆசைப்படுகிறான். இதுதான் கதை. இதற்கு மேல் நான் தெளிவாக சொன்னால் அந்த திரைப்படத்தையே நான் கொலை செய்து விடுவேன். ஆகவே இது போதும்.

திரைப்பட விழாவில் அவர்கள் கொடுத்த Time Schedule எந்த திரைப்படத்தை எப்பொழுது பார்க்கலாம் என்று திட்டமிட மிகவும் உதவியாக இருந்தது. அதே Time Schedule பேப்பர்தான் நான் பார்த்த திரைப்படங்களின் பெயர்களை இப்பொழுது இங்கே டைப் செய்யவும் உதவுகிறது

1) Three-Way Wedding
2) Flying Pigs
3) The Whistle Blower
4) A Summer At Grandpa's
5) 17 girls
6) Sky Skraper
7) An Ordinary Execution
8) Crime and Punishment
9) A Burning Desire
10) Michael

இப்பொழுதே எனக்கு சந்தேகம் வந்துவிட்டது, இதில் இருக்கும் சில திரைப்படங்களை நான் பார்த்தேனா?? என்று. நான் பார்த்த திரைப்படங்களின் பெயர்களை நான் மறந்துவிட கூடாது என்பதற்காகவே இங்கே எழுதிவைக்கிறேன். நான் கூட முதலில் பதினைந்து படங்களாவ்து பார்த்து இருப்போம் என்று நினைத்திருந்தேன். இப்பொழுதுதான் தெரிகிறது நான் பார்த்தது பத்து திரைப்படங்கள்தான்.

சரி, ஒரு வழியாக திரைப்பட விழா முடிந்துவிட்டது. இனி, புத்தகக் கண்காட்சிக்கு தயாராக வேண்டும். உங்களுக்கு தேதி நினைவு இருக்குது அல்லவா?? ஜனவரி ஐந்தாம் தேதி முதல் பதினெழு தேதி வரை.....

முப்பொழுதும் உன் கற்பனைகள் - "கண்கள் நீயே..காற்றும் நீயே"

என் Playlist'ல் கடந்த இரண்டு நாட்களாக ஒரே பாடல்தான் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டு இருக்கிறது. "முப்பொழுதும் உன் கற்பனைகள்" திரைப்படத்தில் வரும் "கண்கள் நீயே..காற்றும் நீயே" என்ற அற்புதமான பாடல்.

 பா.தாமரை எழுதிய பாடல் வரிகளுக்காகவே மீண்டும் மீண்டும் இந்த பாடலைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஒரு தாய் தன் குழந்தையைப் பற்றி பாடுவது போல் இயற்றப்பட்டு உள்ளது. முக்கியமாக பாடல் வரிகள் முழுவதுமே நமக்கு புரிகிறது. அதற்காக ஜீ.வி.பிரகாஷ்க்கும் சபாஷ் சொல்லலாம்.

அந்த பாடலில் வரும் ஒரு வரி,

"நான் கொள்ளும் கர்வம் நீ"


இந்த பாடல் எனக்கு பிடித்துப்போக சில தனிப்பட்ட காரணங்களும் இருக்கிறது. என் தற்பொழுதைய உலகம் புதிதாக பிறந்த குழந்தைகளால் சூழப்பட்டு உள்ளது. என் அக்காவின் குழந்தை, நான் குடியிருக்கும் அப்பார்ட்மெண்ட் என்னைப் பார்த்து தினமும் சிரித்து டாட்டா காட்டும் ஒரு குழந்தை, தோழிக்கு புதிதாக பிறந்திருக்கும் இரட்டை குழந்தை, அலுவலகத்தில் தன் குழந்தையைப் பற்றியே பேசிக்கொண்டு இருக்கும் அலுவலக நண்பர்.. இப்படி குழந்தைகளால் சூழப்பட்டு, எதைப்பற்றி பேசினால் அது குழந்தைகள் பற்றியதாகவே முடிகிறது.

நண்பன் ஒருவனிடம் இந்த பாடலைப் பற்றி சொல்லி கேட்கச் சொன்னேன். இந்த பாடலை கேட்ட பின் அவன் சொன்னது "குழந்தையைப் பற்றி பாடுவது போல் இல்லையே, ஏதோ காதல் பாடல் போல இருக்கே". என்ன செய்ய எல்லாவற்றையும் காதலுடன் இணைத்து பார்க்கும் உலகில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம், என்னையும் சேர்த்து.

பாடல் வரிகள்
********************
கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பில் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊனும் நீ ..உயிரும் நீ

பல நாள் கனவே
ஒரு நாள் நினைவே
இயக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உன்னை நான் எடுத்தேன்
நான் தான் நீ ..வேறில்லை

முகம் வெள்ளை தாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண் பாவை நான் செய்தேன் கண்ணே
இதழை செல்லி
எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னை தாங்க ஏங்கினேன்
அடுத்த கணமே குழைந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்
தூளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதி வேலை
பல நூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாலே பல பல ஓசை
செய்திடும் .. ராவணன் ஈடில்லா என் மகன்

எனை தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனை கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
என் முத்தத்தை நான் தந்தேன் கண்ணே

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளி போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்
போகும் பாதை நீளம்
குறையா நீல வானம்

சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ
பசி என்றால் தாயிடம் தேடும் மானிட மர்மம் நீ
நான் கொள்ளும் கர்வம் நீ

கடலை ஐயிந்தாறு மலை ஐயிநூறு
இவை தாண்டி தானே பெற்றேன் உன்னை
உடல் செவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

Thursday, December 15, 2011

படித்ததில் பிடித்தது


என்னை மிகவும் பாதித்த ரமேஷ்-பிரேம் எழுதிய பின்நவீனத்துவ நாவலான "சொல் என்றொரு சொல்" புத்தகத்திலிருந்து சில வரிகள்,

"அவன் இருள் நகரத்தில் இருக்கிறான். இன்னும் குறிப்பாகச் சொன்னால்-இருள் நகர எழுத்தாளனான அதீதன் எழுதிய "உடலில் வலியும் உணர்வில் இசையும்" என்ற நூலுக்குள் பதுங்கிக்கொண்டுருக்கிறான். நன்மொழித்தேவன் இருள் நகரத்தின் தேசிய நூலகத்தில் தான் பதுங்கி வாழ்ந்து வருகிறான். அங்குத் தான் அவன் அதீதன் நூலைக் கண்டெடுத்தான். சரி, இருள் நகரம் எங்கிருக்கிறது. அது அதீதனின் புனைவு நூலுக்குள் இருக்கிறது. அப்படியென்றால் அதீதன் எங்கிருக்கிறான். நன்மொழித்தேவன் படித்துக்கொண்டிருக்கும் உடலில் வலியும் உணர்வில் இசையும் என்ற நூலுக்குள் இருக்கிறான். அந்த நூல் எங்கிருக்கிறது? இருள் நகரத்தின் தேசிய நூலகத்தில்"

Wednesday, December 14, 2011

Mob Dancing

ரியால்டி ஷோக்களை அடுத்து புதிய வீதமான ஒன்று சமீப காலமாக உலாவ தொடங்கியுள்ளது.  ஒழுங்கற்ற முறையில் கும்பலாக நடனமாடப்படும் Mob Dance அது. பெங்களூர் மும்பை டில்லி போன்ற நகரங்களில் வசிப்பவர் நீங்கள் என்றால், இது உங்களுக்கு மிகவும் அறிமுகமான ஒன்று. கொஞ்ச நாட்களுக்கு முன்னால் மும்பை இரயில்வே நிலையத்தில் நடந்த ஒரு மாஃப் நடனம் மிகவும் பிரபலம். அந்த நடனத்தை HD வடிவில் நீங்கள் இணையத்தில் பார்க்கலாம். (http://www.youtube.com/watch?v=Iyt16efRrBo)

Mob Dancing பற்றி தெரியாதவர்களுக்கு அதைப் பற்றி ஒரு சின்ன விளக்கம், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடன கலைஞர்கள் மக்களோடு மக்களாக இருப்பார்கள். தீடிர் என்று எங்கிருந்தோ பாடல் ஒலிகள் கேட்கத்தொடங்கியவுடன், அந்த நடனக் கலைஞர்களில் சிலர் நடனமாட தொடங்கிவிடுவார்கள். மற்றவர்கள் மக்களோடு மக்களாகவே நின்றுக்கொண்டு இருப்பார்கள். பாடல் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கத்தொடங்கியவுடன், மற்ற நடனக் கலைஞர்களும் அந்த நடனத்தில் பங்குக்கொள்ள தொடங்கிவிடுவார்கள். இதைப் பார்க்கும் மக்களும் உண்மையாகவே பார்வையாளர்கள்தான் நடனமாட ஆரம்பித்துவிட்டார்கள் என்று நினைத்து அவர்களும் அதில் பங்குபெற தொடங்கிவிடுவார்கள். இது தான் அந்த Mob Dancing.

கடந்த ஞாயிறு அன்று மாலை நீங்கள் Express Avenue'க்கு சென்றிருந்தால், இந்த மாஃப் நடனத்தை நீங்களும் நேரில் பார்த்திருக்கலாம். இதன் HD வடிவம் இன்னும் கொஞ்ச நாட்களில் இணையத்தில் வந்துவிடும் அப்பொழுது பார்த்துக்கொள்ளுங்கள்.

EA'வில் இந்த நடனத்தைப் நான் பார்த்துக்கொண்டு இருந்த போது, அருகில் நின்ற பெரியவர் சொன்னது "சந்தோஷத்தை கொண்டாட எப்பொழுதும் எதாவது காரணம் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது" என்றார். அவர் சொன்ன காரணம் எனக்கு புரியவில்லை, உங்களுக்கு??

Tuesday, December 13, 2011

சென்னை சர்வதேச திரைப்பட விழா (14th Dec - 22nd Dec)

14'ஆம் தேதி தொடங்கி 22'ஆம் தேதி வரை  சென்னை சர்வதேச திரைப்பட விழா நடக்கயிருக்கிறது. இது சென்னையில் நடைபெறும் 9வது சர்வதேச திரைப்பட விழாவாகும். கடந்த ஆண்டு நடைப்பெற்ற திரைப்பட விழாவை விட இந்த வருடம் நடக்கும் திரைப்பட விழா விஷேசமானது, அதற்கு காரணம் இந்த வருடம் நானும் திரைப்ப்ட விழாவுக்கு போவதே. 500 ரூபாய் கொடுத்து முன்பதிவு ஏற்கனவே செய்தாகிவிட்டது.

சென்ற வருட திரைப்பட விழா எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நானும் செல்வாவும் விழா தொடங்கி ஆறாவது நாள்தான் உட்லண்ட்ஸ் திரையரங்கு வளாகத்துக்கு சென்றோம். பதிவு கட்டணமாக நபர் ஒருவருக்கு 500 ரூபாய் கேட்டார்கள், இன்னும் பாக்கி இருப்பதோ இரண்டு நாட்கள்தான், அதிகபட்சமாக ஒரு நாளைக்கு இரண்டு படங்கள் வீதம் மொத்தம் நான்கு திரைப்படங்கள் பார்க்கலாம்.  500 ரூபாய்க்கு 4 திரைப்படங்கள் என்பது கொஞ்சம் அதிகம் என்று முடிவு செய்து, உட்லண்ட்ஸ் திரையரங்கு வளாகத்தை விட்டு வெளியேறி விட்டோம். அந்த நேரத்தில் எங்கள் இருவரிடமும் 500 ரூபாய் இல்லை என்பதே உண்மையான காரணம்.

இந்த வருடம் திரைப்பட விழாவுக்கு முன்பதிவு செய்தவுடன் எதாவது ஒரு நாள் அலுவலகத்துக்கு விடுமுறை எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், அப்பாவின் மெடிக்கல் செக்-அப்பிற்காக இன்று விடுமுறை எடுத்துவிட்டதால் மீண்டும் விடுமுறை எடுக்க முடியாத சுழ்நிலை. இருந்தபோதிலும், சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் காலை 10 மணி ஷோ அல்லது இரவு 8 மணி ஷோ ஆகிய இரண்டில் எதாவது ஒரு ஷோ பார்ப்பது உறுதி.

நாளை விழா தொடங்கயிருப்பதால், காலை 10 மணி ஷோவுக்கு போகலாம் என்றிருக்கிறேன். மொத்தம் ஐந்து திரையரங்கில் ஐந்து வீதமான திரைப்படங்கள் திரையிடப்படுவதால் எந்த திரைப்படத்தை பார்ப்பது என்று ஒரு சின்ன குழப்பம். 

எப்படியிருந்தாலும் நாளை காலை 10 மணிக்கு அந்த ஐந்து திரையரங்கில் எதாவது ஒன்றில் நீங்கள் என்னை சந்திக்கலாம்.

சென்னை சர்வதேச திரைப்பட விழா பற்றிய சில முக்கிய லிங்க்குகள் கீழே,

http://pg.indiaglitz.com/ciff/films.php
http://www.chennaifilmfest.com/schedules.html

Monday, December 12, 2011

ஒரு புகைப்படத்தை முன் வைத்து

முகநூலில், ஒரு புகைப்படத்தை தற்பொழுது பலருடைய Profile'ல் பார்க்க முடிகிறது. மூன்று மனிதர்கள் ஒரு திண்ணையில் உட்கார்ந்திருக்க இன்னொரு மனிதர் தரையில் உட்கார்ந்திருப்பார், மேலும் மூன்று குழந்தைகளும் அந்த புகைப்படத்தில் இருப்பார்கள். இங்கே குழந்தைகள், மனிதர்கள் என்று சொல்வதைவிட  எலும்புக்கூடுகள் என்று சொல்லிவிடலாம். அந்த புகைப்படத்தில் உள்ள எல்லோருடைய கண்களிலும் பசியைப் பார்க்கலாம்.

இப்பொழுது உங்களுக்கு தெரிந்திருக்கும், நான் எந்த புகைப்படத்தைப் பற்றி சொல்கிறேன் என்று. ஆம், முல்லை பெரியார் அணை கட்டும் முன்பு அந்த பகுதி தமிழர்கள் இப்படிதான் இருந்தார்கள் என்று சொல்லி முகநூலில் ஒரு புகைப்படம் உழாவிக்கொண்டிருக்கிறதே அதைப் பற்றி சொல்கிறேன்.

அந்த புகைப்படத்தை பார்த்தவுடனேயே, முல்லைப் பெரியாறு அணை காப்பாற்றாவிட்டால், நம் தமிழர்களின் நிலைமை இப்படியாகிவிடும் என்ற பயம் எல்லா தமிழர்களுக்கும் வந்துவிடும். அது தான் அந்த புகைப்படத்தின் வெற்றி. அந்த காலத்தில் "நேஷனல் ஜியோகிராபிக் சேனல்" வழங்கும் அற்புதமானப் புகைப்பட விருதுகள் இருந்ததா என்று தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால், கண்டிப்பாக அந்த விருது இந்தப் புகைப்படத்துக்குதான் கிடைத்திருக்கும்.

அந்த புகைப்படத்தை பார்த்தவுடனேயே எனக்கு ஒரு சந்தேகம், அந்த புகைப்படம் உண்மைதானா? அதிலிருப்பவர்கள் தமிழர்கள் தானா?? அணை கட்டப்பட்ட ஆண்டு 1895. அப்படியென்றால், அதற்கு முன்னரே இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட'தா?? அதுவும் இவ்வளவு தெளிவாக.  இந்த புகைப்படம் எடுத்தவர் யார்?? இப்படி எத்தனையோ கேள்விகள்.

அந்த புகைப்படத்தில் வலது ஓரத்தில் இருப்பவரைப் பார்த்தால், நம் தமிழர் போல்தான் தெரிகிறார். ஆனால், மற்றவர்கள்?? எதற்காக அவர்களுக்கு மொட்டை அடிக்கப்பட்டுள்ளது?? வறுமையிலிருந்தாலே மொட்டை அடிக்கப்பட வேண்டியது கட்டாயமா?? சோமாலியா நாட்டில், அவர்கள் தலைமுடியே இப்படிதான் இருக்கும் என்றல்லாவா நினைத்திருந்தேன். இப்பொழுதுதான் தெரிகிறது, அது வறுமையால் எற்பட்ட தலைமுடி என்று,

அந்த புகைப்படத்தைப் பற்றிய சந்தேகம் அதிகரித்துக்கொண்டே போக, இணையத்தில் தேடத் தொடங்கினேன். கூகுளின் Goggles உதவியுடன் அந்த புகைப்படத்தை தேடிய போது, அந்த புகைப்படம் விக்கிப் பக்கத்திலேயே இருப்பது தெரியவந்தது. இந்தியாவில் நடந்த பஞ்சங்களைப் பற்றி விக்கியில் சொல்ல இந்த புகைப்படம் உதவியாக இருந்துள்ளது. இந்த புகைப்படத்துக்கு விக்கியில் குறிப்பிட்டுள்ள ஆண்டு 1876–78. விக்கியில் இருந்தால் அது சரியாகதான் இருக்கும் என்று நீங்கள் நினைப்பது போலவே நானும் நினைப்பதால் இந்த புகைப்படம் பற்றி உள்ள சந்தேகங்களை இங்கேயே நான் நிறுத்திக்கொள்கிறேன்.

சரி, இப்பொழுது என் கேள்வியெல்லாம், இந்த புகைப்படங்களை இந்நேரத்தில் பரப்பத் தொடங்கியது யார்?? இது போன்ற புகைப்படங்களால் நம் மக்களை மிகவும் சுலபமாக கொந்தளிக்க வைக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அப்படி இருந்தும், எதற்காக இந்த புகைப்படத்தை நாம் அனைவரும் தொடர்ந்து Share செய்துக்கொண்டே இருக்கிறோம். கேரளாவுக்கும், நமக்கும் இப்பொழுது எற்பட்டுள்ள இந்த இறுக்கமான சுழ்நிலையில், இது போன்ற புகைப்படங்கள் பிரச்சனையை இன்னும் பெரிதாக்கவே உதவும்.  எல்லாவற்றையும் ஒருவீத பொழுதுபோக்காகவே பார்க்கும் இன்றைய சமூகத்தில், இந்த புகைப்படத்தையும் ஒரு பொழுதுபோக்காகவே பார்க்கிறோம், ஆனால் ஒரு கட்டத்தில் இது பெரும் மன எழுச்சியை உண்டாக்கும் என்ற உண்மை தெரியாமல்.

மேலும் அந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் தமிழர்களோ, வங்காளர்களோ யாராக இருப்பினும், அந்த புகைப்படத்தை நான் ஒரு அவமானச் சின்னமாகவே பார்க்கிறேன்.

அந்த புகைப்படத்தை எதிர்க்கிறேன் என்பதுதான் நான் இங்கு சொல்லவருவது. அதை எப்படி தெளிவாக சொல்வது என்று தெரியாமல், எதோ எதோ சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

இதைப் போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வலம் வர நண்பர்கள் யாரும் உதவி செய்ய வேண்டாம் என்றும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

(அந்த புகைப்படத்தின் விளம்பரத்துக்கு எந்தவீதத்திலும் இந்த கட்டுரை உதவக் கூடாது என்பதற்காக அந்த புகைப்படம் இங்கே வலையேற்றப்படவில்லை).

Saturday, December 3, 2011

பங்குச்சந்தை மோகம்

என்னைப் பார்த்து என் நெடுநாள் தோழன் ஒருவனும் வலைப்பதிவு எழுத தொடங்கியுள்ளான். அவன் தொடந்து எழுத என் வாழ்த்துகள். இதைப்போல், அலுவலகத்தில் தினமும் நான் MoneyControl Portfolio'வை மேய்ந்துக்கொண்டு இருப்பதைப் பார்த்த ஒருவர், நான் பங்குச்சந்தையில் பெரிய புள்ளி என்று நம்பிவிட்டார். அப்படி நம்பியோடு விட்டிருந்தால் பரவாயில்லை. பங்குச்சந்தையைப் பற்றி நான் அவருக்கு சொல்லிதர வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார். நானும் EPS, P/E, Dividend, Face Value. Book Value, Book Closure Date போன்று எனக்கே தெரியாத சில டெக்னிக்கல் விசயங்களை எடுத்துவிட்டேன். அமைதியாக தலையைச் சாய்த்து கேட்டுக்கொண்டவர், அடுத்த வாரமே ஷேர்கானில் அக்கவுண்ட் திறந்தார். ஷேர்கானில் அக்கவுண்ட் ஓபன் செய்ய உதவியவனும் நான்தான் என்பதை எழுத வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறேன்.

இனிதான் பிரச்சனையை, அக்கவுண்ட் திறந்தவுடனேயே "அசோக், உனக்கு தெரிந்த சில பங்குகளை சொல் வாங்குகிறேன்" என்றார். அதுவும் எப்படி, ஒரே வாரத்தில் பணம் இரண்டு மடங்காக வர வேண்டுமாம். ஏற்கனவே, எனது பழைய அலுவலகத்தில் சிலருக்கு சில பங்குகளை சிபாரிசு செய்ய போய், எனக்கும் அவர்களுக்கும் தீராப்பகை ஒன்று இன்று வரை இருந்துக்கொண்டு இருக்கிறது. நான் அவர்களுக்கு சிபாரிசு செய்த பங்குகளில் ஒன்று "Pyramid Saimira". இப்பொழுது அந்த பங்கினை பங்குச்சந்தை வணிகத்திலிருந்தே தூக்கிவிட்டார்கள். எனக்கு அந்த பங்கிலிருந்து சில ஆயிரம் லாபம் கிடைத்த காரணத்தால்தான், எனது நண்பர்களுக்கு சிபாரிசு செய்தேன். ஆனால், அவர்கள் வாங்கிய நேரம் கம்பெனியை மூடிவிட்டார்கள். நல்லவேளை, அந்த பங்கில் எனக்கு முன்னரே சில ஆயிரங்கள் லாபம் கிடைத்த விசயத்தை அவர்களிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் இந்நேரம் பெரிய வெட்டுக்குத்து சண்டையே நடந்திருக்கும். என் வாழ்நாளில் எனக்கு லாபம் கிடைத்தது அந்த பங்கிலிருந்து மட்டும்தான், மேலும் இன்று வரை மொத்தமாக என்னுடைய நஷ்டங்கள் சில லட்சத்தை எட்டிவிட்டது என்ற உண்மையை நான் யாரிடம் சொல்லி அழுவது.

நான் முதல் முதலாக பங்குவணிகத்துக்கு அடி எடுத்து வைத்தது கல்லூரி இறுதி ஆண்டில், அப்பொழுது நான் முதலீடு செய்த தொகை 2500. முதலில் வாங்கிய பங்கு ITC. அப்பொழுது அதன் விலை 180 என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேல் கடந்துவிட்டது, ஆனால், இன்னும் என்னால் இந்த பங்குச்சந்தையை சரியான முறையில் புரிந்துக்கொள்ள முடியவில்லையே என்று நினைக்கும் போது, கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. நான் தோற்றுவிட்டேன் என்ற உண்மையை மனது உணர்ந்துக்கொள்ள மறுக்கிறது.

நேற்று கூட Intraday'யில் இரண்டு ஆயிரம் ரூபாய் லாபம், ஆனால், கடந்த ஒரு மாதம் என்று மொத்தமாக பார்த்தால் ஆயிர ரூபாய்க்கு அருகில் நஷ்டமே. நானும் பல முறை இதிலிருந்து வெளிவர முடிவு செய்வேன், ஆனால் அது முடியவில்லை. அதிகபட்சமாக இரண்டு மாதங்கள் வரை பங்குச்சந்தையிலிருந்து விலகியிருக்கிறேன். நான் அடிமையாகிவிட்டேன் என்று நன்றாக எனக்கே தெரிகிறது. இந்த போதை எனக்கு பிடித்திருக்கிறது. இது எண்களின் விளையாட்டு. இந்த உலகத்தில் ஒருவனுக்கு அதிகம் மயக்கம் தர கூடியவை எண்களே. இப்பொழுது எண்களைப் பற்றி நான் தேடித் தேடி படித்துக்கொண்டு இருப்பதற்கு காரணமும் இந்த பங்குசந்தை மோகம்தான் என்று நினைக்கிறேன்.

பதிவு கொஞ்சம் சீரியஸாக போய்க் கொண்டு இருப்பதால், மீண்டும் என் அலுவலக கதைக்கு வருவோம். அலுவலக நண்பர் அக்கவுண்ட் திறந்தவுடனேயே "அசோக், உனக்கு தெரிந்த சில பங்குகளை சொல் வாங்குகிறேன்" என்றார்.

 "இல்ல எனக்கு அந்தளவு விவரம் தெரியாது, அதனால், நீங்களே செய்திகளைப் படித்து வாங்குகள், ஒரு பங்குப் பற்றி நான்கு முறை நன்றாக படித்துவிட்டு வாங்கவும்"  என்றேன்.

அவரும் விடாமல், தொடர்ந்து இந்த கேள்வியை கேட்டுக்கொண்டே இருந்தார். நானும் அதே பதிலை பல முறை சொல்லிக்கொண்டே இருந்தேன். கடைசியில் அவரே சலித்துப்போய் நிறுத்திவிட்டார். ஆனால் இன்னும் நான் பங்குச்சந்தைப் பற்றி சில டெக்னிக்கல் வார்த்தைகளையும் விதிமுறைகளையும் அவருக்கு சொல்லிக்கொண்டேதான் இருக்கிறேன். அவர் அருகில் இருக்கும் போது MoneyControl Portfolio மற்றும் ஷேர்கான் இணையதளம் ஆகிய இரண்டையுமே நான் திறப்பதே இல்லை என்பதையும் இங்கே சொல்லிக்கொள்கிறேன்.
 

இந்த வாரம் பார்க்க முடிவு செய்துள்ள திரைப்படங்கள்

நான் ஒரு சினிமா பைத்தியம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. எல்லா திரைப்படங்களையும் முதல் நாளே பார்க்ககூடியவன் நான், அது எவ்வளவு பெரிய மொக்கைப் படமாக இருந்தாலும் சரி. அப்படிபட்ட நான், கடந்த ஒரு மாதத்தில் பார்த்த ஒரே திரைப்படம் "மயக்கம் என்ன" மட்டுமே. கடந்த ஒரு மாதத்தில், எஸ்.ராவின் பேச்சு, அக்காவின் புதிய பெண் குழந்தை என்று நாட்கள் விரைவாக ஓடிவிட்டதால் திரைப்படங்கள் பார்க்க முடியவில்லை.

அக்காவிற்கு குழந்தை பிறந்து ஒரு மாதம் முடியபோகிறது. பிறந்த முதல் நாளிலிருந்து அக்காவின் குழந்தையைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். குழந்தைகளின் உலகம்தான் எவ்வளவு வித்தியாசமானது, பிறந்த குழந்தையை கையில் வாங்கியவுடன் மாமாவின் கண்களில்தான் எத்தனை ஆனந்தம். அந்த தருணத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.

குழந்தை பிறந்த ஒரு மாதத்திலேயே குழந்தைகளைப் பற்றி பல கதைகள் கேட்டுவிட்டேன். குழந்தை தூக்கத்தில் சிரித்தால், கடவுள் குழந்தையுடன் பேசிக்கொண்டு இருப்பதாக அர்த்தமாம். குழந்தை தூக்கத்தில் இருக்கும் போது, அதற்கு துணையாக எதாவது ஆயுதத்தை வைக்கவேண்டுமாம். எனது அம்மா, இரும்பால் செய்த ஒரு சின்ன சுத்தியலை தனது பேத்திக்கு அருகில் வைத்துள்ளார். குழந்தைக்கு விக்கல் வந்தால், அதன் தலையில் ஒரு சிறிய நூலிலை வைக்கவேண்டுமாம், இதற்காகவே எனது சித்தி கையில் நூல்கண்டுடன் அருகிலேயே உட்கார்ந்து இருக்கிறார். முப்பதாவது நாள் முடியும் போதும், கடவுள் குழந்தையிடம் "இனி நீ மனிதர்களுடன் தான் இருக்க வேண்டும்" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுவாராம், அதனால்தான் முப்பதாவது நாள் குழந்தை பயங்கர சத்தத்துடன் அழுகிறதாம்.

கடவுள் குழந்தையின் தலையில் ஆசிர்வதித்து அனுப்புவார் அதனால் உச்சதலையை தொடக்கூடாது, குழந்தை முறுக்கிக்கொண்டே இருந்தால், அதற்கு முறுக்கு கயிறு கட்டினால் சரியாகிவிடும். இது போல் இன்னும் எத்தனையோ கதைகள். இவையெல்லாம் கடந்த முப்பது நாட்களில் கேட்ட கதைகள், இன்னும் வரும் நாட்களில் எத்தனை கதைகள் கேட்கப்போகிறேன் என்று தெரியவில்லை. மேலும் இவை எல்லாம் எங்க ஊர் பக்கம் நான் கேட்கும் கதைகள். ஒவ்வொரு ஊருக்கு இந்த கதைகள் வித்தியாசப்படும் என்கிறார்கள்.

ஒருவழியாக இப்பொழுது எல்லா வேலைகளும் முடிந்துவிட்டதால், மீண்டும் திரைப்படங்களை பார்க்க தொடங்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். அதன்படி அடுத்த ஒரு வாரத்தில் திரையரங்கு சென்று பார்க்க முடிவு செய்துள்ள படங்கள்,

போராளி,
ஒஸ்தி
Rockstar
The Dirty Picture

மேலும் டிவிடியில் பார்க்க முடிவு செய்துள்ள திரைப்படம்

Fashion

பல நாட்களுக்கு முன்னாலேயே Torrent'ல் டவுன்லோட் செய்து வைத்திருக்கும், இந்த உலகச் சினிமாக்களையும் பார்த்தாக வேண்டும்..

Machan - (Srilanka Movie)
The last temptation of Christ

Joan of Arc
Throne of Blood    - (By Akira Kurosawa)
The Seventh Seal - (Swedish film)

இந்த திரைப்படங்களை எல்லாம் பார்த்த பின், கீழ் கண்ட மூன்று பதிவுகளை எழுத முடிவு செய்துள்ளேன். அவை,

1) உலக சினிமாக்களை Subtitle'வுடன் பார்ப்பது எப்படி??
2) இந்த காட்சி இங்கேயிருந்து'தான் காப்பியடிக்கபட்டுள்ளது.
3) போராளி, ஒஸ்தி மற்றும் இரண்டு ஹிந்தி திரைப்படங்கள்.

கடைசியாக இந்த பதிவை முடிக்கும் முன்னால், "The Dirty Picture" திரைப்படம் பற்றி லக்கிலூக் எழுதியிருக்கும் ஒரு வாக்கியத்தோடு முடிக்கிறேன்...

"‘நேத்து ராத்திரி யம்மா’வுக்கும், ‘பொன்மேனி உருகுதே’வுக்கும் விசிலடித்த ஒவ்வொரு ஆணும் சிலுக்குவை கொலை செய்தவர்களே."

(link::http://www.luckylookonline.com/2011/12/dirty-picture.html)

.

அன்று, எனக்காக சிறிதளவாவது
நீங்கள் வருத்தபட்டு இருக்கலாம்.

என்னுடைய ஏமாற்றங்களை,
நான் பகிர்ந்துக்கொள்ளும் போது
நீங்கள் என்னை பார்த்து சிரிப்பதை
நான் விரும்பவில்லை.

நான் வஞ்சிக்கப்பட்டதை சொல்லிய போது,
நீங்கள் அதை
ஒரு நாடகத்தோடு ஒப்பிட்டு பேசியதை
என்னால் வேடிக்கை
மட்டுமே பார்க்க முடிந்தது.

அன்று, எனக்காக ஒரு துளியாவது
கண்ணீர் சிந்தியிருக்கலாம்.

என் தனிமையின் வேதனைகளைப் பார்த்து,
நான் சாய்ந்துக்கொள்ள
உங்கள்
தோள்களை கொடுத்திருக்கலாம்.

அன்று,
நீங்கள் என்னை ஒரு பைத்தியமாக பார்த்திருக்க
வேண்டிய கட்டாயம் இல்லை.

என் காதலுக்கு
உங்களால் மட்டுமே
உதவ முடியும் என்று நான் நம்பிய போது,
நீங்களே எதிரியாக மாறியதை
இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.

உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள என்னிடமும்
சில சோகங்கள் இருக்கிறது
என்பதை,
இப்பொழுதாவது புரிந்துக் கொள்ளுங்கள்.