Saturday, January 2, 2010

எனக்கு மட்டும்

எனக்கு அவனை மட்டுமே
பிடிக்கும்.
அவனுக்கு அவர்களை
மட்டுமே பிடிக்கும்.
எனவே எனக்கு
என்னையும் அவர்களையும்
பிடிக்காது.


Friday, January 1, 2010

அங்காடித்தெரு - பொங்கலுக்கு வருகிறது.




அங்காடித்தெரு பொங்கலுக்கு வெளிவருகிறது. ( கண்டிப்பாக வெளிவரும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்).

வசந்தபாலனின் "ஆல்பம், வெயில்" ஆகிய இரண்டு படங்களுக்கு அடுத்து வெளிவரும் மூன்றாவது படம். வெயில் திரைக்குவந்தது 2006'ம் ஆண்டில். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு அடுத்து, அடுத்த படம் வெளிவருகிறது. ஜெயமோகன் இந்த படத்திற்கு வசனம் எழுதி உள்ளார்.

வெயில் ஒரு வெற்றிப்படம்தான். பின், ஏன் அடுத்த படத்திற்க்கு தாமதம் என்றால், அங்காடித்தெருவில் சொல்லபடுகின்ற கதைதான். இது ஒரு சராசரி மனிதனின் கதை. இதுவே இந்த படம் வெளிவருவதற்க்கு முட்டுக்கட்டை.

இந்த படத்தின் கதாநாயகன் ஒரு ரவுடியாகவோ, போலீஸாகவோ இருந்து இருந்தால், அங்காடி தெரு 2008'ம் ஆண்டே வெளிவந்து இருக்கும். எத்தனையோ கோடி செலவு செய்து "வேட்டைக்காரன், கந்தசாமி, யோகி" என்று தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், "அங்காடி தெரு" போன்ற திரைப்படங்களை தயாரிக்க தயங்குகிறார்கள். இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் நிலை.

எனக்கு பிடித்த படங்களில் வெயிலும் ஒன்று. கல்லூரியில் படித்த சமயத்தில், நானும் நண்பர்கள் மூன்று பேரும் அந்த படத்திற்க்கு சென்று இருந்தோம்.

பசுபதி இருபது வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு போவான். தான் யார் என்று தெரியாமல், தன் தம்பியே தன்னிடம் " டீ சாப்பிட காசு வேணுமாண்ணே??" என்று கேட்கும்போதும், வீட்டுவாசலில் நின்றுக்கொண்டு "அப்பா" என்று சொல்லுபோதும் பசுபதியின் நடிப்பும், முகபாவனையும் அற்புதமாக இருக்கும். என் நண்பன் அதை பார்த்து அழுதே விட்டான். அதுதான் அந்த படத்தின் வெற்றி.

வாழ்கையில் தோல்வியை மட்டுமே சந்தித்த ஒருவனின் கதைதான் வெயில். வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை மட்டுமே சொல்லிகொண்டு இருந்த தமிழ் சினிமாவில் இது ஒரு துணிச்சலான முயற்சி.

"அங்காடித்தெரு" பொங்கலுக்கு வெளிவந்து தமிழ் சினிமாவில் ஒரு மாற்றத்தை எற்படுத்த என் வாழ்த்துகள்.

குறிப்புகள்:
---------------

1) அங்காடித் தெருவை போலவே மிஷ்கினின் நந்தலாலாவும் இரண்டு வருடங்களாக வெளிவராமால் இருக்கிறது. இந்த ஆண்டுக்குள் நந்தலாலாவும் வெளி வந்தால் நன்றாக இருக்கும்.

2) " அவள் அப்படி ஒன்றும் அழகில்லை", "உன் பெயரை சொல்லும் போதே" ஆகிய பாடல்களை, ஏன் எந்த F.M ரேடியோவிலும் ஒளிபரப்புவது இல்லை?

எனக்குப் பிடித்த பாடல்

"சொல்லிவிடு வெள்ளி நிலவே" என்று தொடங்கும் இந்த பாடலின் படம் "அமைதிப்படை".

திரைப்படத்தில் இடம்பெறாத இந்த பாடலை யார் எடிட்டிங் செய்து youtube'ல் போட்டார்கள் என்று தெரியவில்லை, எடிட்டிங் நன்றாக உள்ளது.




இந்த பாடலின் இசையமைப்பாளர் இளையராஜா இல்லை, கார்த்திக் ராஜாதான் என்று என் நண்பன் அடித்து சொல்கிறான். திரைப்படத்தில் இசையமைப்பாளர் என்று இளையராஜாவின் பெயரும், பின்னனி இசையமைப்பாளர் என்று கார்த்திக்ராஜாவின் பெயரும் டைட்டில் கார்டில் காட்டபடுகிறது.

இவர் இளையராஜாவின் முதல் மகன். இவரும் சிறந்த இசையமைப்பாளர்தான், மெலடி பாடல்களை இயற்றுவதில் வல்லவர். இளையராஜாவின் பாணியிலேயே இவரும் பாடல்கள் இயற்றவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்ததால், வானில் தோன்றிய நட்சத்திரமாக மறைந்து போனார். பிரபலங்களுக்கு மகனாக பிறப்பதால் எற்படும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. ஆனால், யுவன் இவற்றில் எதிலேயும் சிக்காமல் தனக்கு என்று ஒரு பாணியை உருவாக்கி கொண்டார். "ஏன், இப்பொழுது எல்லாம் கார்த்திக் திரைப்படங்களுக்கு இசை அமைப்பதை குறைத்துக்கொண்டார்??" என்று தெரியவில்லை.

Thursday, December 24, 2009

அவள் Virgin பா !!

அலுவலகத்தில் இருந்து அறைக்கு பேருந்தில் சென்றுகொண்டு இருந்தேன்.

570'ல் உட்கார இடம் கிடைப்பதே கஷ்டம், அதிலும் பக்கத்தில் ஒரு பெண் உட்கார்ந்து இருந்தால், எனது அதிர்ஷ்டத்தை நீங்களே கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

பார்ப்பதற்க்கு அந்த பெண் அழகாக இருந்தாள். ( " டேய் நீ இதுவரை எதாவது ஒரு பெண்ணையாவது அழகில்லை என்று சொல்லி இருக்காயா ?? " என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. " என்ன செய்ய, பார்க்கின்ற என்ன பெண்களும் அழகாக தெரிகிறார்கள் " )

எல்லா பெண்களை போல இவளும் உட்கார்ந்தது முதல் போனில் பேசிக்கொண்டே இருந்தாள். A/C பேருந்து என்பதால், அவள் என்னதான் மெதுவாக பேசினாலும், சில வார்த்தைகள் என் காதில் விழுந்துக்கொண்டுதான் இருந்தது. நடுவில் சத்தமாக சிரிப்பது, அப்புறம் " ம் " என்று சொல்வது, அப்புறம் " இல்ல பா " என்று சொல்வது என்று எதோ பேசிக்கொண்டே இருந்தாள். நான் எதையும் கண்டு கொள்ளாதது போல , வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தேன்.

அவள் பேசிய ஒரு வார்த்தை, சட்டென்று என்னை அவள் பக்கம் திரும்ப வைத்தது. அது " யேய், அவள் Virgin பா " என்பதுதான்.

நான் என்னை அறியாமல் அவள் முகத்தை திரும்பி பார்த்து விட்டேன். " சத்தமாக பேசிவிட்டோமே!! " என்று அவள் கவலைப்பட்டு இருப்பாள் என்று நினைக்கிறேன்.
" நான் அப்புறம் பேசுறேன் " என்று சொல்லி போனை வைத்துவிட்டாள்.

" பெண்கள் எல்லாவற்றையும் எவ்வளவு Casual'ஆக பேச தொடங்கிவிட்டனர் " என்று நினைத்துக்கொண்டே, நான் எதுவும் நடக்காதது போல, மீண்டும் வேடிக்கை பார்க்க தொடங்கினேன். ஆனால்,அவள் முகத்தில் ஒரு சின்ன மாற்றம் தெரிந்தது.

மீண்டும் அவள் செல்போனை எடுக்கவே இல்லை.

அவள் வடபழனியில் இறங்கிவிட, நான் C.M.B.T'யில் இறங்கி, D70 பிடித்து அறைக்கு வந்து சேர்ந்தேன்.

நான் அறைக்குள் நுழைந்தவுடன், அங்கு பேப்பர் படித்துக்கொண்டு இருந்த குமார், என்னிடம் கேட்டது " மச்சி, Virgin'ல Incoming வந்தா, நம்ம கணக்குல நிமிடத்திற்க்கு 10 பைசா ஏறுமாமே ??. உண்மையா டா??? ".

Wednesday, December 23, 2009

சிலுவையை சுமப்பவர்கள்

உங்களுக்கான சிலுவையை எப்பொழுதும்
இயேசுதான் சுமக்கவேண்டும் என்று
எதிர்பார்காதீர்கள்

உங்கள் தோழர்களோ
அம்மாவோ, அப்பாவோ
அண்ணனோ, தங்கையோ
பழைய காதலனோ, காதலியோ
மனைவியோ, கணவரோ
தெரிந்தவரோ, தெரியாதவரோ
இப்படி
இவர்களில் யாரோ ஒருவர்
உங்களுக்கான சிலுவையை
சுமந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

முன்னவர் அனைவரிடமும் சொல்லிவிட்டு சுமந்தார்,
இவர்கள் சொல்லாமல் சுமக்கிறார்கள்.
அந்தளவே வித்தியாசம்.

Monday, December 14, 2009

நிராகரிக்கப்பட்ட பரிசுப்பொருள்

ஏற்க மறுக்கபட்ட பரிசுப்பொருளை
வைத்துக்கொண்டு என்னதான் செய்வது

தூக்கி எறியவோ
மற்றவர்களுக்கு கொடுக்கவோ முடியாது,
அது ஒரு பழிவாங்கும் செயல்.

நாம் உபயோகப்படுத்தவும் கூடாது,
அது ஏற்க மறுத்தவரை நினைவு செய்து
மேலும் வெறுப்பை உண்டாக்கும்.

நிராகரிக்கப்பட்டவர்கள் போலவே,
நிராகரிக்கப்பட்ட பொருட்களும்
தனிமையையே விரும்புகின்றன.

இரண்டாவது காதலியால்
மறுக்கபட்ட ஒரு புத்தகம்,
நினைவுப்பொருளாய்
என் வீட்டு அலமாரியின் இடது ஓரத்தில்
இருந்துக்கொண்டு,
என்னை
தினமும் பயமுறுத்துகிறது.

“நீ பரிசுப்பொருள் என்கின்ற
ஒரே காரணத்தால், நிராகரிக்கப்பட்டாய்”
என்ற உண்மையை,
நிராகரிக்கப்பட்ட பொருட்கள்
எந்த காலத்திலும் நம்ப போவதுமில்லை.

Sunday, November 29, 2009

புரியாத கதைகள்

கண்டிப்பாக விரைவில் அவள் என்னிடம் காதலை சொல்லிவிடுவாள். சில நாட்களாகவே அவள் பேச்சில் எதோ ஒரு மாற்றம் தெரிந்தது. ஒவ்வொரு முறையும் எதோ ஒன்றை என்னிடம் சொல்ல நினைத்து, பின் அதை மறைத்துவிடுகிறாள். விரைவில் அவள் என்னிடம் காதலை சொல்லிவிடுவாள். அவள் காதலை சொல்லும் பொழுது எப்படி நான் பதில் அளிக்க வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை ஒத்திகை பார்க்க தொடங்கினேன்.அவள் முகத்தை பார்த்துத்தான் பேச வேண்டும். " எனக்கு இந்த காதல் மீது எல்லாம் நம்பிக்கை இல்லை" என்றுதான் பேச தொடங்க வேண்டும்.

சசி எப்பொழுதும் என்னிடம் சொல்வான் " இந்த காதல், கவிதை எழுதுவதற்க்கு வேண்டுமானால் உதவியாக இருக்கும், மற்றபடி எதற்க்கும் இது உதவி செய்யாது. அவள் எங்கே சென்றாலும் பின்னாடியே சென்று, அவள் கேட்பதை எல்லாம் வாங்கிதந்து, அது ஒரு நாய் பிழைப்பு ".

கண்டிப்பாக அவள் காதலை ஒத்துக்கொள்ள கூடாது. அவள் முகத்தை அலட்சியமாக பார்க்க வேண்டும். நான் அவளிடம் பேசுவதை போல் மனக்கண்ணில் ஓட்டி பார்த்தேன். நான் காதலை மறுத்தவுடன் , அவள் அழுதுக்கொண்டு இருந்தாள். " இந்த அழுகைக்கு எல்லாம் எமாந்தவன் நான் இல்லை ".

காட்சி 1:
----------

அசோக் எதிர்பார்த்ததை போல், அவள் காதலை உடனே சொல்லவில்லை. ஒரு மாதம் சென்றுவிட்டது. ஆனால், அவள் பேச்சில் எதோ ஒரு மாற்றம் தெரிந்தது. அசோக், ஒவ்வொரு நாளும் அவன் பேச வேண்டியதை நடித்து பார்த்து கொண்டே இருந்தான். சில வாக்கியங்களை குறைத்தும், சில வாக்கியங்களை கூட்டியும் பல மாற்றங்கள் செய்துவிட்டான்.

அவன் எதிர்பார்த்ததை போல அந்த நாளும் வந்தது. சாந்தி காலணி Creamy inn'ல் உட்கார்ந்து இருக்கும் போது அவள் சொன்னாள் " அசோக், நான் உன்னை காதலிக்கிறேன் என்று நினைக்கிறேன். நாம் இருவரும் கடைசி வரை சேர்ந்து வாழ்ந்தால் என்ன??".

இப்படி காதலை கொஞ்சம் கூட கவிநயம் இல்லாமல், தட்டையாக சொன்னது அசோக்கிற்க்கு கோபத்தை உண்டு பண்ணியது. தான் எழுதி வைத்து இருப்பதை அவளிடம் சொல்ல தயாரானான். முதலில் அவள் முகத்தை பார்த்து பேச வேண்டும்.

அசோக் அவள் முகத்தை நேராக பார்த்தான். அவன் என்ன பதில் சொல்ல போறான் என்ற ஏக்கம் அவள் கண்ணில் தெரிந்தது. " இதுவரை அசோக் அசோக் என்று சிரித்துக்கொண்டு இருந்தவளை அழ வைப்பதா, இவள் மனது தாங்குமா??. ஒரு நாய்குட்டி ரோட்டில் அடிபட்டதை பார்ததற்கே அழுதவள் ஆயிற்றே இவள் ". பக்கத்து டேபிளில் அமர்ந்து இருந்த குழந்தையின் மீது கவனத்தை குவித்தான்.

"அசோக், யோசித்தது போதும். எனக்கு எதோ மாதிரி இருக்கு. பதிலை சீக்கிரம் சொல்லு" என்று மவுனத்தை கலைத்தாள்

அசோக்கிற்க்கு எழுதிவைத்தது எல்லாம் மறந்துவிட்டது. அவனை அறியாமலயே " இதை எப்படி சொல்வது என்று தெரியாமல்தான், இத்தனை நாள் நானும் காத்துக்கொண்டு இருந்தேன். Me too Love you " என்றான். தூரத்தில் Akon'ன் "Lonely" பாடல் ஒலித்துக்கொண்டு இருந்தது.

காட்சி 2:
-----------

அசோக் இவ்வளவு சீக்கிரம இது நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை, அசோக் ஒத்திகை பார்த்த அடுத்த நாளே இது நடந்தது. " அசோக், உன்னிடம் கொஞ்சம் தனியாக பேசவேண்டும். காபி குடிச்சுக்கிட்டே பேசலாமா ? " என்று அவள் அழைத்தபோது தான் எழுதி வைத்ததை மீண்டும் ஒரு முறை ஒத்திகை பார்த்துக்கொண்டான்.

கேண்டினில், இரண்டு நிமிட அமைதிக்கு பிறகு அவள் பேச தொடங்கினாள். "உன்னிடம் முன்னாடியே சொல்லலாம் என்று இருந்தேன். ஆனால் எப்படி சொல்றதுனு தெரியல, அதான் சொல்லல. அந்த தேவ் இருக்கான்'ல, அவன் எனக்கு propose பண்ணினான். நான் " எங்க வீட்ல இதுலாம் ஒத்துக்க மாட்டாங்கள் " அப்படி எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்க மாட்டேங்கிறான். நானே வந்து வீட்ல பேசுறேன் அப்படினு இப்படினு சொல்றான். எனக்கு கோபமா பேசவும் பயமா இருக்கு, செத்து போயிடுவேனு பயமுறுத்துறான். எனக்கு என்ன பண்றதுனே தெரியல " என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.

அசோக்கிற்க்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவனுடைய கற்பனை கோட்டை முற்றிலும் உடைந்தது போல தோன்றியது.

" தேவ்'யை உனக்கு எத்தனை நாளா தெரியும், சும்மா இப்படிதான் பயமுறுத்துவான். முடியாதுனு சொல்லிடு" என்றான்.

"இல்ல, தேவ் நல்ல பையந்தான். அவன் அப்பா அம்மாவை பார்த்து இருக்கேன். நல்லவங்கதான்".

"அப்பறம் என்ன?, சரினு சொல்லிடு".

"வீட்ல அம்மா அப்பாவை நினைத்தால்தான் பயமா இருக்கு"

"இதோ பாரு, இன்னும் கொஞ்ச நாள் நல்லா யோசிச்சு பாரு. உனக்கு எது சரினு தோணுதோ அதை மட்டும் செய். எனக்கு என்னமோ இந்த " தற்கொலை செய்துக்கொள்வேன் " என்று சொல்ற பசங்களை நம்ப கூடாதுனு தோணுது,"

"ம்..."

"உன் வாழ்க்கை, நீதான் தீர்மாணிக்க வேண்டும். நல்லா யோசி, ஒரு நல்ல முடிவு கிடைக்கும். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, நான் இப்ப கிளம்புறேன். சாரி, இதைபத்தி அப்புறமா நாம் பேசுவோம்" என்று சொல்லிவிட்டு அசோக் விரைவாக அந்த இடத்தைவிட்டு சென்றுவிட்டான்.

அன்று இரவு, அசோக்கும் சசியும் தண்ணியடிக்கும் போது, " இந்த பொண்ணுகளயே நம்ப கூடாது மச்சான். எல்லாமே பச்ச dash'டா " என்று அசோக் புலம்பிக்கொண்டே இருந்தான். பக்கத்தில் இருந்த ஸ்பிக்கரில் Eminem ஒரு பாட்டில் F'ல் அரம்பிக்கும் கெட்ட வார்த்தையால் யாரையோ திட்டிக்கொண்டு இருந்தான்.

Monday, November 16, 2009

படித்ததில் பிடித்தது.

"மற்றவர்களின் மீது இரக்கம் கொள்வது பச்சையான அயோக்கியத்தனம். இப்படிச் சொல்வதற்காக நீங்கள் என்னை நேரில் சந்திக்கும் போது என்னை ஒரு அறையாவது அறைந்து கொள்ளுங்கள். பேசாமல் வாங்கிக் கொள்கிறேன். ஆனால் இப்போது நான் உண்மையைப் பேசியாக வேண்டும். இப்படி மற்றவர்கள் மீது இரக்கும் கொள்வது பச்சையான அயோக்கியத்தனம்தான். சந்தேகமே இல்லை. இப்படி இரக்கம் கொள்வதன் மூலம் நீங்கள் மற்றவர்களை விட ஒரு உயர்ந்த இடத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்கிறீர்கள். அந்த ‘உயர்ந்த இடத்தில் ’ இருந்துதான் இது போன்ற மனிதாபிமான வார்த்தைகள் சொல்லப்படுகின்றன. "

- சாரு நிவேதிதா

http://www.charuonline.com/Nov2009/Suvaasika.html

Friday, November 6, 2009

சில பல

சமீபத்தில் ஆபிஸ் நண்பர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அதில் இருந்து அவர் போனும் கையுமாய் சுற்றிக்கொண்டு இருக்கிறார். இதைப் பற்றி அவரிடம் கேட்டதற்க்கு அவர் சொன்ன பதில் " நாம பேசலனா வேற எவனாவது பேசிக்கிட்டு இருப்பான், சரவணா".

**********************************************************************************

போன வாரம் ஞாயிற்றுக்கிழமை, நானும் செல்வாவும் அறையை மதியானமே பூட்டிவிட்டு Sky Walk, Spencer plaza, மாலையில் கமலாவில் பேராண்மை திரைப்படம், அப்பறம் மெரீனா என்று சுற்றிவிட்டு இரவு 11 மணிக்குதான் அறைக்கு திரும்பினோம். நான் எனது செல்போனை அறையிலேயே மறந்து வைத்துவிட்டேன். எனக்கு வரும் ஒரே போன் ஆபிஸ் Cab Driver'யிடம் இருந்துதான், அதுவும் Missed Call. Sky walk'ல் புதிதாக திறந்து உள்ள கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும்பொழுதுதான் அறையிலேயே போனை மறந்துவைத்தது நினைவில் வந்தது. சரி, நமக்கு யாரு போன் செய்ய போறா என்று நானும் அதைப்பற்றி வருத்தபடவில்லை.

இரவு பதினோரு மணிக்கு நாங்கள் அறைக்குள் நுழையவும், என்னை தேடிக்கொண்டு ஆபிஸ் நண்பன் நரேன் வருவதற்க்கும் சரியாக இருந்தது. இந்த இரவு நேரத்தில் தேடிக்கொண்டு வந்து இருக்கிறானே என்ன அவசரமோ என்று நரேனிடம் கேட்டபோது " இல்ல சரவணா, உனக்கு மத்தியத்தில் இருந்து போன் பண்ணிட்டு இருக்கிறேன். நீ போனை எடுக்கவே இல்லை. அதான் எனக்கு பயமா போச்சு, சரி ஒரு தடவை நேரில் பார்த்துவிட்டு வந்துடலாம் கிளம்பி வந்தேன்" என்றான்.

பி.கு 1: நரேனின் அறை இருப்பது வேளச்சேரியில், எனது அறை இருப்பது அண்ணா நகரில்.

பி.கு 2: நானும் நரேனும் அறிமுகமாகி நான்கு மாதங்கள்தான் இருக்கும்.

**********************************************************************************

நேற்று நானும் குமாரும் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது, குமார் என்னிடம் " உனக்கு சின்ன வயசுல திக்குவாய் இருந்துச்சா??" என்று கேட்டான். என்னதான் நாம் சில விஷயங்களை மறைத்தாலும், அது சிலருக்கு மட்டும் தெரிந்துவிடுகிறது.

**********************************************************************************

பத்தாவதில் என்னுடன் ஒன்றாக படித்தவன் ரவி. இவனுக்கு வகுப்பில் பட்டப்பெயர் " கேள்விக்கு பிறந்தவன் ". எதாவது கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பான். எங்கள் அறிவியல் வாத்தியார் மிகவும் கண்டிப்பானவர். ஒவ்வொரு அடியும் மின்னல் போல் விழும்.

தனக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது என்று சொல்லி, அவர் வகுப்பில் உள்ள அனைவருக்கும் இனிப்பு தந்தார். " குழந்தையின் பெயர் " என்று ஒரு மாணவன் கேட்டான். அவர் பெயர் சொன்னவுடனே, ரவி கேட்ட அடுத்த கேள்வி,

"சார், குழந்தைக்கு இனிசியல் என்ன?? ". அதன்பிறகு அவனுக்கு தனியாக விருந்து நடந்தது.

**********************************************************************************

வலைப்பதிவு எழுத தொடர்ந்து ஊக்கம் அளித்துவரும் அருண் என்னிடம் சொன்னது " மச்சி, தயவுசெய்து இனிமேல் கவிதை மட்டும் எழுதாதே டா ".

**********************************************************************************

நேற்று நானும் நண்பனும் பேராண்மை திரைப்படத்துக்கு சென்றோம். கம்யூனிச கருத்துக்கள் படம் முழுவதும் வரும் ஒரே காரணத்திற்காக எல்லாரும் இதை தலையில் தூக்கிவைத்து எழுதுகிறார்கள் என்று தோன்றுகிறது. படத்தில்வரும் கம்யூனிச கருத்துகளுக்கு ஒரு சபாஷ் சொன்னாலும் என்னை பொருத்தவரை இது ஒரு " கற்பனை மிகுதியான, மாசாலா தூவிய வழக்கமான தமிழ் திரைப்படம் ".

படம் பார்த்த பின் என் நண்பன் என்னிடம் சொன்னது " ஒரு காடு, ஐந்து பெண்கள், ஒரு ஹீரோ. இதை மட்டும் செல்வராகவனிடம்தந்து இருந்தால் என்னமா விளையாடி இருப்பார் ".

Thursday, November 5, 2009

காதல் தோல்வி - II

வழக்கம்போல்
எல்லா ஆதாரங்களையும் அழித்துவிட்டேன்
இந்த முறை
சற்று ஜாக்கிரதையாகவே செயல்பட்டேன்.

முதலில் அந்த காகிதங்களை கிழித்து
பின், அவற்றை தீயில் எரித்துவிட்டேன்.

நினைவு பொருள் என்று என்னிடம்
இருந்த ஒரேஒரு பேனாவையும் உடைத்து
கடல் நீரில் தூக்கி எறிந்துவிட்டேன்.

இ-மெயில் உரையாடல்களை மொத்தமாக
இன்பாக்ஸில் இருந்து நீக்கிவிட்டேன்.

நினைவுகளை அழிக்க கையில்
எப்பொழுதும் ஒரு ஸ்காட்சை
வைத்து உள்ளேன்.

இனி ஒரு தடயமும் இல்லை.

யாராலும் சந்தேகிக்க முடியாது
யாராலும் கண்டுபிடிக்க முடியாது
யாராலும் நீருபிக்க முடியாது

நீருபித்தாலும்

எங்கள் பிரிவை உங்களால்
தடுக்க முடியாது

இந்த முறை சற்று உரக்கமாகவே
சொல்கிறேன்
எல்லா ஆதாரங்களையும் அழித்துவிட்டேன்.