மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று ஒரு பழமொழி உண்டு. அது எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் பொருந்தும். சில எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கிய சில நாட்களிலேயே ரிப்பேராகிவிடும். சில பொருட்கள் வாரண்டி முடியும் நாளை காலண்டரில் குறித்துவைத்து, அதற்கு அடுத்த நாள் உயிரை விடும். இன்னும் சில எலக்ட்ரானிக் பொருட்கள், "போதும் போதும்" என்று நாம் சொல்லும் வரைக்கும் உழைத்துக்கொண்டே இருக்கும். அப்படி எனக்கு வாய்த்த ஒரு பொருள்தான் Ricoh SP 111 Laser Printer.
SP 111-க்கும் எனக்கும் முன் ஜென்மத்தில் ஏதோ ஒரு பந்தம் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதனால்தான் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து எந்த ரிப்பேரும் இல்லாமல் உழைத்துக்கொண்டே இருக்கிறது.
ஒரு முறை ஒரே நாளில் ஐந்நூறு பேப்பர்கள் கூட பிரிண்ட் அவுட் எடுத்திருக்கிறேன். ஆனால் எந்தப் பிரச்சனையும் செய்ததில்லை.
அலுவலகத்தில் கணினி மாறியது. மேசை மாறியது. UPS மாறியது. பணியாளர்கள் மாறினார்கள். ஆனால் இந்த Ricoh மட்டும் மாறவில்லை. அமைதியாக தனது வேலையைச் செய்துகொண்டே இருந்தது.
இதற்கு நடுவில், தொழில்நுட்ப வளர்ச்சியோடு நாமும் செல்ல வேண்டும் என்று நினைத்து மற்றொரு அலுவலகத்திற்காக HP Wi-Fi Ink Tank Printer ஒன்றை வாங்கினேன். வாங்கிய ஒரே வாரத்தில் Print Head ரிப்பேர்.
பின்னர் சர்வீஸ் சென்டருக்கு போன் செய்து, அவர்கள் புதிய Print Head-ஐ மாற்றுவதற்கு ஒரு மாதம் ஆனது.
அதில் நான் கற்றுக்கொண்ட ஒரு பாடம் என்னவென்றால், HP Customer Care-க்கு போன் செய்து உங்கள் புகாரைப் பதிவு செய்ய வேண்டும் என்றால், நீங்கள் கண்டிப்பாக உங்கள் அலுவலகத்திற்கு அரை நாள் விடுமுறை விட வேண்டும்.
அப்போதுதான் எனக்கு Ricoh-வின் அருமை மீண்டும் புரிந்தது. அது எந்த வசதிகளும் இல்லாத ஒரு சாதாரண லேசர் பிரிண்டர். Wi-Fi இல்லை. Mobile App இல்லை. Cloud Printing இல்லை. ஆனால் ஒரு முக்கியமான விஷயம் இருந்தது — நம்பகத்தன்மை.
இன்று தொழில்நுட்ப உலகில் புதிய வசதிகள் தினமும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஒரு சாதனத்தின் உண்மையான மதிப்பு, அது எத்தனை அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்பதில் இல்லை. அது எவ்வளவு காலம் நம்மை ஏமாற்றாமல் வேலை செய்கிறது என்பதில்தான் இருக்கிறது.
Ricoh பிரிண்டர்கள் தற்போது இந்தியாவில் அதிகம் கிடைப்பதில்லை. அதன் பின்னணியில் ஒரு பெரிய கார்ப்பரேட் கதை உள்ளது.
Ricoh பிரிண்டர்களின் தலைமையகம் ஜப்பானில் உள்ளது. இந்தியாவில் ஒரு கிளை அலுவலகம் மட்டுமே வைத்திருந்தார்கள். தயாரிப்பு அனைத்தும் ஜப்பானில்தான். அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்தியாவில் இருந்த சில நிர்வாகிகள் பல தில்லுமுல்லுகள் செய்து, விற்பனையை குறைத்துக் காட்டியுள்ளனர். Ricoh ஜப்பான் நிறுவனம் ஒரு மறைமுக கணக்கெடுப்பு நடத்தியபோது, இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரிண்டர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவை விற்பனையாகாமல் குடோனில் இருப்பதாக கணக்கில் காட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.
பின்னர் விசாரணையில், குடோனில் எந்த ஸ்டாக்கும் இல்லை. அனைத்தும் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் அவை கணக்கில் பதிவு செய்யப்படவில்லை.
இதற்கு நடுவில் ஆடிட்டிங் வரப்போகிறது என்று தெரிந்தவுடன், இந்திய நிர்வாகிகள் உடனடியாக Fake Invoice-கள் மூலம் விற்பனையை அதிகப்படுத்திக் காட்டினர். எல்லாவற்றையும் Fake Invoice மூலம் காட்டினால் சந்தேகம் வரும் என்பதால், Ricoh பிரிண்டர்களின் விலையை பாதியாக குறைத்து உண்மையான விற்பனையும் செய்தார்கள்.
Ricoh-வின் விற்பனை திடீரென இந்தியாவில் அதிகரித்தது. ஆனால் நூற்றில் தொண்ணூறு விற்பனைகள் Fake Invoice-களாக இருந்தன.
அந்த நேரத்தில்தான் நான் இந்த SP 111 பிரிண்டரை Paytm Mall App-ல் வெறும் ₹1,800-க்கு வாங்கினேன்.
இந்தக் கதையெல்லாம் நமக்கு தேவையில்லாதது. நான் சொல்ல வந்தது வேறு.
சமீபத்தில் எனது கணினி ஒன்றை Ubuntu-வில் இருந்து Linux Mint-க்கு மாற்றினேன். Ubuntu-வில் நன்றாக வேலை செய்த SP 111, Linux Mint-ல் பிரிண்ட் செய்ய மறுத்தது.
Printer-ஐ Plug-in செய்த உடனேயே Linux Mint அதை தானாகவே கண்டுபிடித்து நிறுவியது. ஆனால் பிரிண்ட் மட்டும் வரவில்லை.
/var/log/cups/error_log கோப்பைப் பார்த்தபோது,
"Cups-brf must be called as root"
என்று பிழைச் செய்தி காட்டியது.
sudo போட்டு CUPS-ஐ மறுபடியும் நிறுவிப் பார்த்தேன். Driver-ஐ நீக்கி மீண்டும் சேர்த்துப் பார்த்தேன். எதுவும் வேலை செய்யவில்லை.
பதினைந்து வருடங்களாக என்னை ஏமாற்றாத பிரிண்டர், இப்போது Linux Mint-க்கு வந்தவுடன் பிடிவாதம் பிடித்தது போல இருந்தது.
இறுதியில் Google ஆண்டவர் அருளால் கீழே உள்ள கட்டளைகள் கிடைத்தன.
அவற்றை இயக்கியவுடன், பல நாட்களாக கோமாவில் இருந்த நோயாளி கண் திறப்பது போல, Ricoh SP 111 மீண்டும் உயிர்பெற்று பிரிண்ட் செய்ய ஆரம்பித்தது.
sudo apt-get install jbigkit-bin inotify-tools
git clone https://github.com/droidzone/ricoh-sp100.git
sudo cp pstoricohddst-gdi /usr/lib/cups/filter/
sudo chown root:root /usr/lib/cups/filter/pstoricohddst-gdi
பின்னர்:
Add Printer → Choose Ricoh SP 111 → Select PPD File → RICOH_Aficio_SP_111.ppd
அவ்வளவுதான். மீண்டும் பழைய Ricoh திரும்பி வந்துவிட்டது.
இன்னும் பல வருடங்களுக்கு இந்த பிரிண்டர் வேலை செய்யும் என்று நினைக்கிறேன்.
ஒருவேளை, அடுத்ததாக நான் கணினியை மாற்றும் போது கூட இந்த Ricoh வேலை செய்து கொண்டிருக்கும். ஆனால் அப்போது Linux Mint இருக்குமா, Ubuntu இருக்குமா, இல்லை நானே இருப்பேனா என்பது மட்டும் தெரியாது.
பின்குறிப்பு:
Journal Economics-ல் வெளியான RICOH India Scam பற்றிய ஆய்வு:
https://journaleconomics.org/index.php/AJEFM/article/view/114
No comments:
Post a Comment