Thursday, May 12, 2022

.

வாழ்க்கையில் கவலையே இல்லாதவன் ஒரு காதல் கவிதை எழுதுகிறான்.

வாழ்க்கையில் கவலையே இல்லாத இன்னொருவன் அந்தக் காதல் கவிதையைப் படித்து, ஒரு காதலியைத் தேடுகிறான். ஒரு கட்டத்தில் ஏமாற்றத்தால் கதறி அழுகிறான்.

பல நாட்களுக்குப் பின், முன்னவனும் பின்னவனும் ஒரு மதுபான விடுதியில் சந்திக்க நேர்ந்தது. நம்மைப் போலவே அவர்களுக்கும் யார் முன்னவன், யார் பின்னவன் என்ற குழப்பம் ஏற்பட, ஒரு நிம்மதியுடன் இருவரும் ரயிலே வராத தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து உறங்கினர்.

Tuesday, February 8, 2022

.

திருமணமான ஒருவன் தனது 35-வது வயதில் முதல் முறையாக ஒரு காதல் கவிதை எழுதியபோது, இந்தச் சமூகம் அவன் மீது முதல் சந்தேகப் பார்வையை வைத்தது.

முதலில் அவனுக்கு ஒரு காதலி இருப்பதாகச் சொல்லப்பட்டது. பின்னர், அவளுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகக் கதை கோர்க்கப்பட்டது. அவன் தனது பத்தாவது காதல் கவிதையை எழுதியபோது, அவள் அவனுடைய பழைய கல்லூரிக் காதலி என்றும், அவளுடைய கணவன் இரண்டு வருடங்களுக்கு முன்னர் விபத்தில் இறந்துவிட்டதாகவும் ஒரு உபகதை சேர்க்கப்பட்டது.

யாரோ ஒருவன் எழுதும் கவிதையால், யாரோ ஒருத்தியின் தனிப்பட்ட வாழ்க்கை விவாதத்திற்கு உட்படுவதை எண்ணி, இந்தச் சமூகத்தைச் சபித்துக்கொண்டே டாஸ்மாக் பாரில் அன்றைய காதல் கவிதையை எழுதி முடித்தான்.

பின்னர், “வீட்டுக்கு வரும்போது அண்ணாச்சி கடையில் ஒரு பாக்கெட் தோசை மாவு வாங்கி வர வேண்டும்” என்று மனைவி சொன்னதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக்கொண்டான்.

Sunday, September 29, 2013

மீண்டும் சினிமாவைப் பற்றி ஒரு பதிவு

இரண்டு நாட்களுக்கு முன்னால் நண்பனிடம் தொலைபேசியில் பேச நேர்ந்தது. இயக்குநர் ராமின் தீவிர பக்தன் அவன்.

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஆனந்த விகடன் "தங்க மீன்கள்" திரைப்படத்திற்கு குறைவான மார்க் போட்டபோது, இரவு இரண்டு மணிக்கு போன் செய்து ஒரு மணி நேரம் அழுது தீர்த்தவன். நல்லவேளையாக ஒரு மணி நேரத்தில் போன் லைன் தானாகவே கட் ஆகிவிட்டது. போனில் பேட்டரி தீர்ந்துவிட்டதா அல்லது போதை தீர்ந்துவிட்டதா என்று தெரியவில்லை. இயேசுவின் பெயருக்கு நன்றிகள் சொல்லிவிட்டு நானும் தூங்கிவிட்டேன்.

அடுத்த நாள் காலையில் எழுந்தவுடனேயே மனைவியிடம் இருந்து வந்த முதல் கேள்வி:

"நைட் இரண்டு மணிக்கு போனில் பேசுகிற அளவுக்கு அப்படி என்ன முக்கிய விஷயம்?"

மீண்டும் அதே நண்பனிடமிருந்து போன் வந்தவுடனேயே, ஒரு விஷயத்தை மட்டும் மனதில் உறுதியாக நிலைநிறுத்திக்கொண்டேன்.

"இந்த முறை சினிமாவைப் பற்றி மட்டும் ஒன்றுமே பேசிவிடக் கூடாது."

ஆனால் இந்தப் பாழாய்ப் போன நாக்கு எங்கே நாம் சொல்வதைக் கேட்கிறது?

வழக்கம்போல் சனியன், நாக்கில் வந்து ஸ்டூல் போட்டு உட்கார்ந்துகொண்டு என்னைப் பார்த்து கேலியாகச் சிரித்தது. என்னையும் அறியாமல் என் நாக்கிலிருந்து ஒரு கேள்வி எழுந்தது.

"மச்சி, மூடர்கூடம் சூப்பரா இருக்காமே? பார்த்தியா? நம்ம ஊருல இரண்டே நாளில் தூக்கிவிட்டான். என்னால் பார்க்க முடியாம போச்சு" என்றேன்.

இந்தக் கேள்விக்காகவே காத்திருந்தவன் போல, கடகடவென்று பேசத் தொடங்கிவிட்டான்.

"மூடர்கூடம் ஒரு ஆங்கில திரைப்படத்தின் காப்பி. அதற்கு ஆனந்த விகடன் 50 மார்க் போட்டுள்ளது. ஆனால் தங்க மீன்கள் திரைப்படத்திற்கு 44 மார்க்தான். காப்பியடித்த திரைப்படத்திற்கு அதிக மார்க்; ஆனால் ஒரிஜினலாக எடுத்தால் மரியாதை இல்லை."

இப்படி அரை மணி நேரம் புலம்பினான். அவனை ஒருவழியாக சமாதானப்படுத்தி போனை கட் செய்தேன்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இப்படி இயக்குநர் ராமின் மீது பைத்தியமாக இருக்கும் நண்பர்கள் பலரை எனக்குத் தெரியும் (என்னையும் சேர்த்து).

எங்கள் நண்பர் வட்டத்தில் இயக்குநர் ராமை எப்பொழுதுமே "எங்கள் இயக்குநர்" என்றுதான் அழைப்போம்.

எங்கள் அனைவருக்குமே "கற்றது தமிழ்" திரைப்படத்தின் மீதும் இயக்குநர் ராமின் மீதும் ஏன் அப்படி ஒரு பைத்தியம் என்று யோசித்துப் பார்த்தபோது, எனக்குத் தோன்றியது இதுதான்.

"கற்றது தமிழ்" திரைப்படம் வந்த சமயத்தில், நாங்கள் கல்லூரி முடித்து வேலைக்காகத் தீவிரமாக அலைந்துகொண்டு இருந்தோம். தொடர்ந்து எல்லா நிறுவனங்களிலும் நிராகரிக்கப்பட்டுக்கொண்டு இருந்தோம். கல்லூரிக் காதல்கள் ஒவ்வொன்றாக 'குட் பை' சொல்லிப் பிரிந்துகொண்டு இருந்தன.

இன்னும் எத்தனை நாட்களுக்கு அப்பாவிடமிருந்து பணம் கேட்பது என்ற பயம்.

"கற்றது தமிழ்" திரைப்படத்தின் பிரபாகரன் கதாபாத்திரத்தை எங்களில் ஒருவனாகப் பார்த்தோம். அவன் தோல்வியைப் பார்த்து நாங்களும் அழுதோம். அவனைப் போலவே மரணம் ஒன்றுதான் சரியானது என்று நாங்களும் நம்பத் தொடங்கினோம்.

(என் நண்பன் ஒருவன் பூட்டிய அறைக்குள் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டதும் இதே காலத்தில்தான் நடந்தது.)

படித்து பட்டம் முடித்துவிட்டு வேலைக்காக சென்னை வீதிகளில் அலைந்துகொண்டு இருக்கும் இன்றைய இளைஞர்கள் கூட "கற்றது தமிழ்" திரைப்படத்தைப் பார்த்தால், பிரபாகரனை தங்களின் ஒருவனாக உணர்வார்கள். அதுவே எங்கள் இயக்குநரின் வெற்றி.

"தங்க மீன்கள்" திரைப்படமும் அப்படிப்பட்ட திரைப்படம்தான். குழந்தைகளைப் பெற்ற எல்லா அப்பாக்களும் தங்களையும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கண்டிப்பாக கல்யாணியாக உணர்வார்கள்.

"தங்க மீன்கள்" திரைப்படத்தைப் பற்றி பலர் தெளிவாக எழுதிவிட்டதால், இந்தப் பதிவை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

குறிப்பு:


"ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" திரைப்படத்தைப் பற்றி எழுதுவதற்காகத்தான் இந்தப் பதிவை எழுதத் தொடங்கினேன். ஆனால் எழுதி ரொம்ப நாட்களாகிவிட்டதால், சொல்ல வந்த விஷயத்தையே மறந்து எங்கோ சென்று விட்டேன்.

"ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். இன்னும் "மூடர்கூடம்" திரைப்படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் எனக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.






Thursday, July 11, 2013

கேள்வி-பதில்

கேள்வி:

"Gitanjali Gems ஷேரின் விலை தொடர்ந்து 20 நாட்களாகக் குறைந்துகொண்டே வருகிறதே, என்ன காரணம்? இப்போது இந்த ஷேரை வாங்கினால் ஒரே மாதத்தில் நல்ல லாபம் பார்க்கலாம் என்று நண்பன் சொல்கிறான். நம்பி வாங்கலாமா?" – கதிரேசன், விருதுநகர்

பதில்:

அன்பும், ஷேர்கள் வாங்கப் பணமும் உள்ள கதிரேசன் அவர்களுக்கு வணக்கம்.

மின்னஞ்சலில் நீங்கள் அனுப்பிய கேள்வியைப் பார்த்தவுடனேயே எனக்கு ஒரு அதிர்ச்சி. நீங்கள் எதற்காக இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள் என்று. இதற்கு இரண்டே காரணங்கள்தான் இருக்கக்கூடும். அவை:

1) ஒருவேளை நேற்று நான் எழுதிய MMTC பற்றிய பதிவின் தலைப்பை மட்டும் நீங்கள் படித்திருக்கலாம். ஆகவே, என்னை நீங்கள் ஒரு பங்குச்சந்தை நிபுணர் என்று கருதி இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கலாம். இதுதான் காரணமாக இருப்பின், தயவுசெய்து அந்தப் பதிவை முழுமையாகப் படிக்கவும். அதன் பின் நீங்களே இந்த மின்னஞ்சலை Recall செய்துவிடுவீர்கள்.

அல்லது

2) இரண்டாவது காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை மீண்டும் நீங்கள் மின்னஞ்சல் செய்தால் அந்தக் காரணத்தைச் சொல்லிவிடவும். நானும் என்னைத் திருத்திக்கொள்ள வசதியாக இருக்கும்.

இனி உங்கள் கேள்விக்கான பதில்.

முதலில் Gitanjali Gems ஷேரின் விலை குறையக் காரணம். வேறு என்ன? அகலக் கால்தான்.

2000 ஆண்டுகளுக்கு முன்னால் நம் வள்ளுவர் ஒரு குறளில் சொன்னாரே (நானும் படித்ததில்லை; ஆனால் கண்டிப்பாக 1330 குறள்களில் ஏதாவது ஒன்றில் சொல்லியிருப்பார்), அதன்படி நடந்து இருந்தால் இப்போது பிரச்சனையே வந்திருக்காது.

Gitanjali Gems நிறுவனம் கடனில் தத்தளித்துக்கொண்டு இருக்கிறது. யாரிடமோ வாங்கிய ஒரு பெரிய கடனை இன்னும் ஒரு மாதத்தில் அது திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்தக் கடன் 500 கோடிக்கு அருகில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்தக் கடன்களைச் சமாளிப்பதற்காக Gitanjali Gems நிறுவனம் 1 வருட, 2 வருட, 3 வருட Deposit-களை வாங்கத் தொடங்கியுள்ளது. அந்த Deposit-களுக்கான வட்டி விகிதங்கள் முறையே 11.5%, 12%, 12.5%.

இது கூட்டுவட்டி முறை என்பதால், நீங்கள் 3 வருடம் Deposit செய்தால் உங்களுக்குக் கிடைக்கும் வட்டி விகிதம் 14.89% என்று இருக்கும்.

இதை எதற்காக இப்போது சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். எனக்குத் தெரிந்தவற்றை யாரிடமாவது சொல்ல வேண்டாமா? என் மனைவியிடமா சொல்ல முடியும்?

சரி, Gitanjali Gems ஷேரை இப்போது வாங்கலாமா என்று கேட்கிறீர்கள். நானும் ஒரே வார்த்தையில் "வேண்டாம்" என்று சொல்லிவிட முடியும். ஆனால் அப்படிச் சொன்னால் நன்றாகவா இருக்கும்? ஆகவே, "வேண்டாம்" என்பதை இப்போது நான் சுற்றிவளைத்துச் சொல்லப் போகிறேன்.

கதிரேசன் அவர்களே, நீங்கள் விருதுநகரிலிருந்து இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். ஆகவே, நீங்கள் கண்டிப்பாக ஏதாவது ஒன்றின் மொத்த விற்பனையாளராக இருக்க வேண்டும். ஏனென்றால் விருதுநகரில் அவர்கள்தான் அதிகம்.

நீங்கள் சொல்லும் அந்த நண்பர் உங்கள் தொழில் Partner-ஆக இருக்கக்கூடும். அல்லது உங்கள் கல்லூரி நண்பர், பள்ளி நண்பர், பக்கத்து வீட்டுக்காரர், எதிர்வீட்டுக்காரர் என்று இப்படி யாராவது ஒருவராக இருக்கலாம்.

எதிர்வீட்டுக்காரராக இருக்க வாய்ப்பு குறைவுதான். எனக்கும் ஒரு எதிர்வீட்டுக்காரர் இருக்கிறார். வருடத்திற்கு இரண்டு கார்கள் மாற்றுவார். என்னைத் தவிர எல்லோரிடமும் சிரித்துத்தான் பேசுவார்.

என் மனைவியிடம் இதைப்பற்றி ஒருமுறை சொன்னபோது, அவள் சொன்னது:

"எல்லா எதிர்வீட்டுக்காரர்களும் இப்படித்தான்."

உண்மைதானா?

முன்னரே சொன்னதுபோல், Gitanjali Gems ஷேரை வாங்க வேண்டாம். அதன் விலை இன்னும் குறையும் என்று எல்லா டிவி, பேப்பர்களிலும் சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் பேச்சை எப்போதும் நம்பக் கூடாது.

இரண்டு மாதங்களுக்கு முன்னால் Gitanjali Gems ஷேரின் டார்கெட் 800 ரூபாய் என்று சொன்னார்கள்.

கடைசியாக என்னுடைய பெரிய வேண்டுகோள். இந்த ஷேர் மார்க்கெட் பக்கம் போக வேண்டாம்.

அப்படி உங்களிடம் பணம் நிறைய இருப்பின், என்னிடம் கொஞ்சம் தரவும். வருடத்திற்கு 18 சதவீதம் வட்டி தருகிறேன்.

இன்றைக்குத்தான் KVB வங்கியில் 20 லட்சத்திற்கு பிசினஸ் லோன் அப்ளை செய்திருக்கிறேன். ஒருவேளை லோன் கிடைத்தால், லோன் கிடைத்த அடுத்த நாளே உங்களின் அசலைக் கொடுத்துவிடுவேன்.

அப்படி லோன் கிடைக்கவில்லை என்றால், இருக்கவே இருக்கின்றன Gitanjali Gems நிறுவனத்தின் 1 வருட, 2 வருட, 3 வருட Deposit ஸ்கீம்கள்.

நன்றி,

வாழ்க வளமுடன்,

அசோக்.

(பின்குறிப்பு:

பேயோனின் "கடிதம்" பதிவுகளைப் படித்த பின் எழுதியது. பேயோனின் "கடிதம்" பதிவுகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.)










Wednesday, July 10, 2013

MMTC'யும் 16,000 கோடி ரூபாயும்.

முதலில் ஒரு விஷயம். இந்தியாவின் Dis-Investment Policy சரியா, தப்பா என்பதைப் பற்றியது அல்ல இந்தக் குறிப்பு. எண்களைப் பற்றிய ஒரு சின்ன விளையாட்டு, அவ்வளவே.

சென்ற ஆண்டு செபி ஆணையிட்டபடி, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் குறைந்தது 25% பங்குகளையாவது பொதுச் சந்தையில் (பொதுமக்கள், மியூச்சுவல் பண்டுகள், நிதி நிறுவனங்கள் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்) விற்றிருக்க வேண்டும். அதாவது, அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களிடம் 75% பங்குகள் மட்டுமே இருக்க வேண்டும்.

இந்த ஆணை அரசு நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஆனால் அரசு நிறுவனங்களைப் பொறுத்தவரை இந்த சதவீத எண்கள் 10% மற்றும் 90%.

இப்போது நெய்வேலியில் நடந்துகொண்டிருக்கும் போராட்டத்திற்கும் இதுதான் காரணம்.

இந்த ஆணையைச் செயல்முறைக்குக் கொண்டுவர ஏதுவாக, ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் OFS மூலம் புதிய பங்குகளை விற்கலாம் என்று செபி அறிவித்தது.

OFS என்றால் என்ன? எதற்காக 75% - 25%? எதற்காக இப்படி ஒரு ஆணை? இதனால் யாருக்குப் பயன்?

என்ற கேள்விகளுக்குப் பதில் தேடிக்கொண்டு போனால், இந்தப் பதிவு கன்னித் தீவு போல நீண்டுவிடும். ஆகவே, மேட்டருக்கு வருவோம்.

பங்குச்சந்தையில் உள்ள அனைவருக்குமே MMTC-யைப் பற்றித் தெரிந்திருக்கும். MMTC ஒரு அரசு நிறுவனம். ஒரு காலத்தில் இதன் பங்கு 18,000 ரூபாய் வரை விற்கப்பட்டது. பின்னர் Split மூலம் 1000 ரூபாய்க்கு வந்தது.

இது பழைய கதை.

இப்போது MMTC-யை Dis-Investment Policy காரணமாக OFS மூலம் அதன் பங்குகளை கடந்த மாதம் விற்றார்கள். OFS-ல் ஒரு பங்கின் விலை 60 ரூபாய் என்று நிர்ணயம் செய்தார்கள்.

இந்த விற்பனை மூலம் இந்திய அரசாங்கத்துக்குக் கிடைத்த பணம் 560 கோடி ரூபாய்.

இந்த விற்பனை நடந்தபோது MMTC-யின் ஒரு பங்கு 200 ரூபாய்க்கு பங்குச்சந்தையில் விற்றுக்கொண்டு இருந்தது.

200 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்த பங்கினை அரசாங்கம் 60 ரூபாய்க்கு விற்றதால், MMTC நிறுவனப் பங்கின் விலை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து குறையத் தொடங்கியது.

இன்றைக்கு NSE-யில் அதன் விலை 67.80.

அதாவது, MMTC பங்கினை விற்பனை செய்ததன் மூலம் அரசாங்கத்துக்கு லாபம் 560 கோடி ரூபாய்.

ஆனால் MMTC நிறுவனத்தின் சந்தை மதிப்பில் 16,000 கோடி ரூபாய் குறைந்துள்ளது.

இதுவே MMTC ஒரு தனியார் நிறுவனமாக இருந்தால் இப்படி நடந்திருக்குமா?

MMTC நிறுவனத்தை Dis-Investment செய்யாமல் De-list செய்திருந்தால், இந்தச் சரிவை மிகவும் சுலபமாகத் தடுத்திருக்கலாம்.

இல்லை, Dis-Investment மூலம் Liquidity அதிகமாகும். MMTC நிறுவனத்தின் உண்மையான மதிப்பு இதுதான் என்கிறார்கள்.

சரி, அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே.

இப்போது MMTC-யின் மதிப்பை அதிகமாகக் காட்டுவதால் யாருக்கு என்ன நஷ்டம்?

எது எப்படியோ, நான் MMTC பங்கு எதையும் வாங்கவில்லை.

MMTC பங்கு வாங்காமலேயே எனது Portfolio 70% நஷ்டத்தில்தான் போய்க்கொண்டு இருக்கிறது.







Sunday, June 23, 2013

மோடி Vs மோதி

நம் வருங்கால வல்லரசு இந்தியாவின் வருங்கால பிரதமர் என்று எண்ணப்படும், மோடி (என்கின்ற) மோதி பற்றிய ஒரு பதிவு எழுத வேண்டும் என்று ரொம்ப நாட்களாகவே ஆசை.

சரி, அந்த ஆசையை நிறைவேற்றிவிடுவோம் என்று உட்கார்ந்தால், மனதில் ஒரு சின்ன சந்தேகம்.

மோதி-யா அல்லது மோடி-யா?

சற்று முன் பார்த்த "புதிய தலைமுறை" தொலைக்காட்சியில் "மோதி" என்றுதான் சொன்னார்கள். ஆனால், உள்ளதை உள்ளபடி சொல்லும் ஒரே நாளிதழ் என்று என் அப்பா நம்பும் "தினமலர்" செய்தித்தாளில் "மோடி" என்றுதான் போடுகிறார்கள்.

இப்போது நான் நம் வருங்கால பிரதமரை எப்படி அழைப்பது?

"மோடி"யா அல்லது "மோதி"யா?

ஒருவேளை நான் அவர் பெயரைத் தவறாக எழுதிப் போய், நாம் அனைவரும் நினைப்பது போல் அவர் பிரதமராகி, இந்தப் பெயர் பிரச்சனை அவருக்குத் தெரிய வந்தால், என் நிலைமை என்ன ஆகும்?

அவ்வளவு பெரிய கலவரத்தையே நம் இந்திய மக்கள் நினைவிலிருந்து அழிக்கச் செய்தவர் ஆயிற்றே?

இப்போது கூட நான் அந்தக் கலவரத்தின் பெயரையும் ஆண்டையும் நினைவுக்குக் கொண்டு வர முயற்சிக்கிறேன். ஆனால் முடியவில்லை.

அப்படிப்பட்டவரின் பெயரை நான் தவறாக எழுதினால் நன்றாக இருக்குமா?

ஆகவே, மோடி என்கின்ற மோதியைப் பற்றியோ, அல்லது மோதி என்கின்ற மோடியைப் பற்றியோ, இப்போதைக்கு எந்தப் பதிவும் எழுதும் எண்ணம் இல்லை.

வாழ்க பாரதம்.






Monday, March 25, 2013

கனவுக்கும் நிஜத்துக்கும் நடுவில்

மீண்டும் பைத்தியக்கார எண்ணங்கள் மனதில் துளிர்விட ஆரம்பித்துவிட்டன. எதனால் இந்த எண்ணங்கள் என்று ஆராயத் தொடங்கினால், அது பிரச்சனைகளை இன்னும் பூதாகரமாக்கிவிடும்.

காலை ஏழு மணிக்கு மீண்டும் கண்கள் தூங்கச் சென்றுவிட்டன. விதவிதமான கனவுகள். மொத்தம் பத்துக்கும் குறையாத கனவுகள் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஏதோ ஒரு கனவிலிருந்து திடீரென்று அலறி அடித்துக்கொண்டு எழுந்தால், மணி வெறும் 7:05 தான்.

இந்த ஐந்து நிமிடங்களில் கிட்டத்தட்ட பத்து கனவுகள்.

எழுந்தபோது அந்தப் பத்து கனவுகளும் நினைவில் இருந்தன. ஆனால் இப்போது நினைவுக்குக் கொண்டு வர முயற்சித்தால், ஒரு கனவு கூட நினைவில் வர மறுக்கிறது.

ஒருவேளை தூக்கத்தில் நான் பத்து கனவுகள் கண்டதாகக் கண்டது கூட கனவுதானா?

இல்லை, பத்து கனவுகள் கண்டது உண்மைதான். ஆனால் நினைவில் வரத்தான் மறுக்கிறது.

ஒருவேளை அதே கனவுகள் மீண்டும் வந்தால், எங்கேயோ நிஜத்தில் நடந்ததாக அப்போது தோன்றலாம். அது நிஜம் அல்ல, கனவுதான் என்று அந்தக் கனவுக்கு எப்படி புரியவைப்பது?

இந்தக் கனவுகள் சம்பந்தமாகத்தான் எத்தனை புத்தகங்கள், எத்தனை திரைப்படங்கள்.

Inception திரைப்படம் எனக்குப் புரிந்த அளவுக்குக் கூட, கனவுகளைப் பற்றி நான் படித்த எந்தப் புத்தகங்களும் எனக்குப் புரியவில்லை.

(கனவுகளைப் பற்றி நான் படித்த புத்தகங்கள் மற்றும் பார்த்த திரைப்படங்களில் எனக்கு Inception மட்டுமே கொஞ்சம் புரிந்தது என்பதைத்தான் கொஞ்சம் குழப்பி மேலே எழுதியிருக்கிறேன். எழுதிய பின் படித்துப் பார்த்தபோது, எழுதிய எனக்கே அந்த வரிகள் புரியவில்லை என்றாலும், ஏனோ அதை நீக்க மனது வரவில்லை.)

எனக்கு சில கனவுகள் மீண்டும் மீண்டும் வருகின்றன.

மீண்டும் மீண்டும் என்பதற்கு தினமும் என்று அர்த்தம் இல்லை.

கொஞ்ச நாட்களாக நான் பறப்பது போல் எனக்குக் கனவு வருகிறது.

யாரோ என்னைத் துரத்துகிறார்கள். நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன். கொஞ்ச நேரம் பறக்கவும் செய்கிறேன்.

பறப்பது எனக்குக் கடினமான வேலையாகத் தெரியவில்லை. தினமும் நான் பறப்பவன் போல் பறந்துகொண்டு இருக்கிறேன்.

பறப்பது என்றால் பறவையைப் போல் அல்ல. Matrix திரைப்படத்தில் ஓடிப்போய், கால்களை தரையில் அமர்த்திய பின் பறப்பார்களே, அது போல்.

நான் மட்டும்தான் பறக்கிறேன். என்னைத் துரத்துபவர்கள் பறக்கவில்லை. அவர்கள் ஓடித்தான் வருகிறார்கள்.

நான் பறப்பதைப் பார்த்து அவர்கள் வியந்ததாகவும் தெரியவில்லை.

அவ்வளவுதான் நினைவில் இருக்கிறது.

ஆனால் எழுந்த பின் இப்போது நினைத்துப் பார்த்தால், அதே போல் நான் பறப்பது போன்ற கனவுகள் அடிக்கடி எனக்கு வருவது போல் தோன்றுகிறது.

இன்னொரு நாள் — ஒரு கனவில், ஒரு அறையில் நான் மட்டுமே இருக்கிறேன்.

எனக்குப் பறப்பது மறந்துவிடுகிறது.

நானும் எவ்வளவோ முயற்சி செய்கிறேன். ஆனால் பறக்க முடியவில்லை.

என்னுடைய கையாலாகாத்தனத்தை நினைக்கும்போது கண்களில் தண்ணீர் வருகிறது.

கதறி அழுகிறேன்.

இன்னொரு கனவில் ஒவ்வொரு வீட்டு மொட்டைமாடியாகப் பறந்துகொண்டு இருக்கிறேன்.

என்னுடன் இன்னொருவனும் வருகிறான்.

எங்கள் இருவரையுமே யாரோ துரத்துகிறார்கள்.

நாங்கள் ஓடியும் பறந்தும் அவர்களிடமிருந்து தப்பிக்கிறோம்.

ஒரு கட்டத்தில் நாங்கள் இருவரும் பிரிகிறோம்.

இப்போது நான் மட்டும் தனியாக ஓடிக்கொண்டு இருக்கிறேன்.

ஒரு கோயிலின் கோபுரங்களில் ஒளிந்துகொண்டு இருக்கிறேன்.

அங்கேயிருந்து கோயிலுக்குள் எட்டிப்பார்க்கிறேன்.

உள்ளே சிறுவர்கள் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

சொல்லப்போனால், மேலே சொன்ன கனவில் எனக்கு "நானும் அவனும்" பிரிவது வரைதான் நினைவில் இருக்கிறது.

அதற்குப் பின் எழுதியது எல்லாம் நானே எழுதியது.

இல்லை, அதுவும் கனவில் வந்ததுதான் என்று உள்மனம் சொல்கிறது.

உண்மையாக அது கனவில் வந்ததா, இல்லை நானே கதைகட்டி எழுதுகிறேனா என்று தெரியவில்லை.

என் பைத்தியக்கார எண்ணங்களைப் பற்றி சொல்ல வந்த நான், கனவுகளோடு முடித்துக்கொள்கிறேன்.

பைத்தியக்கார எண்ணங்களைப் பற்றி இன்னொரு முறை எழுதுகிறேன்.

அதற்கு முன்னால் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி —

"நீ கடைசியாக ஒரு பைத்தியத்தை எப்போது நேரில் பார்த்தாய்?" என்று யாராவது உங்களிடம் கேட்டால், உங்கள் பதில் எப்படியாக இருக்கும்?

Wednesday, February 13, 2013

நண்பர் ஆறுமுகத்தின் ஆராதனாவுக்காக.....

கவிதைகளாலும் வார்த்தைகளாலும் உருவான ஆராதனாவுக்கு உருவம் கொடுக்க முயற்சித்து கொண்டு இருக்கிறேன். யாரோ ஒருவரின் ஆராதனாவுக்கு நான் உருவம் கொடுப்பது தவறான செயல்தான் என்ற போதிலும், இனியும் ஆராதனாவை வெறும் வார்த்தைகளால் மட்டுமே பார்க்க நான் தயாரில்லை. ஆராதனாவுக்கு ஒரு உருவம் தேவை. வார்த்தைகளுக்கு உருவம் கொடுப்பதில் நான் கைதேர்ந்த வித்தகன் கிடையாது, சொல்ல போனால் வார்த்தைகளுக்கு உருவம் கொடுப்பது இதுதான் எனக்கு முதல் முறை. இதோ ஆராதனாவுக்கு உருவம் கொடுக்க தொடங்கிவிட்டேன். முடிந்தவுடன் சொல்லி அனுப்புகிறேன், வந்து வாழ்த்திவிட்டு போங்கள்.

முடிவில்லா கதை


"நீ இதை கதையாக எழுதலாம்" என்று அசோக் என்னிடம் சொன்ன "அவனுக்கும், அவன் நண்பனுக்கும்" நடந்த உரையாடலை வைத்துதான் இந்த கதையை எழுதுகிறேன். இந்த கதையை எழுதுவதற்கு அசோக் ஒரே ஒரு நிபந்தனைதான் போட்டான் அது " எந்த காரணம் கொண்டும் அவனின் நண்பனின் பெயரை எங்கேயும் எழுதிவிட கூடாது" என்பதே.

இந்த கதையை நீங்கள் படிக்கும் முன்னர் சில விசயங்கள்.

"இணையம்", இதற்கு இன்னொரு அர்த்தம் வேகம் என்று நினைக்கிறேன். இணையம் வந்தபிறகு எல்லாவற்றிலும் ஒரு வேகம். அது நீங்கள் செய்யும் வேலையாகத்தும், காதலாகத்தும், நட்பாகத்தும் எல்லாவற்றிலும் ஒரு வேகம். அதே போல் அவை வந்த வேகத்தில் உடனே மறைந்தும் விடுகிறது. நீங்கள் ஒருவனின் உயிர் நண்பன் என்றால் கண்டிப்பாக அவனின் Facebook'லும் நண்பனாக இருக்க வேண்டும். அப்படியில்லை என்றால் நீங்கள் இருவரும் தோழர்கள் இல்லை. உங்களுக்கு ட்விட்டர் பற்றியும் தெரிந்திருக்கும், அசோக்கிற்கும் அவனது ட்விட்டர் நண்பனுக்கும் இடையில் நடந்த உரையாடல்தான் கதை. நான் முன்னரே சொன்னது போல், அசோக் என்னிடம் காட்டிய இணைய உரையாடல்களை வைத்துதான் இந்த கதையை எழுதுகிறேன். ப்ரைவசி கருதி சிலவற்றை அவன் என்னிடம் காட்டாமல் இருந்திருக்கலாம். ஆகவே எனக்கு கிடைத்த ஆதாரங்களை வைத்து இந்த கதையை உருவாக்க முயற்சித்து இருக்கிறேன்.

அசோக் சொன்ன கதையை வைத்து நானே எழுதிய ட்விட்டர் மற்றும் இ-மெயில் உரையாடல்கள்தான் கிழே உள்ளவை. இதில் எது ட்விட்டர் உரையாடல், எது இ-மெயில் உரையாடல் என்பதை நீங்களே முடிவு செய்துக்கொள்ளவும்

சகா, உனது வலைப்பதிவை படித்தேன். நன்றாக எழுதுகிறாய், தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள்.


நன்றி நண்பா. தொடர்ந்து படிக்கவும்.

சகா! நீங்க மொபைல் மூலமா ட்விட் பண்றதா சொல்லியிருந்தீங்க. என்ன மாடல்?
லேப்ல பண்ற மாதிரியே எல்லா ட்விட்டர் ஆப்சனும் பண்ணமுடியுமா? ஏதாச்சும் டிரா பேக் இருக்குதா சகா!?


சகா,  இப்பொழுது உள்ள எல்லா செல்போனிலிலும் தமிழில் டைப் செய்யும் வசதி வந்துவிட்டது. நான் இப்பொழுது உபயோகப்படுத்துவது சோனி எக்ஸ்பீரியா. இது ஆண்ட்ராய்டு மாடல். எல்லா ஆண்ட்ராய்டு மாடல் போன்களிலும் தமிழில் டைப் செய்யாலாம், அதற்கு "தமிழ் விசை" என்ற மென்பொருள் தேவை. இதை இலவசமாக இணையத்தில் இருந்து தரவிறக்கி கொள்ளலாம். தமிழ் பக்கங்களை படிக்க "Opera Mini" என்ற மென்பொருள் இருக்கிறது. இந்த மென்பொருள் நோக்கியா மற்றும் ஐ-போனுக்கும் உபயோகப்படுத்தலாம். இப்பொழுதுலாம், தமிழில் டைப் செய்வது ரொம்ப சுலபம் சகா. உங்களுக்கு இன்னும் சந்தேகம் என்றால், தங்கள் மொபைல் நம்பர் தரவும், நான் போன் செய்து விளக்குகிறேன். தங்களுடைய போனின் மாடல் என்ன??

உனது இ-மெயிலுக்கு நன்றி நண்பா. சில சொந்த பிரச்ச்னைகளால் கடந்த மூன்று மாதங்களாக செல்போன்கள் உபயோகப்படுத்துவது இல்லை. செல்போனில் எப்படி டைப் செய்ய முடியும் என்ற சந்தேகத்தால் அந்த கேள்வியை கேட்டேன். தவறாக நினைக்க வேண்டாம். மற்றபடி நாம் ட்விட்டர் மற்றும் மெயில் மூலமே பேசிக்கொள்வோம்.

என்னது, இந்த நூற்றாண்டில் போன் உபயோகப்படுத்தாத மனிதனா??? ஆச்சர்யம் தான். எப்படி சகா இது சாத்தியமானது. நானும் பல முறை இப்படி முயற்சி செய்துள்ளேன். ஆனால் அவை எல்லாம் தோல்வியில்தான் முடிந்து உள்ளது. இன்னும் என்னால் உங்கள் வார்த்தைகளை நம்ப முடியவில்லை.

என்னது போன் உபயோகப்படுத்துவதில்லையா>> உண்மை தான் தோழர். சில அந்தரங்க காரணங்கள். ஒரு காலத்தில் இந்த உலகத்திலேயே செல்போனை அதிகம் உபயோகப்படுத்தியது நான் தான் சகா. இரவு எது?? பகல் எது?? என்ற தெரியாத காலம் அது.

சகா, தங்கள் வலைப்பதிவை படித்தேன். சாருவைப் பற்றி தாங்கள் எழுதிய கட்டுரை அருமை, நான் சாருவின் ரசிகன், இருந்தாலும் அந்த கட்டுரை எனக்கு பிடித்திருந்தது. அது மதுரை பொண்ணோ, ஜெர்மனி பொண்ணோ யாராக இருந்தால் எனக்கு என்ன, நான் இன்னும் சாருவின் ரசிகன் தான்.
சகா, இருக்கிறீர்களா??


நேற்று தூங்க அதிகாலை ஆகி விட்டது. இப்போது தான் எழுந்தேன்.உங்களை தேட வைத்து விட்டேன். நான் எப்போதும் இப்படித் தான். சாரி சகா.

சகா, ஒரு சந்தேகம். தற்பொழுது பிரேம்-ரமேஷின் 'மகாமுனி' புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். உங்கள் வலைப்பதிவில் அவரைப் பற்றி மனித மாமிசம் உண்பவர் என்று யாரோ சொன்னதாக குறிப்பிட்டு உள்ளீர். அப்படி சொன்னது யார்?? ரமேஷ் - பிரேமின் "சொல் என்றொரு சொல்" என்னை மிகவும் பாதித்த புத்தகங்களில் ஒன்று. இப்படியும் எழுத முடியுமா என்ற குழப்பம். இதை போல் எழுதுவதால்தானே அவர்களுக்கு இப்படி ஒரு கேட்டப்பெயர்.

சகா! நான் உடனடியாக பதிலளிக்காததை தயவு செய்து பொருட்படுத்தாதீர்கள். எனது சூழல் அப்படி. மன்னிக்கவும் தோழர்.

மகாமுனியை நான் தரிசித்ததில்லை சகா. வலைப்பூவில் முனியை பற்றி பகிருங்களேன் சகா.
வெளிப்படையாக சொல்லப் போனால் இலக்கியம் என்ற ஒன்று படித்தே இரு வருடங்களாயிற்று சகா.
நான் படித்தவரையில் "முன்பொரு காலத்தில் 108 கிளிகள்" தான் தமிழின் ஆகச்சிறந்த தொகுப்பென ஒருமுறை ஜெமோவிடம் கூறினேன்.அன்பாய் புன்னகைத்தார்.


மகாமுனி பிரேம்- ரமேஷ் சிறுகதைகளின் தொகுப்பு. இதில் நீங்கள் சொன்ன ”108 கிளிகள்" இருக்கிறது.
ஏனோ அந்த சிறுகதை என்னை அதிகம் கவரவில்லை. எனக்கு மிகவும் பிடித்தக் கதை “பரமபத காதைகள்”. கிளிகள் கதையை மீண்டும் ஒரு முறை படித்து பார்க்கனும்.
ஒரு வேளை அந்த கதை எனக்கு பிடிக்க கொஞ்ச நாட்கள் ஆகலாம்.முழுதும் இந்த புத்தகத்தை படித்த பின், விரைவில் வலைப்பதிவில் எழுதுகிறேன்.நன்றி சகா.


சகா.. நகுலனைப் பற்றி நாஞ்சில்நாடன் எழுதியது..http://tiny.cc/f6mh0
ஏனோ, கண்கள் கலங்கி விட்டது....


படித்தேன் தோழர். பகிர்வுக்கு நன்றி. நகுலன் பற்றி சொல்ல சில இருக்கின்றன. பின்னர்.. தற்சமயம் மனம் சற்று இலகுவாயில்லை.


RT @ashok338 நகுலனின் சுசிலா நியாபகம் இப்பொழுது தேவையில்லாமல் வருகிறது.

சகா, நகுலனை நேரில் சந்தித்தது உண்டா??


இல்லை நண்பா, கடந்த ஒரு வருடமாக புத்தகம் மூலமாக மட்டுமே பழக்கம்.

அவரை சந்தித்திருக்கிறேன் சகா, இரு முறை..

இரண்டு முறையா??? நீங்கள் உண்மையாகவே அதிர்ஷ்டம் செய்தவர் சகா.. வாசகராக சந்தித்தீர்களா???


வாசகராகத் தான் சகா. இப்போதும் அவ்வப்போது அவரது வீடும் அந்த நாற்காலியும் கனவில் வந்து கொண்டுதான் இருக்கின்றது.


சகா, நீங்கள் பத்திரிக்கையில் துறையில் வேலை செய்கிறீர்களா??

என்ன செய்கிறீர்கள்? என்பதைப் போன்ற அச்சம் தரும் கேள்வி வேறேதும் தற்போதைக்கு எனக்கில்லை :) சில வருடங்கள் கழித்து பகிர்கிறேன் சகா.

இணையத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவர்கள் நட்பு இத்துடன் காணாமல் போனது.

************************************
இது தான் அசோக் சொன்ன கதை இதை வைத்து நானும் ஒரு முழு கதையை எழுத எவ்வளவோ முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை.

Tuesday, February 12, 2013

இன்னொரு கதை

பசி வயிற்றை கிள்ளுகிறது. அது எப்படி கிள்ளும் என்றும் கேட்காதீர்கள். சிலவற்றை அனுபவித்தால் மட்டுமே நம்மால் புரிந்துக்கொள்ள முடியும். அப்படிதான் இதுவும். காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை. மாதத்தில் ஒரு நாளாவது இப்படி காலையிலிருந்து இரவு வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பது என்று முடிவுசெய்து இருக்கிறேன். காரணம் என்று எதுவும் இல்லை.

வீட்டில் இருந்தால், கண்டிப்பாக எதாவது சாப்பிட வேண்டிய கட்டாயம் எற்பட்டுவிடும். "இல்லை, இன்று முழுவதும் எதுவும் சாப்பிட போவதில்லை" என்று மனைவியிடம் சொல்ல முடியாது. அப்படி சொன்னால், அதற்கு காரணம் கேட்பாள். காரணம் எதுவும் இல்லை என்று சொன்னால், நான் எதையோ ஒன்றை மறைப்பதாக அவள் எண்ணக்கூடும்.

எதற்கு இந்த தேவையில்லாத பிரச்சனை என்று காலை 8 மணிக்கே அலுவலகத்துக்கு வந்துவிட்டேன். அப்படியிருந்தும் அவள் விடவில்லை,  ஒரு கப் டீ போட்டு வைத்துவிட்டாள். ஏற்கனவே காலையில் டிபன் வேண்டாம் என்று சொல்லியாச்சு என்பதால் டீயை குடித்துவிட்டேன். எங்களுக்கு திருமணமாகி ஏழு மாதங்கள் கடந்துவிட்டது. இந்த ஏழு மாதத்தில் ஒருநாள் கூட அவள் கோபப்பட்டோ, டென்ஷனாகியோ நான் பார்த்ததில்லை. 

"ஏன்பா, உனக்கு கோபமே வராதா??" என்று கேட்டால். "கோபப்பட்டு என்ன நடக்க போகிறது" என்பாள்.

அவளைப் பற்றி எழுத ஆரம்பித்தாள் எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் எங்கே ஆரம்பித்து எங்கே முடிப்பது என்று தெரியவில்லை. தனியாக அவளைப் பற்றி ஒரு பதிவு எழுத ஆசை. ஆபிதீன் அவரின் மனைவியைப் பற்றி கலகலப்பாக எழுதுவாரே அதைப்போல். கல்யாணமான புதிதில் அவளை சிரிக்க வைக்க படாதப் பாடுபட்டேன். எந்த காமெடி சொன்னாலும் சிரிக்க மாட்டாள். பின்னர்தான் தெரிந்தது நான் சொல்லும் காமெடிகள் அவளுக்கு புரிவதில்லை என்ற விசயம். அவளிடம் காமெடிக்கு விளக்கம் சொல்லியே முதல் இரண்டு மாதங்கள் கழிந்துவிட்டன.

இப்பொழுதுலாம் அவள் உஷார் ஆகிவிட்டாள், நான் காமெடி சொல்வதற்கு முன்னரே சிரித்துவிடுகிறாள். "எதற்கு சிரித்தாய்" என்று கேட்டால் " அப்பறம் நான் சிரிக்க'லைனா அந்த காமெடிக்கு விளக்கம் வேறு சொல்லுவீங்க" என்கிறாள்.

அவள் விழுந்து விழுந்து சிரிக்கும் அதிசயமும் ஒருநாள் நடந்தது . அது "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" திரைப்படத்தை பார்த்த போது. சில்லரையைக் கொட்டியது போல் சிரிப்பு என்பார்களே, அது போல் அப்படியோரு சிரிப்பு. இப்பொழுது கூட அந்த திரைப்படத்தின் எதாவது ஒரு வசனத்தை சொன்னால் விடாமல் சிரிப்பாள். அப்படி ஒருநாள் அவள் சிரித்த சிரிப்பை கேட்டு பக்கத்து வீட்டு பாட்டி பயந்து போய் வீட்டுக்கே வந்துவிட்டார்கள். அந்த பாட்டிக்கு காது கேட்காது என்பது இங்கே ஒரு கூடுதல் செய்தி.

காலை எட்டு மணிக்கு அலுவலகம் வந்தேன். இப்பொழுது மணி மூன்று. நான்கு முறை போன் செய்துவிட்டாள். " காலையில் சாப்பிட்டாச்சா??" "மதியம் சாப்பிட்டாச்சா??" என்று இரண்டு முறையும், "நான் சாப்பிட போகிறேன்" என்று இரண்டு முறையும் மொத்தம் நான்கு முறை.  இதுவரை காலையிலிருந்து ஆறு முறை தண்ணீர் குடித்ததைதவிர வேறு எதுவும் சாப்பிடவில்லை என்று அவளிடம் சொல்லவா முடியும்.

"இல்லை, இன்னைக்கு முழுவதும் எதுவும் சாப்பிடவேண்டாம் என்று முடிவுசெய்து இருக்கிறேன். சும்மாதான் இந்த முடிவு" என்ற உண்மையை சொல்லலாம். அதற்கு அவளிடமிருந்து வரும் பதில் இப்படியாகதான் இருக்கும்,

"இப்ப அடி வாங்க போறீங்க. முதல்ல இந்த புக் படிக்கிறதை நிறுத்துங்க. மொத்தமா ஒருநாள் எடைக்கு போட்டுறேன் பாருங்க". ஆனால் இதை சொல்லும் போது அவள் மூகத்தில் கொஞ்சம் கூட கோபத்தை பார்க்க முடியாது.

இன்னும் பசி வயிற்றை கிள்ளுகிறது. இன்றைய பசியால் ரொம்ப நாட்களாக தூங்கிக்கொண்டு இருந்த என் வலைப்பதிவுக்கு ஒரு பதிவு கிடைத்துள்ளது என்பதை தவிர உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் இந்த பசிக்கான வேறு காரணங்கள் எதுவும் இல்லை.

குறிப்பு:
இரண்டு வருடங்களுக்கு முன்னால், இரண்டு நாட்கள் டீ தண்ணீரை தவிர வேறு எதுவும் உண்ணாமல் அறையிலேயே கிடந்தது இப்பொழுது தேவையில்லாமல் நினைவில் வருகிறது.