Monday, September 21, 2026

Scholarship

நான் பல வருடங்களுக்கு முன்னால் ஒரு IT கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அங்கு HRA allowance என்ற ஒரு நடைமுறை இருந்தது. அதாவது, வாடகை வீட்டில் வசிப்பவர்கள், அவர்களுடைய சம்பளத்துக்குத் தகுந்தாற்போல் HRA-வை Claim செய்து பெற்றுக்கொள்ளலாம்.

ஒரே வீட்டில் நாங்கள் ஐந்து நண்பர்கள் ஒன்றாகத் தங்கி இருந்தாலும், ஒவ்வொருவரும் அவரவர் பெயரில் HRA-வை Claim செய்து வாங்கிக்கொள்வோம். எங்கள் அலுவலகத்தில் கிட்டத்தட்ட அனைவருமே அதைத்தான் செய்துகொண்டிருந்தார்கள். அப்படி செய்பவர்களின் எண்ணம், வேலை பார்க்கும் கம்பெனியை ஏமாற்ற வேண்டும் என்பதல்ல; “நமக்கு வர வேண்டிய பணம்தானே, அதையே விடுவானே” என்பதுதான்.

என்னைப் பொறுத்தவரை Scholarship-ம் இதுபோன்றதே.

ஒரு மாணவருக்கு கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக வருடத்திற்கு ₹35 லட்சம் Scholarship வழங்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். ஆனால், அவருடைய நேரடியான வருடச் செலவு ₹10 லட்சம் மட்டுமே.

அப்போது அந்த மாணவர்,

“எனக்குத் தேவையானது ₹10 லட்சம் மட்டும்தான். மீதமுள்ள தொகை வேண்டாம்” என்று சொல்லிவிடுவாரா?

அல்லது,

“எனக்காக ₹35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, எனது கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குத் தேவையான வகையில் இந்த ஆதரவை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று நினைப்பாரா?

இங்கேதான் Scholarship-ன் நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

Scholarship என்பது ஒரு மாணவரின் கணக்கில் வரவு வைக்கப்படும் ஒவ்வொரு ரூபாயையும் அரசு கண்காணித்து, அதை எப்படிச் செலவு செய்ய வேண்டும் என்று கட்டுப்படுத்துவதற்காக வழங்கப்படுவது அல்ல. ஒரு மாணவர் தனது கல்வியையும் ஆராய்ச்சியையும் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் தொடர்ந்து மேற்கொள்ளத் தேவையான ஆதரவை வழங்குவதுதான் அதன் அடிப்படை நோக்கம்.

ஒரு மாணவரின் கல்விச் செலவு என்பது கல்லூரிக் கட்டணம் அல்லது ஆராய்ச்சிக்கான உபகரணங்கள் மட்டுமல்ல. தங்குமிடம், பயணம், புத்தகங்கள், மென்பொருட்கள், ஆய்வுக்கான பல்வேறு தேவைகள், மாநாடுகளில் கலந்துகொள்வது, எதிர்பாராத கல்விச் செலவுகள் எனப் பல விஷயங்கள் இருக்கலாம்.

இவற்றில் ஒவ்வொன்றுக்கும் முன்கூட்டியே ஒரு ரசீது இருக்கும் என்றும், ஒவ்வொரு செலவையும் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் கொண்டு வந்து அளவிட முடியும் என்றும் எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று.

இது தவிர, Scholarship பணத்தில் ஒருவர் எப்படி Apple Mac வாங்கலாம், எப்படி Nike shoe வாங்கலாம் என்பதெல்லாம் தேவையில்லாத கேள்வி. மாணவனுக்கு ஆராய்ச்சிக்காக அது தேவைப்பட்டிருக்கலாம் அல்லது அவன் சொந்த விருப்பத்துக்காக வாங்கியிருக்கலாம்.

ஒரு டீ குடிக்கப் போகிறான். அங்கு ₹20-க்கு டீ கிடைக்கிறது. பக்கத்து கடையில் ₹5-க்கு டீ கிடைக்கிறது; ஆனால் அது அவ்வளவு நன்றாக இருக்காது. ஆகவே, அவன் ₹20-க்கு டீ குடிக்கிறான்.

இப்போது அவனைப் பார்த்து, “நீ எப்படி Scholarship பணத்தில் ₹20-க்கு டீ குடிக்கலாம்?” என்று கேட்பது அயோக்கியத்தனமானது. இந்த Scholarship scheme எதற்காகக் கொண்டுவரப்பட்டதோ, அதற்கு முற்றிலும் நேர்மாறானது.

“₹5-க்கு டீ கிடைக்கும்போது ₹20-க்கு ஏன் குடித்தாய்?”

என்று கேட்க ஆரம்பித்தால், அடுத்த கட்டத்தில்,

“பஸ்ஸில் போகலாம். ஏன் Train?”

“Train-ல் போகலாம். ஏன் Flight?”

என்று கேள்விகள் தொடர்ந்து கொண்டே போகும்.

கடைசியில்,

“பல்கலைக்கழகத்துக்கு நடந்து போயிருக்கலாமே!”

என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஒரு மாணவர் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும், அவர் உடனடியாக ஒரு குறிப்பிட்ட ரசீதுடன் கணக்குக் காட்ட வேண்டிய பணமாக மட்டுமே பார்க்கப்பட வேண்டுமா என்பதுதான் இங்கே கேள்வி.

Scholarship என்பது வெறும் செலவுகளுக்கான reimbursement அல்ல. அது ஒரு மாணவரின் கல்வி மற்றும் ஆராய்ச்சி தடையின்றி தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் வழங்கப்படும் ஆதரவு.

அந்த ஆதரவு, அவன் ஒவ்வொரு ரூபாயையும் எப்படி செலவு செய்தான் என்பதைக் கண்காணிப்பதில் மட்டும் முடிந்துவிடாமல், அந்த ஆதரவு அவனை எவ்வளவு தூரம் முன்னேறச் செய்தது என்பதிலும் அளவிடப்பட வேண்டும்.

ஒரு உண்மையான Scholarship-க்கு கொடுக்கப்படும் மதிப்பு, மாணவன் எவ்வளவு ரசீது கொடுத்தான் என்பதில் இல்லை; அந்த Scholarship அவனுடைய கல்வியையும் ஆராய்ச்சியையும் எவ்வளவு தடையின்றி முன்னெடுக்க உதவியது என்பதில்தான் இருக்கிறது.

இறுதியில், ஒரு மாணவனிடம்,

“₹35 லட்சத்தில் எவ்வளவு செலவு செய்தாய்?”

என்பதைவிட,

“அந்த ₹35 லட்சம் உன் கல்வியையும் ஆராய்ச்சியையும் எவ்வளவு தூரம் முன்னேற்றியது?”

என்று கேட்பதுதான் Scholarship-ன் உண்மையான நோக்கத்திற்கு நெருக்கமான கேள்வியாக இருக்கும்.


Wednesday, September 16, 2026

UPIக்கும் கட்டணமா? டிஜிட்டல் இந்தியா என்னாச்சு?

 

ஒரு காலத்தில் கடைக்குச் சென்றால் கையில் பணம் எடுத்துச் செல்ல வேண்டும். பிறகு ATM வந்தது. Debit card, Credit card வந்தன. இப்போது கையில் பணமே இல்லாமல் ஒரு QR code-ஐ ஸ்கேன் செய்து சில நொடிகளில் பணம் செலுத்திவிட்டு வெளியே வந்து விடுகிறோம்.

ஒரு சிறிய டீக்கடை முதல் மிகப்பெரிய shopping mall வரை, தெருவோர வியாபாரி முதல் ஆன்லைன் வணிக நிறுவனம் வரை, இன்று UPI இல்லாத வணிகத்தை நினைத்துப் பார்ப்பதே கடினம். GPay, PhonePe, BHIM, Paytm என்று பல பேர் பல பெயர்களில் சொன்னாலும், இவை எல்லாமே அரசின் BHIM Architecture-ல் வேலை செய்கின்றன. இந்த UPI-க்கு முதன்முதலில் அடிக்கல் போட்டது Paytm தான். முன்னர் Paytm Wallet-ல் நாம் பணத்தைப் போட வேண்டும்; பின்னர் அங்கிருந்து நாம் யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாகப் பணம் அனுப்பிக்கொள்ளலாம். Wallet-ல் இருக்கும் பணத்திற்கு வட்டி கிடையாது. Paytm-க்கு ஒரு பெரிய தொகை வட்டியில்லாமல் சேருவதால், Paytm-யும் இந்தச் சேவையை இலவசமாகத் தந்தது. ஆனால் மறைமுகமாக Wallet-ல் உள்ள பணத்தை வேறு விதமாகப் பயன்படுத்துவதன் மூலம், ஒரு பெரிய தொகை Paytm-க்கு லாபமாகக் கிடைத்தது. இதன் பின்னர்தான் அரசின் BHIM வந்தது; Wallet முறை அழிக்கப்பட்டு, வங்கி அக்கவுண்ட் நேரடியாக இணைக்கப்பட்டது. இதன் காரணமாக Wallet-ஐ நம்பியிருந்த Paytm, PhonePe போன்ற கம்பெனிகள் ஆரம்பத்தில் பெரிய நஷ்டத்தைச் சந்தித்தனர். பின்னர் தங்கள் Business Style-Insurance, Trading, Other Financial Services என்று மாற்றிக்கொண்டனர். சில Wallet கம்பெனிகள் இழுத்து மூடப்பட்டதும் அப்போதுதான் நடந்தது. இது எல்லாம் பழைய கதை.

இன்று இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் மாற்றங்களில் ஒன்றாக UPI மாறிவிட்டது. இதற்குக் காரணம் UPI எளிதானது. வேகமானது. முக்கியமாக இலவசமானது.

ஆனால் இப்போது அந்த இலவச UPI முறையில் ஒரு பெரிய மாற்றத்தை அரசு கொண்டு வந்துள்ளது.

அக்டோபர் 15, 2026 முதல் ₹2,000-க்கு மேல் வணிகர்களுக்கு செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4% Merchant Discount Rate (MDR) விதிக்கப்பட உள்ளது. மேலும் அரசு, “இது வாடிக்கையாளரிடம் திணிக்கப்படாது. இது வணிகர் மற்றும் payment ecosystem-க்கு இடையிலான MDR” என்று சொல்கிறது.

ஆனால், கண்டிப்பாக அப்படி இருக்கப் போவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த அதிகக் கட்டணம் வாடிக்கையாளர் மீதுதான் எப்படியிருந்தாலும் மறைமுகமாகவோ, நேரடியாகவோ திணிக்கப்படப் போகிறது.

பொருளாதாரத்தின் அடிப்படை விதி என்ன? ஒரு வணிகத்தின் செலவு அதிகரித்தால், அந்தச் செலவு எப்படியாவது வணிகத்தின் விலைக் கட்டமைப்புக்குள் சென்று, கடைசியாக வாடிக்கையாளரிடம் நிறைவடையும்.

மூலப்பொருள் விலை அதிகரித்தால் வாடிக்கையாளர் வாங்கும் பொருளின் விலையும் அதிகரிக்கும். மின்சாரக் கட்டணம் அதிகரித்தால் விலை அதிகரிக்கும். வாடகை அதிகரித்தால் விலை அதிகரிக்கும். பெட்ரோல் செலவு அதிகரித்தால் விலை அதிகரிக்கும்.

அதேபோல payment processing cost அதிகரித்தாலும், விலை அதிகரிக்கும்.

ஒரு வியாபாரி வெளிப்படையாக, “UPI charge ₹20” என்று வாடிக்கையாளரிடம் கேட்க முடியாமல் இருக்கலாம். ஆனால் அந்த ₹20 வேறு ஒரு வழியில் விலைக்குள் கலந்துவிடம். ஏற்கனவே Flipkart, Amazon போன்றவை Processing Fee, Handling Fee, Discount Fee என்று வேறு வேறு பெயர்களில் மறைமுக வசூல் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

UPI ஒரு சாதாரண தனியார் app அல்ல. NPCI-ஆல் இயக்கப்படும் இந்தியாவின் payment infrastructure. இதன் மூலம் வங்கிகள், payment apps, payment service providers, technology infrastructure என ஒரு மிகப்பெரிய ecosystem இயங்குகிறது.

அரசின் தற்போதைய விளக்கம் என்னவென்றால், MDR என்பது அரசாங்கம் வசூலிக்கும் வரி அல்ல; அது payment ecosystem-ல் பங்கேற்கும் வங்கிகள், payment service providers மற்றும் UPI application providers உள்ளிட்டவர்களிடையே பகிரப்படும் கட்டணம். இதன் நோக்கம் UPI ecosystem-ஐ நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கச் செய்வது என்று அரசு கூறுகிறது.

இப்பொழுது வரை இந்தச் செலவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பு ஏற்றுக்கொண்டு உள்ளது. இனியும் அந்தச் செலவினை அரசால் ஏற்க முடியாது என்பது அரசின் வாதம்.

சாலை அமைப்பதற்கு அரசு செலவு செய்கிறது. ரயில்வே infrastructure-க்கு அரசு செலவு செய்கிறது. அதேபோல், டிஜிட்டல் public infrastructure-க்கும் அரசு செலவு செய்யலாம்.

ஏனென்றால் UPI மூலம் அரசுக்கே பல நன்மைகள் கிடைக்கின்றன. பணப் பரிவர்த்தனைகள் formal economy-க்குள் வருகின்றன. வங்கிகளின் digital ecosystem வளர்கிறது. எனவே UPI-யை ஒரு சாதாரண payment service போல மட்டும் பார்க்காமல், இந்தியாவின் digital public infrastructure என்று பார்க்க வேண்டும்.

மேலும் ஒரு முக்கியமான செய்தி, UPI-யில் கட்டணம் கொண்டு வர அமெரிக்கா அழுத்தம் தருகிறது என்பது.

card networks-க்கு UPI ஒரு போட்டியாளராக இருப்பது இயல்பானது. 2026-ஆம் ஆண்டுக்கான அமெரிக்க வர்த்தகத் தடைகள் அறிக்கையைச் சுற்றிய விவாதங்களில், இந்தியாவின் UPI அமைப்பு அமெரிக்க electronic payment service providers-க்கு சமமான போட்டிச் சூழலை வழங்கவில்லை என்ற அமெரிக்கக் கவலை வெளிப்பட்டுள்ளது. UPI-யின் வளர்ச்சி Visa, Mastercard, Amex போன்ற பாரம்பரிய card networks-க்கு போட்டியாக இருப்பது பற்றியும் ஆய்வுகள் விவாதித்துள்ளன.

அமெரிக்காவின் அழுத்தத்தால் தான் நாம் UPI-க்கு கட்டணம் வசூலிக்க இருக்கிறோம் என்றால், அதைவிட ஒரு கேவலமான விஷயம் வேறு எதுவும் இல்லை.

கடைசியாக,

ஏற்கனவே அரசாங்கம் நம்மிடம் பல வரிகளை வசூலித்துக்கொண்டுதான் இருக்கிறது. வங்கிகளும் நம்மிடம் மறைமுகமாகவோ, நேரடியாகவோ பல கட்டணங்களை வசூலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆகவே இந்த UPI செலவினை தொடர்ந்து அரசாங்கமே செய்ய வேண்டும். மக்கள் மீதும், வணிகர்கள் மீதும் திணிக்கக் கூடாது.

எப்படி ராணுவத்துக்கு செலவு செய்வது ஒரு நாட்டிற்கு முக்கியமோ, அதேபோல் அந்த நாட்டின் வளர்ச்சிக்காக டிஜிட்டல் public infrastructure-க்கும் அரசு செலவு செய்வது முக்கியமே.

அதுதான் நியாயமான டிஜிட்டல் இந்தியா.

 

Sunday, September 13, 2026

மக்கள் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ, ராஜினாமா, இடைத்தேர்தல் — செலவு யாருடையது?

 தமிழ்நாட்டில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவரும் ஏற்கெனவே அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள். பின்னர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். தற்போது அதே தொகுதிகளில் தவெக வேட்பாளர்களாக மீண்டும் களமிறங்கியுள்ளனர்.

இடைத்தேர்தல் என்பது வாக்குச்சாவடியில் ஒரு நாள் நடக்கும் வாக்குப்பதிவுக்கான நாடகம் மட்டுமல்ல. அதன் பின்னால் ஒரு மிகப்பெரிய அரசு இயந்திரம் இயங்குகிறது. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். காவல்துறை முழுமையாக தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. வாக்குச்சாவடிகள் தயார் செய்யப்படுகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அரசு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்காக தமிழக அரசு ரூ.1,302 கோடியை தேர்தல் செலவுக்காக ஒதுக்கியிருந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டப்பேரவைத் தொகுதிகள். இந்தத் தொகையை 234 தொகுதிகளால் வகுத்துப் பார்த்தால், ஒரு தொகுதிக்கான சராசரி தேர்தல் நிர்வாகச் செலவு சுமார்: ₹5.56 கோடி!

இந்தக் கணக்கை தினமணி தனது மே 27, 2026 செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளது. இப்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். ₹5.5 கோடி × 2 = சுமார் ₹11 கோடி. இது தொடக்கமே. இன்னும் இது போல் 6 தொகுதிகளுக்கு மேல் (இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம்) இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. ஆக மொத்தம் ₹5.5 கோடி × 8 = சுமார் ₹44 கோடி.

இது ஒரு தோராயமான கணக்கு. ஆனால் அந்த ₹44 கோடி யாருடையது? ஒரு கட்சியினுடையதா? ஒரு வேட்பாளருடையதா? ஒரு தலைவருடையதா? இல்லை. அது மக்களின் வரிப் பணம். இந்தக் கணக்கில் தனி வாக்காளர்களுக்கு ஏற்படும் செலவுக் கணக்கு காட்டப்படவில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு வாக்காளர் தனது ஒரு ஓட்டினைப் பதிவு செய்ய சென்னை அல்லது வேறு ஊரிலிருந்து தனது சொந்தத் தொகுதிக்கு வந்து இருக்கலாம். இதற்கான பயணச் செலவு, பயண நேரம் அனைத்தையும் நாம் சேர்க்க வேண்டும்.

மீண்டும் நடக்க போகும் கட்சிப் பொதுக்கூட்டங்கள், பிரச்சார ஊர்வலங்கள், ஒலிபெருக்கிகள், போக்குவரத்து மாற்றங்கள், கட்சித் தொண்டர்களின் வருகை, ஊடகங்களின் கவனம், சமூக வலைதளப் போர்கள், இதன் காரணமாக வாக்காளர்களுக்கு ஏற்படும் மனச்சுமை ஆகியவற்றையும் நாம் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஜனநாயகத்தில் தேர்தல் என்பது மக்களின் மிகப்பெரிய உரிமை. அது சுமையாக மாறக் கூடாது. ஒரு வாக்காளர் வாக்குச்சாவடிக்குச் செல்வதால், அவருடைய வேலை நேரம் பாதிக்கப்படலாம், வியாபாரம் பாதிக்கப்படலாம், விவசாயப் பணிகள் பாதிக்கப்படலாம். மேலும் முதியவர்களும் இதனால் பாதிப்பு அதிகம். அதனால்தான் ஒரு இடைத்தேர்தலின் செலவை வெறும் அரசின் கணக்கில் மட்டும் பார்க்கக் கூடாது.

ஒரு எம்.எல்.ஏ. இயற்கையான காரணத்தால் உயிரிழந்தாலோ, அல்லது நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக பதவி பறிக்கப்பட்டாலோ, அவருடைய பதவி காலியாகிறது. அப்போது இடைத்தேர்தல் நடத்த வேண்டியது ஜனநாயகத்தின் தவிர்க்க முடியாத நடைமுறை. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது.

ஆனால்...

ஒரு எம்.எல்.ஏ. தன்னுடைய அரசியல் எதிர்காலத்திற்காக பதவியை ராஜினாமா செய்து, வேறு கட்சியில் இணைந்து, அதே தொகுதியில் மீண்டும் வேட்பாளராக நிற்பது? இதுதான் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். ராஜினாமா செய்யும் உரிமை சட்டத்தில் இருக்கலாம். ஆனால், அந்த உரிமையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பொதுச் செலவுக்கு அரசியல் பொறுப்பு வேண்டாமா?

இந்தக் கேள்வியை தவெகவை மட்டும் பார்த்துக் கேட்க வேண்டியதில்லை. நாளை வேறு கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. இதே செயலைச் செய்தாலும் இதே கேள்விதான் எழ வேண்டும். எனவே சட்டத்தில் மாற்றம் குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் இது. இதற்கு ஒரு சட்டரீதியான தீர்வு தேவை.

மீண்டும் சொல்வோம் "ஜனநாயகத்தில் தேர்தல் என்பது மக்களின் மிகப்பெரிய உரிமை. அது சுமையாக மாறக் கூடாது." 

Saturday, September 12, 2026

மாயையில் அழியும் தமிழகம்

இரண்டு சினிமா நடிகர்கள் லண்டனில் சந்தித்துக் கொள்கிறார்கள்.

ஒருவர் — கார் பந்தயத்தில் பங்கேற்கும் நடிகர்.
மற்றொருவர் — இன்றைய தமிழகத்தின் முதலமைச்சர்.

ஒரு காலத்தில் வெள்ளித்திரையில் நாயகர்களாக இருந்தவர்கள். ஒருவர் வேகத்தின் உலகில் தன்னை நிரூபிக்க முயற்சிக்கிறார். மற்றொருவர் அரசியலின் உச்சியில் அமர்ந்து ஒரு மாநிலத்தை நிர்வகிக்கிறார்.இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். அதுதான் செய்தி. அல்லது அவ்வளவுதான் செய்தி.

அந்தச் சந்திப்பின் புகைப்படங்கள், வீடியோக்கள், பதிவுகள் என தமிழகம் முழுவதும் பரவுகின்றன. ரசிகர்கள் மகிழ்கிறார்கள். கட்சித் தொண்டர்கள் பெருமைப்படுகிறார்கள். ஊடகங்கள் அதை முக்கியச் செய்தியாக்குகின்றன. சமூக வலைதளங்களின் கொண்டாட்டமாக மாறுகிறது.

ஆனால்...ஒரு மாநிலம் கொண்டாட வேண்டிய விஷயம் இதுதானா?. நாம் எதை கொண்டாடுகிறோம்?

ஒரு நடிகர் வெளிநாட்டில் கார் ஓட்டுகிறார். ஒரு முதலமைச்சர் அவரைச் சந்திக்கிறார். இதில் தவறு என்ன?

தவறு ஒன்றும் இல்லை. ஒரு கலைஞரை முதலமைச்சர் சந்திப்பதும் தவறல்ல. ஒரு விளையாட்டு வீரரை ஊக்குவிப்பதும் தவறல்ல. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உலக அரங்கில் சாதிப்பதை நாம் கொண்டாடுவதும் தவறல்ல.

ஆனால் ஒரு நிகழ்வின் முக்கியத்துவத்திற்கும், அதைச் சுற்றி உருவாக்கப்படும் மாயைக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. அந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாமல் போனால், ஒரு சமூகமாக நாம் உண்மையான பிரச்சினைகளிலிருந்து மெதுவாக விலகத் தொடங்கிவிடுகிறோம்.

தமிழகத்தில் சினிமாவுக்கு இருக்கும் செல்வாக்கு சாதாரணமானதல்ல. பல தலைமுறைகளாக சினிமா நம்முடைய அரசியல், கலாசாரம், மொழி, ரசனை, கனவு என அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு நடிகர் வெற்றி பெற்றால் நாம் மகிழலாம். ஒரு தமிழர் உலக அரங்கில் சாதித்தால் பெருமைப்படலாம். ஒரு முதலமைச்சர் அவரைச் சந்தித்தால் அதை இயல்பான ஒரு நிகழ்வாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதைக் கொண்டு ஒரு மாநிலத்தின் ஆட்சி, வளர்ச்சி, பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றின் தரத்தை அளக்கத் தொடங்கிவிட்டால்...நாம் மாயையில் சிக்கிவிட்டோம், என்று பொருள்.

மாயை என்றால் பொய் என்று மட்டும் பொருள் கொள்ள வேண்டியதில்லை. உண்மையை மறைத்து நிற்கும் அளவுக்கு பெரிதாகத் தோன்றும் ஒரு தோற்றமும் மாயைதான். சந்திப்பு, புகைப்படம், கார் ரேஸ், அரசியல் பதவி இவை அனைத்தும் உண்மையானது. ஆனால் அவற்றைச் சுற்றி நாம் உருவாக்கிக் கொள்ளும் கதை? அதுதான் மாயையாக இருக்கலாம்.

“நம்மவர்கள் உலக அளவில் இருக்கிறார்கள்.”

“நம்முடைய தலைவர் மிகப்பெரியவர்.”

“நம்முடைய நடிகர் உலகையே வென்றுவிட்டார்.”

“நம்முடைய மாநிலம் அசத்துகிறது.”

என்று உணர்வுகளைத் தூண்டுவது மிகவும் எளிது. ஒரு Instagram பதிவு போதும்.

ஆனால் ஒரு மாநிலத்தின் உண்மையான முன்னேற்றம் Instagram'யில் தெரிய கூடாது.

அது ஒரு அரசு பள்ளி மாணவனின் கல்வியில் தெரிய வேண்டும். ஒரு இளைஞனுக்கு கிடைக்கும் நல்ல வேலையில் தெரிய வேண்டும். ஒரு விவசாயியின் வருமானத்தில் தெரிய வேண்டும். ஒரு தொழிற்சாலையில் உருவாகும் நிரந்தர வேலைவாய்ப்பில் தெரிய வேண்டும். ஒரு கிராமத்தின் சாலையில் தெரிய வேண்டும். ஒரு அரசு மருத்துவமனையில் நோயாளி பெறும் சிகிச்சையில் தெரிய வேண்டும். ஒரு பெண் பாதுகாப்பாக வீட்டிற்குத் திரும்பும் சமூகத்தில் தெரிய வேண்டும். அதுதான் வளர்ச்சி.

ஒரு நடிகர் கார் ஓட்டுவது தமிழருக்கு பெருமையாக இருக்கலாம்.

ஆனால் ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு வேலை கிடைக்கும் ஒரு புதிய தொழிற்சாலை அதைவிடப் பெரிய பெருமை.

ஒரு பிரபலமான நபர் முதலமைச்சரைச் சந்திப்பது சுவாரஸ்யமாக இருக்கலாம்.

ஆனால் ஒரு அரசு பள்ளி மாணவன் உலகின் சிறந்த பல்கலைக்கழகத்தில் சேர்வது அதைவிடப் பெரிய செய்தி.

நாம் எதைக் கொண்டாடுகிறோம் என்பதில்தான் ஒரு சமூகத்தின் மதிப்பீடு தெரிகிறது. மாயையை ரசிக்கலாம்; ஆனால் அதில் வாழக்கூடாது

நாளை நமது குழந்தைகள் நம்மிடம் கேட்கலாம்:

“தமிழ்நாடு அந்த காலத்தில் என்ன சாதித்தது?” நாம் அவர்களிடம் சொல்ல வேண்டியது...

“ஒரு காலத்தில் ஒரு நடிகர் லண்டனில் கார் ஓட்டினார். ஒரு முதலமைச்சர் அவரைச் சந்தித்தார். தமிழ்நாடு முழுவதும் அதை கொண்டாடியது.” என்பதாக இருக்கக்கூடாது. அதற்கு பதிலாக நாம் :

“அந்தக் காலத்தில் தமிழ்நாடு தனது கல்வியை உயர்த்தியது. வேலைவாய்ப்பை உருவாக்கியது. தொழில்களை வளர்த்தது. விவசாயத்தை பாதுகாத்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேறியது. உலக அளவில் போட்டியிடும் இளைஞர்களை உருவாக்கியது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது.”

என்று சொல்ல முடிந்தால்தான் அது ஒரு தலைமுறையின் வெற்றி.

இறுதியாக...

லண்டனில் இரண்டு பிரபலங்கள் சந்தித்துக் கொள்வது ஒரு செய்தியாக இருக்கலாம். அதை ரசிப்பதும் தவறல்ல. ஆனால் அந்தப் புகைப்படத்தின் வெளிச்சத்தில் நமது உண்மையான பிரச்சினைகள் மறைந்து போகக் கூடாது.

மாயை அழகாக இருக்கும். உண்மை சில நேரங்களில் கசப்பாக இருக்கும்.

மாயை நம்மை மகிழ்விக்கும். உண்மை நம்மை விழிப்படையச் செய்யும்.

மாயை கைதட்டச் சொல்லும். உண்மை கேள்வி கேட்கச் சொல்லும்.

மாயை நம்மை ரசிகர்களாக வைத்திருக்கும். உண்மை நம்மை குடிமக்களாக மாற்றும்.

தமிழகம் ஒரு ரசிகர் கூட்டமாக மாறிவிடக் கூடாது. தமிழகம் எப்பொழுதும்  ஒரு விழிப்புணர்வுள்ள சமூகமாகவே இருந்தது, இனியும் அப்படி தான் இருக்க வேண்டும். 

மாயையில் வாழத் தொடங்கினால், அழிவது ஒரு தனிமனிதன் அல்ல. ஒரு தலைமுறை.

தற்பொழுது உள்ள இந்த கொண்டாட்டம், ஒரு சமூகத்தின் கவனச் சிதறலின் அறிகுறி.

Thursday, August 20, 2026

மரவட்டை

முன்குறிப்பு:


எல்லோருக்கும் வரும் ஆசைதான்.

நண்பன் ஒருவன், "குறும்படம் ஒன்றை எடுப்போம்" என்று சொல்ல, சும்மா திரைக்கதையாக ஒரு கதையை எழுதி பார்ப்போமே என்று ஆரம்பித்தது.

ரமேஷ் பிரேம் "மகாமுனி" தொகுப்பில் வரும் ஒரு பக்கக் கதை இது.

வழக்கம் போல் இதையும் பாதியில் விட்டாச்சு.

கிட்டத்தட்ட பதினைந்து வருடத்திற்கு முன்னால் எழுதியது.

ஆனால் நண்பன் இன்னும் எப்படியாவது ஒரு குறும்படத்தையாவது எடுத்துவிட வேண்டும் என்று வெறிகொண்டு அலைகிறான்.

நான் அவன் வரும் பக்கம் அறிந்துகொண்டு இரண்டு கிலோமீட்டர் சுற்றிச் செல்கிறேன்.


(சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கும் ஒரு மரத்தின் நிழலில் ஒரு சிறுவன் உட்கார்ந்து இருக்கிறான்.) (காட்சி நடக்கும் வருடம் 1995 வருடம் போல் தோன்ற வேண்டும். ஆனால் வருடத்தை காட்ட தேவையில்லை).

முருகேஷ் (கேமராவைப் பார்த்து):

வணக்கம்.

என் பெயர் முருகேசன்.

அப்பா என்னை முருகேஷ்னுதான் கூப்பிடுவார்.

அதோ அங்கு இடிச்சு கிடக்குதுல ஒரு கொட்டகை. அங்கதான் அப்பா கடை வைத்திருந்தார்.

பஞ்சர் கடை.

இந்தக் கடற்கரைச் சாலையில் எங்க கடையை விட்டா, அடுத்த கடைக்கு பத்து கிலோமீட்டர் வரை போகணும்.

எங்க அப்பா பஞ்சர் பார்க்காத காரே இல்லை.

சோப்பு டப்பா சைஸ் கார், கப்பல் சைஸ் கார், பத்து வீல் இருக்கும் கார் என்று எத்தனையோ கார்களுக்கு அவர்தான் பஞ்சர் பார்ப்பார்.

சில நேரங்களில் வண்டி பஞ்சராகி ரொம்ப தூரத்தில் நிக்குதுனு சொல்லி, அவரை அழைத்துப் போக ஆள் வரும்.

ஒருதடவை அப்படித்தான்.

நல்ல மழை.

காரில் இரண்டு பேர் வந்தாங்க.

இன்னொரு கார் பஞ்சர் ஆயிடுச்சுனு சொல்லி, எங்களை அவங்க காரில் அழைச்சுட்டுப் போனாங்க.

காருக்குள் நுழைந்தவுடனே ஏதோ சென்ட் வாசனை கும்முனு மூக்கில் ஏறுச்சு.

காருக்குள்ளேயே டி.வி., ப்ரிட்ஜ் எல்லாம் இருந்துச்சு.

அன்னைக்கு நைட் அப்பா அந்தக் காரை வைத்து நிறைய கதை சொன்னார்.

நான், அம்மா, தம்பி, அப்பா எல்லோரும் காரில் சென்னைக்கு போறோம்.

அப்புறம் கடற்கரையில் எங்க கார் கப்பல் மாதிரி மிதக்குது.

அப்பா சொன்ன கதை எனக்கு சரியா ஞாபகம் இல்லை.

எங்க அப்பா இதுமாதிரி நிறைய கதை சொல்வார்.

எல்லாம் நிஜம் மாதிரியே இருக்கும்.

அம்மா சொல்லும்:

"இப்படியே கதை சொல்லித்தான் என் அப்பனையும் ஏமாத்திட்டாருனு."

அம்மாவுக்கு அப்பா சொல்ற கதைகளெல்லாம் ரொம்ப பிடிக்கும்.

ஆனா அதை பிடிச்ச மாதிரி காட்டிக்க மாட்டாங்க.

நைட்ல சாப்பிடும்போது நைசா அம்மா கேட்பாங்க:

"ஏன்டா முருகா, நேற்று உங்க அப்பா சின்ன வயசுல தனியா சுடுகாட்டுக்குப் போய் மாட்டிக்கிட்டேனு ஒரு கதை சொன்னாரே... அப்புறம் என்னாச்சு?"

எங்க அப்பா, அம்மா சொன்னது எதுவுமே கேட்காத மாதிரி, என் கிட்ட கதை சொல்ல ஆரம்பிப்பார்.

**********************************************************************

காட்சி 2: (அதே இடம். ஆனால் ஒரு இரண்டு மூன்று வருடம் பின்னோக்கி போகிறோம். மீண்டும் எங்கேயும் வருடத்தை காட்ட தேவையில்லை. இப்பொழுது அங்கு இடிந்த போன கொட்டகையில் ஒரு பஞ்சர் கடை உள்ளது. அந்த கடையில் அப்பாவும் முருகேஷும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். கிழக்கு கடற்கரை சாலை கொஞ்சம் சிறியதாக உள்ளது.  )



(பஞ்சர் கடையில் முருகேஷும் அப்பாவும் பேசிக்கொள்வது போல்)

அப்பா:
"டேய் முருகேஷ், என்னடா காலையிலிருந்து ஒரு கிராக்கியும் காணோம்."

இப்படி சொன்னாலே அப்பா ஏதோ கதை சொல்லப் போகிறார் என்று அர்த்தம் என்பதை முருகா நன்றாகவே உணர்ந்திருந்தான்.

வழுவழு என்று இருந்த கடற்கரைச் சாலையில் வண்டிகள் பறந்துகொண்டு இருந்தன.

முன்னால் கிடந்த ஒரு பழைய டயர் அருகில் ஒரு மரவட்டை, ரயில் வண்டியைப் போல் ஊர்ந்துகொண்டு இருந்தது.

அப்பா:
"முருகேஷா, நம்ம ஊருல மரவட்டைகள் அதிகமாக இருக்கும் காரணம் தெரியுமா?

முன்னாடி இங்க மக்கள் யாருமே இருக்க மாட்டாங்களாம்.

மீன் பிடிக்கிறவங்களெல்லாம் படகை இந்தப் பக்கம் கொண்டு வரவே மாட்டாங்களாம்.

நம்ம கும்மினி ஊருலயே நிறுத்திடுவாங்களாம்.

ஏன்னு தெரியுமா?

அந்தக் காலத்தில் நம்ம ஊரை மரவட்டைகள்தான் ஆட்சி செய்ததாம்.

இந்தப் பக்கம் எந்த மனிதனும் வர இந்த மரவட்டைகள் அனுமதிக்காதாம்.

ஊரைச் சுற்றி புதைகுழிகள் நிறைய உண்டுபண்ணி வைத்திருந்துச்சுங்க இந்த மரவட்டைகள்.

இந்த ஊருக்குள் யாரு நுழைந்தாலும், ஏதாவது ஒரு புதைகுழியில் விழுந்து செத்துப் போயிடுவாங்களாம்.

அதனாலயே மக்கள் யாரும் இந்தப் பக்கம் வரமாட்டாங்களாம்.

மரவட்டைகளும் சந்தோஷமா இருந்துச்சுங்க.

இங்க ஒரு ராஜா மரவட்டைதான் ஆட்சி செய்துச்சாம்.

நம்ம ரங்காயி கடை பக்கத்தில் ஒரு பழைய மண்டபம் இருக்குல்ல?

அதுதான் ராஜா மரவட்டையின் அரண்மனை.

நம்ம ராஜா மரவட்டைக்கு இரண்டு ராணிகள்.

ராஜா மரவட்டை ஆட்சியில் எல்லா மரவட்டைகளும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சுங்க."

முருகா அப்பாவிடம் ஒரு கேள்வியை எழுப்பினான்.

முருகா:
"எப்படிப்பா, இதுதான் ராஜா மரவட்டைன்னு கண்டுபிடிக்கிறது?

எல்லாம் ஒரே மாதிரிதானே இருக்கும்?"

அப்பா:
"முருகேஷு, அதெல்லாம் மரவட்டைகளுக்குத் தெரியும்டா.

நமக்குத்தான் எல்லா மரவட்டையும் ஒண்ணா தெரியும்.

அதுங்களுக்கு இது ராஜா, இது மந்திரி, இது தளபதின்னு தெரியும்."

முருகா:
"மரவட்டைகளுக்கு மந்திரி, தளபதியெல்லாம் இருக்காப்பா?"

அப்பா:
"ஆமாம்டா, எல்லாம் இருக்கு."

(கதையை நம்பாதவனாக முருகேஷின் முகம் மாறுகிறது. அவன் இந்தக் கதையை நம்புவதற்கு இப்போது அப்பா ஏதாவது சொல்லியாக வேண்டும்.)

அப்பா:
"டேய் முருகேஷ்...

மரவட்டைகள் முதுகில் இருக்கும் கோடுகளை வைத்து, அது ராஜாவா, ராணியா, மந்திரியா, தளபதியான்னு சொல்லிடலாம்.

சிகப்பு கலரில் கோடு இருந்தா அது சாதாரண மரவட்டை.

மஞ்சள் கலரில் இருந்தா அது ராணி மரவட்டை.

பச்சை கலரில் இருந்தா அது ராஜா மரவட்டை."

முருகா:
"அப்ப மந்திரி, தளபதியெல்லாம்?"

அப்பா:
"ஆமாம்டா, அதுகளுக்கும் கலர் இருக்கு.

அது என்னன்னா...

ம்..."

(கொஞ்சம் யோசித்த பின்)

"தளபதின்னா நீலம்.

மந்திரின்னா கருப்பு கோடு."

(டயர் அருகில் சுற்றிக்கொண்டு இருந்த மரவட்டை இப்போது சாலைக்கு அருகில் சென்று இருந்தது.)

ஒடிப்போய் அந்த மரவட்டையின் முதுகை முருகேஷ் பார்க்கிறான்.

முருகா:
"அப்பா!

முதுகு சிகப்பு கலருப்பா!

இது சாதாரண மரவட்டை."

(இப்போது மரவட்டை அந்தச் சாலையைக் கடப்பது போல் கருப்பான சாலையின் மேல் ஏறுகிறது.)

மீண்டும் அப்பா அருகில் முருகேஷ் வருகிறான்.

முருகா:
"அப்பா...

சாதாரண மரவட்டை ராஜா மரவட்டையாக மாற முடியாதா?"

(இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல அப்பா வாய் திறக்கும் முன்பே, அந்த மரவட்டை ஒரு டூ-வீலரின் சக்கரத்தில் அடிபட்டு நசுங்கிப் போகிறது.)

*******************************************************************

காட்சி 3


(காட்சி ஒன்று நடைப்பெற்ற இடம். இப்பொழுது கிழக்கு கடற்கரை சாலையில் விரிவாக்க பணிகள் நடந்து இரண்டு வழி சாலையாக மாற்றப்பட்டு உள்ளது.கடற்கரைச் சாலையில் இருக்கும் ஒரு மரத்தின் நிழலில் முருகேஷ் உட்கார்ந்து இருக்கிறான். இன்னொரு சிறுவன் பள்ளிக்குச் செல்கிறான்.)

பள்ளிச் சிறுவன்:
"டேய் முருகா, இன்னைக்கும் ஸ்கூலுக்கு வரலையா?

என்னடா, எப்ப பார்த்தாலும் இங்கேயே உட்கார்ந்து இருக்க?"

(முருகன் சாலையையே வெறித்துப் பார்த்துக்கொண்டு இருக்கிறான்.)

பள்ளிச் சிறுவன்:
"இரு... வாத்தியார் கிட்ட சொல்றேன்."


(காட்சி மாறுகிறது. காட்சி 2 நடைபெற்ற காலம். பஞ்சர் கடையில்,  முருகேஷ், அப்பா மற்றும் அப்பாவின் நண்பர்.)

அப்பா:
"இப்ப யாரு இந்த ரோட்டை விரிவுபடுத்தச் சொல்லி கெஞ்சியது?

ஏற்கனவே வண்டிகளெல்லாம் ஜெட் வேகத்தில் போய்க்கிட்டு இருக்கான்.

இதுல இதை நான்கு வழிப் பாதையா மாற்றப் போறாங்களாம்.

நம்ம கடைகளெல்லாம் அடிபடும்னு பேசிக்கிறாங்க."

நண்பர்:
"ம்...

அதெல்லாம் கவலைப்படாதீங்க அண்ணே.

ரோட்டை விரிவுபடுத்தினா கூட நமக்கு ஒரு வழி கிடைக்காமலா போயிடும்?

ரோடு பெரிசா இருந்தா நமக்குத்தானே நல்லது."

அப்பா:
"நீ வேற...

இப்பவே இந்த ரோட்டை கடக்க முடியல.

எந்த வண்டிக்காரன் எப்ப வந்து இடிப்பானோன்னு பயமா இருக்கு.

நாமலாவது பரவாயில்லை...

பாவம் இந்த மரவட்டைகள்.

அப்படி எங்குதான் போக ஆசைப்படுங்கலோ!"

***********************************************************************


(அதே கடற்கரைச் சாலை. காலையில் பள்ளி செல்லும் நேரம்.)

முருகேஷ் அதே மரத்தடியில் உட்கார்ந்து இருக்கிறான்.

அவன் அருகில் ஒரு பழைய டயர் துண்டு.

சாலையில் வண்டிகள் பறந்துகொண்டு இருக்கின்றன.

ஒரு மரவட்டை சாலையை நோக்கி ஊர்ந்து செல்கிறது.

முருகேஷ் வேகமாக எழுந்து, அதை எடுத்து சாலையிலிருந்து தூரமாக மணலில் விடுகிறான்.

அது மீண்டும் சாலையை நோக்கி திரும்புகிறது.


(அதே நேரம். பள்ளிக்கூடச் சீருடையில் இரண்டு சிறுவர்கள் நடந்து செல்கிறார்கள்.)

சிறுவன் 1:
"டேய் முருகா, இன்னைக்கும் ஸ்கூலுக்கு வரலையா?"

முருகேஷ் பதில் சொல்லவில்லை.

சிறுவன் 2:
"விடுடா... அவன் இனிமே ஸ்கூலுக்கு வரமாட்டானாம்."

இருவரும் நடந்துகொண்டே போய்விடுகிறார்கள்.

முருகேஷ் சாலையையே பார்த்துக்கொண்டு இருக்கிறான்.


(சாலையின் மறுபக்கம்.)

ஒரு JCB இயந்திரம்.

சில ஆட்கள்.

உடைந்த சிமெண்டு தூண்கள்.

சிதறிக்கிடக்கும் ஓடுகள்.

முருகேஷ் மெதுவாக எழுந்து அங்கே செல்கிறான்.

மண்ணில் பாதியாக புதைந்திருக்கும் ஒரு பழைய பலகை.

அதில் தெரியும் சில எழுத்துகள் மட்டும்:

"...ஞ்சர் கடை"

அதை எடுத்து துடைக்கிறான்.

கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறான்.

மீண்டும் கீழே வைக்கிறான்.


(மாலை.)

முருகேஷின் அம்மா சாலையில் நடந்து வருகிறாள்.

அம்மா:
"முருகா..."

முருகேஷ் திரும்பவில்லை.

அம்மா:
"வீட்டுக்கு வாடா."

முருகேஷ் அமைதியாக இருக்கிறான்.

அம்மா:
"என்னடா தினமும் இங்கயே வந்து உட்கார்ந்துக்கிட்டு இருக்க?"

முருகேஷ் சாலையைப் பார்த்தபடியே கேட்கிறான்.

முருகேஷ்:
"அம்மா..."

அம்மா:
"என்னடா?"

முருகேஷ்:
"அப்பா சொன்னாருல..."

அம்மா:
"ம்..."

முருகேஷ்:
"ராஜா மரவட்டை... ராணி மரவட்டை..."

அம்மா:
"ம்..."

முருகேஷ்:
"அந்த ராஜா மரவட்டை இப்ப எங்க இருக்கும்?"

அம்மா பதில் சொல்லவில்லை.

முருகேஷ் கொஞ்ச நேரம் யோசிக்கிறான்.

பிறகு மெதுவாகக் கேட்கிறான்.

முருகேஷ்:
"அது கூட ரோட்டைக் கடக்கும்போது அடிபட்டிருக்கும் இல்லம்மா?"

அம்மா திடீரென்று முகத்தைத் திருப்பிக்கொள்கிறாள்.

கண்களில் நீர்.

தொலைவில் ஒரு லாரி வேகமாகக் கடந்து செல்கிறது.


(இரவு.)

சாலை வெறிச்சோடி இருக்கிறது.

தொலைவில் லாரி விளக்குகள்.

முருகேஷ் தனியாக நடந்து வருகிறான்.

சாலையின் ஓரத்தில் ஒரு மரவட்டை.

அதை எடுத்து கையில் வைத்துக்கொள்கிறான்.

மரவட்டையின் முதுகைப் பார்க்கிறான்.

பச்சை நிறக் கோடு.

முருகேஷின் முகத்தில் ஒரு சிறிய அதிர்ச்சி.

அவன் சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா என்று பார்க்கிறான்.

மீண்டும் மரவட்டையைப் பார்க்கிறான்.

முருகேஷ் (மெதுவாக):
"ராஜா மரவட்டை..."

அதை மிகவும் கவனமாக இரண்டு கைகளிலும் ஏந்திக்கொண்டு சாலையின் மறுபக்கம் நடக்கிறான்.

புதர்களுக்கு அருகில் அதை விடுகிறான்.

மரவட்டை மெதுவாக ஊர்ந்து இருளுக்குள் மறைகிறது.

முருகேஷ் அதையே பார்த்துக்கொண்டு நிற்கிறான்.

கண்கள் கலங்குகின்றன.

தொலைவில் ஒரு லாரி ஹார்ன்.

முருகேஷ் மெதுவாகச் சொல்கிறான்:

"உனக்கும் ரோட்டைக் கடக்கத் தெரியாதாப்பா..."

அவன் சாலையைப் பார்க்கிறான்.

வண்டிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கின்றன.


 

 

 

 


Tuesday, July 14, 2026

வார்த்தைகளோடு அலைபவன் - Amazon Kindle Book

 

 

"வார்த்தைகளோடு அலைபவன்" என்ற தலைப்பில் நான் எழுதிய பதிவுகள் அனைத்தையும் தொகுத்து, Amazon Kindle eBook-ஆக வெளியிட்டுள்ளேன்.

வாசிக்க விரும்புபவர்களுக்கு:

Amazon Kindle