Friday, October 28, 2011

இது சூப்பர் ஹீரோக்களின் காலம்

தீபாவளிக்கு வந்திருக்கும் திரைப்படங்களை பார்க்கும் போது ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது, "இது சூப்பர் ஹீரோக்களின் காலம்" என்று.  எங்கு திரும்பினாலும் சூப்பர் ஹீரோக்களாக இருக்கிறார்கள். இந்த தீபாவளிக்கு மட்டும் மூன்று புதிய சூப்பர் ஹீரோக்கள் உருவாகியுள்ளார்கள். (நான் இன்னும் ரா-1 பார்க்கவில்ல்லை, ஆனால், அந்த திரைப்படத்தைப் பார்த்த நண்பன் சொன்ன கதையின்படி அதுவும் சூப்பர் ஹீரோ திரைப்படம் தான் என்பது உறுதியாக தெரிகிறது)

ஏழை, பணக்காரன் என்று எல்லாருக்கும் சூப்பர் ஹீரோ தேவைப்படுகிறார்கள். அதை நன்கு அறிந்த சினிமா இயக்குநர்கள், இந்த முறை மூன்று புதிய சூப்பர் ஹீரோக்களை உருவாக்கியுள்ளார்கள். ஒருவன் - ஏழைகளுக்காக, மற்றொருவன் - தமிழர்களின் பெருமையை நிலைநாட்ட, இன்னொருவன் விளையாட்டில் மூழ்கியிருக்கும் இன்றைய சமூகத்துக்காக.

முதலில், மூன்று புதிய சூப்பர் ஹீரோக்களை தாங்கும் அளவு நாம் தயாராகயிருக்கிறோமா???. ஒரு சூப்பர் ஹீரோ வீடியோ கேமிலிருந்து குதிக்கிறார். இன்னொரு ஹீரோ மரபணு என்கின்ற Intellactual வார்த்தையிலிருந்து. மூன்றாவது சூப்பர் ஹீரோ, மேலே சொன்ன இரண்டை போலவும் இல்லாமல், ஒரு சாதாரண மனிதனே சூப்பர் ஹீரோவாக மாறுகிறார். "எந்த ஒரு புதிய சக்தியும் தேவை இல்லாமல், ஒரு சாதாரண மனிதன் கூட சூப்பர் ஹீரோவாக மாறலாம்" என்று சொல்வதின் மூலம், முதல் இரண்டு ஹீரோக்களை கடைசியாக வந்தவன் வீழ்த்தி விடுகிறான்.


நாம் சொன்ன அந்த சாதாரண சூப்பர் ஹீரோவால், "எப்படி இவ்வளவு விரைவாக ஒட முடிகிறது?? அதுவும் ரயிலை விட வேகமாக,!!! எப்படி வானிலிருந்து ஒரு காரின் மேல் குதிக்க முடிகிறது?? அதுவும் குதித்தவுடன் எப்படி காரின் நான்கு பக்க கண்ணாடியும் உடைகிறது!! எப்படி ஒரு இரும்பு கம்பியால், தலையில் அடித்த பின்னரும் சண்டை போட முடிகிறது?? கோயம்பேடிலிருந்து அண்ணா நகர் போகவே ஒருமணிநேரமாகும் இந்த காலத்தில் எப்படி சென்னை முழுவதும் அந்த சாதாரண சூப்பர் ஹீரோவால் போக முடிகிறது?? தலையில் தொப்பி போட்டாலே, வானத்தை நம்மால் பார்க்க முடியாத போது, நெற்றியை பாதி வரை துணியால் மறைத்த ஒருவனால், எப்படி நாலாம் பக்கமும் பார்த்து சண்டை போட முடிகிறது??" இப்படி பல கேள்விகளை கேட்பீர்கள் என்றால் உங்களுக்கு வரும் ஒரே பதில் "இது சினிமா பாஸ்".

சரி அவர்கள் சொல்வது போல் இது சினிமாவகே இருந்துவிட்டு போகட்டும், வாழ்க இளைய தளபதி.

சரி இன்னொரு சூப்பர் ஹீரோ திரைப்படத்தில் என்ன செய்கிறார்கள்??? 



ஏ.ஆர். முருகதாஸ் சார், தமிழர்கள் பற்றி நன்கு தெரிந்துவைத்து இருக்கிறீர்கள். திரைப்படம் முழுவதும் தமிழன், தமிழன் என்று சொன்னாலே படம் ஓடிவிடும் என்று நம்புகிறீர்கள். நல்ல வியாபார யுக்தி, நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துகள். சர்க்கஸ் ஹீரோ தீடிர் என்று தமிழர், தமிழ் தேசம், தமிழ் மொழி என்றெல்லாம் பேசுகிறார், அந்த வசனம் வரும் வரை, அவர் தமிழ் மீது ஆர்வம் உள்ளவர் என்று திரைப்படத்தில் எங்கேயுமே காட்டவில்லை. ஒருவேளை வசனம் எழுதி தயாராக இருப்பதால், அந்த காட்சியில் மட்டும் அவர் தமிழர் தலைவனாக மாறியிருக்கலாம். தவறில்லை, இது உங்கள் திரைப்படம், நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம். மீண்டும் வாழ்த்துகள்.

முருகதாஸ் சார் ஒரு சந்தேகம் சார் "இது இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நடக்கும் சண்டையா, இல்ல தமிழ் நாட்டுக்கும் சீனாவுக்கும் நடக்கும் சண்டையா??" நமது கேப்டன் மற்றும் ஆக்‌ஷன் கிங் கூட இந்தியாவுக்காக தான் போராடுவார்கள். தமிழனுக்காக போராடும் முதல் ஹீரோ இவர்தான் என்று நினைக்கிறேன். அப்பறம் இன்னொன்று சார், திரைப்படத்தில் ஒரு வசனம் வருகிறது "ஒரு தமிழனை முப்பது நாடுகள் சேர்ந்து கொன்றால், அது துரோகம்" என்று. (வாக்கியம் சரியாக நினைவில்லை) இந்த வசனம் எதற்காக அந்த காட்சியில் வருகிறது என்பதை இரவு முழுவதும் யோசித்தும் என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.

இப்பொழுது இது போதும். இதை போல் எழுதிக்கொண்டு இருந்தால், என்னை கூட எதாவது சூப்பர் ஹீரோ தாக்க நேரிடும் அபாயம் இருக்கிறது.

மொத்தத்தில் தீபாவளிக்கு இது போன்ற திரைப்படங்கள் பார்க்க நேரிடுவது, நரகாசுரனை கொன்ற பாவத்தாலேயே என்று நினைக்கிறேன்.

Wednesday, October 26, 2011

கடைசியாக நான் எனக்கான ஆயுதத்தை தேர்வு செய்துவிட்டேன்

 இந்த பதிவு உயிரோசையில் வெளிவந்துள்ளது.http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4944
கடைசியாக நான் எனக்கான ஆயுதத்தை தேர்வு செய்துவிட்டேன். எனக்கு தெரிந்த எல்லா ஆயுதங்களையும் முயற்சி செய்த பின்னர்தான், நான் இந்த ஆயுதத்தை தேர்வு செய்தேன். நீங்கள் நினைப்பது போல், இது கத்தியோ, கோடாலியோ, சுத்தியலோ இல்லை. சுத்தியல் மீதான எனது நம்பிக்கை தவிடு போடியாகி பல வருடங்கள் ஆகிறது. என் பேச்சை கேட்டு இன்னும் சுத்தியலை தூக்கி கொண்டு இருப்பவர்களிடம் நான் இப்பொழுது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சுத்தியலை இறுக்கமாக பிடித்து இருக்கும் அவர்களிடம் ஒரே ஒரு கேள்வி "சுத்தியலை நீங்கள் பிடித்திருக்கிறீர்களா?? அல்லது, சுத்தியல் உங்களை பிடித்திருக்கிறதா??" இந்த கேள்விக்கான உண்மையான பதிலை நீங்களே உங்களுக்கு சொல்லிக்கொள்ளுங்கள். என்னிடம் வேறு வாக்குவாதங்கள் வேண்டாம். மேலும், உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதையே செய்யுங்கள். பேசி பேசி சலித்து விட்டேன்.  மனிதர்களிடம் இனி பேசுவதாக இல்லை. சலிப்பின் உச்சத்தில்தான் இதை சொல்கிறேன். இனி நான் பேச போவது எல்லாம் ஆகாயத்திடம், வானவில்லிடம், அம்மாவாசை அன்று நிலவில்லாமல் தனியாக அழைந்துக்கொண்டு இருக்கும் நட்சத்திரங்களிடம், பல வருடங்களாக என் வீட்டிலிருந்தும் - நான் கண்டுகொள்ளாத ரோஜா பூ செடியிடம், பேருந்துகளின் இரைச்சலுக்கிடையே தனியாக நின்றுக்கொண்டு இருக்கும் மரங்களிடம். இன்னும் இவைபோல் எத்தனையோ 'களிடம்'.

மீண்டும் இதன் ஆரம்ப வரிகளுக்கு செல்கிறேன். கடைசியாக நான் எனக்கான ஆயுதத்தை தேர்வு செய்துவிட்டேன். இந்த ஆயுதத்தால் நான் யாரையும் இரத்த காவு வாங்க போவதில்லை. ஏற்கனவே இந்த பூமி இரத்தங்களால் நிரம்பி உள்ளது, மனிதர்கள் பல நேரங்களில் எனக்கு இரத்த பின்டங்களாக மட்டுமே தோன்றுகிறார்கள். இரக்கம் அற்ற மனிதர்கள். எத்தனையோ முறை அவர்களுக்கு இரக்கத்தைச் சொல்லி தர முயற்சி செய்திருக்கிறேன். ஒருவன் தன் வாழ்க்கையில் கண்டிப்பாக இரண்டு வீதமான மனிதர்களை மட்டும்தான் பார்க்கிறான். அவனுக்கு கீழே உள்ள மனிதர்கள், அவனுக்கு மேலே உள்ள மனிதர்கள், அல்லது இப்படியும் சொல்லலாம், அவனுக்கு கீழ் படியும் மனிதர்கள், அவன் கீழ் படியும் மனிதர்கள். அவனுக்கு கீழே உள்ள மனிதர்களிடம் இரக்கம் இல்லாமல் நடந்துக்கொண்டு, அவன் கீழ் படியும் மனிதர்களிடம் இரக்கத்தை எதிர்ப்பார்க்கிறான். ஒருவன் கீழ் படியும் மனிதர்களின் எண்ணிக்கை எப்பொழுதுமே அதிகமாகவே இருக்கிறது என்பதை ஒரு மனிதன் உணர மறுக்கும் போது. அவன் சர்வாதிகாரியாக மாறுகிறான். எனக்கு தெரிந்த பல நண்பர்கள் இப்படி மாறி உள்ளார்கள். அவர்களிடம் சில முறை இதைப்பற்றி விளக்கியிருக்கிறேன். ஆனால் அந்த விளக்கங்கள் என்னை பார்த்து நகைக்கவே உதவியாக இருந்து உள்ளது. ஆகவே தான், நான் முதலிலேயே சொன்னேன், நான் சழித்துவிட்டேன் என்று.

மீண்டும் இதன் ஆரம்ப வரிகளுக்கு செல்கிறேன். கடைசியாக நான் எனக்கான ஆயுதத்தை தேர்வு செய்துவிட்டேன். இந்த ஆயுதத்தை நான் எனது எதிரிகளிடம் உபயோகப்படுத்த போவதில்லை. ஆயுதத்தை எதிரியிடம் தான் உபயோகம் செய்ய வேண்டும் என்பது தவறான கருத்து. ஒரு ஆயுதத்தை நீங்கள் உங்கள் நன்மைக்காக எப்பொழுது வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம். "உங்களுக்கான ஆயுதத்தை நீங்கள் தேர்வு செய்யும் போதே, நீங்கள் சுயநலவாதியாக மாறிவிடுவதாக" ஒரு புனித புத்தகம் சொல்கிறது. சரி, நான் சுயநலவாதியாக இருந்துவிட்டு போகிறேன். என்னை சுற்றி உள்ளவர்கள் அவர்களின் ஆயுதத்தின் மூலம் என்னை தோல்வியடைய செய்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்,, எனக்கான ஆயுதத்தை நான் தேர்வு செயவதில்லை எந்தவீத தவறும் இல்லை என்றே நினைக்கிறேன். ஒரு காதலி அவளின் காதலை ஆயுதமாக பயன்படுத்திக்கொண்டு இருக்கிறாள். ஒரு தந்தை, அவரின் தந்தை பாசத்தை ஆயுதமாக வீசுகிறார், ஒரு அம்மா, அவளின் அன்னை பாசத்தை, ஒரு நண்பன், எப்பொழுதோ கடனாக தந்த ஒரு பெரும் தொகையை, ஒரு நாய் தன் எஜமானிடம், நேற்று இரவு வீசுவாசமாக் குரைத்ததை நினைவு படுத்த முயற்சிக்கிறது. ஒரு பெரியவர் அவரின் நோயினை பயன்படுத்துகிறார், ஒரு பிச்சைக்காரன் அவனின் வயிற்றை, இப்படி ஒவ்வொருவரும் தனக்கான ஒன்றை ஆயுதமாகப் பயன்படுத்தும் போது, நானும் ஆயுதத்தை தேட வேண்டிய கட்டாயம் எற்படுகிறது.

மீண்டும் இதன் ஆரம்ப வரிகளுக்கு செல்கிறேன். கடைசியாக நான் எனக்கான ஆயுதத்தை தேர்வு செய்துவிட்டேன். இப்பொழுது உங்களுக்கு தெரிந்திருக்கும் நான் தேர்வு செய்து இருக்கும் ஆயுதம் மெளனம் தான் என்பது.

Tuesday, October 18, 2011

ஒரு வாசகனாக மட்டும்

"உன்னுடைய காதலியின் பெயர்??" என்று யாராவது என்னிடம் கேட்டால்,  அதற்கான பதில் ஒவ்வொரு மாதமும் மாறிக்கொண்டேயிருக்கும். அதே போல், பதில் மாறிக்கொண்டேயிருக்கும் மற்றொரு கேள்வி "உனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்??". (குறிப்பு: மிகவும்)

இந்த கேள்வியை என் கல்லூரி ஆரம்ப நாட்களில் கேட்கப்பட்டு இருந்தால், அப்பொழுது என் பதில் "தபூ சங்கர்". அதற்கு முக்கிய காரணம் விகடனில் அவர் எழுதிய கவிதைகள். இதே கேள்வியை என்னுடைய பள்ளி இறுதி நாட்களில் கேட்கப்பட்டு இருந்தால், அப்பொழுது என் பதில் "கல்கி". பள்ளி நாட்களில் நான் படித்திருந்த ஒரே புத்தகம் "பொன்னியின் செல்வன்" மட்டும்தான். அந்த நாவலில் எனக்கு நந்தினி தான் மிகவும் பிடித்தமானவள், பிடிக்காதவளும் அவளே. இன்று வரை நான் பெண்களை பார்த்து பயப்பட இந்த நந்தினியே காரணம் என்று நினைக்கிறேன். பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு முறை படித்து உள்ளேன். இரண்டாவது முறையாக படித்தது கல்லூரி நாட்களில், நந்தினி தந்த பாதிப்பால் இந்த புத்தகத்தை இனி தொடவே கூடாது என்று முடிவு செய்தேன். அதன்படி இன்று வரை "பொன்னியின் செல்வன்" புத்தகத்தை பார்த்தால் ஒரு அடி தள்ளியே நிற்கிறேன்.

தபூ சங்கருக்கு பின் என் பட்டியலில் சேர்ந்தவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரின் அறிமுகமும் எனக்கு விகடனின் மூலம்தான் கிடைத்தது. அப்பொழுது நான் படித்துக்கொண்டிருந்த பத்திரிக்கைகள் "ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் மற்றும் இந்தியா டூடே" மட்டுமே.

கல்லூரி மூன்றாவது வருடத்தில் விகடனில் உலக சினிமாவைப் பற்றி ஒர் தொடர் வந்தது, செழியன் எழுதியது. அந்தந்த வாரங்களில் செழியன் எழுதியிருக்கும் படத்தை உடனே மூர் மார்க்கெட்டில் தேடிபிடித்து பார்ப்பேன். மின்ட் அருகில் வசித்த சதிஷ் அந்த வழியாகதான் கல்லூரிக்கு வர வேண்டும் என்பதால், அவனே நான் சொல்லும் படங்களை வாங்கி தந்துவிடுவான். இன்னொரு நண்பனான போனி, இந்த திரைப்படங்கள் அனைத்தையும் முன்னரே பார்த்தவனாக இருப்பான். அவனும் பல படங்களை சிபாரிசு செய்வான்.

எழுத்தாளர்கள் பற்றி ஆரம்பித்து, கடைசியாக சினிமாவுக்கு வந்துவிட்டேன். மன்னிக்கவும். கல்லூரி இறுதி நாட்களில் இணையத்தின் மூலம் சாருவின் அறிமுகம் கிடைத்தது. இப்படியும் எழுதலாமா என்று ஆச்சர்யம் அடையவைத்தது அவர் எழுத்து. குட்டி கதைகள் வந்த போது அவருடைய தீவிரமான ரசிகனாக மாறிப்போனேன். இந்நேரத்தில் எனது அறை நண்பன் அருண் "ஆத்மநாம், சம்பத்,பாதசாரி (காசி)" இப்படி பலர் எழுதிய புத்தகங்களை வாங்கி வருவான். ஒவ்வொரு புத்தகமும் படிக்க படிக்க அவர்களின் ரசிகனாக மாறிக்கொண்டே வந்தேன்.

"எஸ்.ரா, சாரு, ஜெயமோகன், பாரதி, சுந்தர ராமசாமி, ஆத்மநாம், வண்ணதாசன், வண்ணநிலவன், மனுஷ்ய புத்திரன், அசோகமித்ரன், நகுலன், ரமேஷ் பிரேம், முத்துலிங்கம்" இப்படி பட்டியல் நீண்டுக்கொண்டே இருந்தது, ஒவ்வொரு எழுத்தாளரையும் எப்படி பிடித்துப்போனது என்பதை இங்கே எழுத ஆரம்பித்தால், நூறு பக்கங்கள் தாண்டி விடும்.

பிடித்த எழுத்தாளர் என்ற பட்டியலில் எப்பொழுதும் எண்ணிக்கை அதிகரித்தக் கொண்டே போகிறது, ஆனால் மிகவும் பிடித்த எழுத்தாளர் என்று கேள்வி வரும் போது அதற்கான விடை மட்டும் என்னிடம் மாறிக்கொண்டேயிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னால் என் பட்டியலில் இணைந்து, தற்பொழுது எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளராக மாறியிருப்பவர் "எம்.டி.எம்" என்று அழைக்கபடும் "எம்.டி.முத்துக்குமாரசாமி". ஒரு நான்கு மாதங்களுக்கு முன்னால், என்னிடம் யாராவது இவர் பெயரை சொல்லி இருந்தால், "அ.முத்துலிங்கம்" பற்றிதான் சொல்கிறார்கள் என்று நினைத்திருப்பேன்.

இத்தனை நாட்களாக இவரைப் பற்றி தெரியாமல் இருந்தது என் தவறுதான். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பின் எழுத வந்துள்ளார் "எம்.டி.எம்". இவர் ஏற்கனவே கதைகள், நாவல், நாடகங்கள், பின் நவீனத்துவ கோட்பாடு கட்டுரைகள் என்று பலவற்றை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வந்தவர்.

இவருடைய பழைய புத்தகங்கள் ஒன்றை கூட இப்பொழுது கண்டுபிடிக்க முடியவில்லை. இணையத்தில் தேடிய போது இவரைப் பற்றிய பல பதிவுகள் கிடைக்கின்றன. இவர் தற்பொழுது வலைப்பதிவில் மட்டுமே எழுதிவருகிறார். விரைவில் ஒரு புதிய நாவல் புத்தகமாக வரும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

பகடியுடன் சேர்ந்து எத்தனையோ விதமான மாற்று கருத்துக்களையும் இவர் எழுத்து தருகிறது. இவருடைய வலைப்பதிவு முகவரி கீழே உள்ளது கண்டிப்பாக படித்து பார்க்கவும்.

 http://mdmuthukumaraswamy.blogspot.com/


Monday, October 17, 2011

கீழே உள்ள குறிப்புகளையும் படிக்கவும் - (சவால் சிறுகதை-2011)


கோகுல் என்ற கதாபாத்திரத்தை உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்த கதையை எழுதும் எனக்கே தெரியாத போது, உங்களுக்கு எப்படி தெரியக்கூடும்??. ஆகவே, எனக்கும் சேர்த்து அவனை இங்கு அறிமுகம் செய்துக்கொள்கிறேன். அதோ தெருமுனையில் ஆறு அடியில் நடந்து வந்துக்கொண்டு இருக்கிறானே அவன்'தான் எஸ்.பி கோகுல். நீங்கள் நினைப்பதுபோல் எஸ்.பி என்பது அவன் இனிஷியல்தான். ஒரே தெருவில் ஒரே பெயரில் நான்கைந்து நபர்கள் வசித்தால், அவர்களுடைய இனிஷியல் வைத்து அழைப்பது உங்களுக்கும் தெரிந்ததே. அதன்படி எஸ்.பி கோகுல், அவர்கள் தெருவில் எஸ்.பி என்றே அழைக்கப்பட்டான். இசையின்1 மீது தீவிர காதல் கொண்ட எஸ்.பி கோகுலும் மற்றவர்கள் தன்னை எஸ்.பி என்று அழைப்பதையே விரும்பினான். எஸ்.பி இப்பொழுது நின்று பேசிக்கொண்டு இருக்கிறானே அவன் பெயர் கோபி. அவன் இனிஷியல் கோ.பி (தமிழில்)2. இனிஷியல் வைத்து அழைப்பது என்ற கலாச்சாரத்தின்படி, அவனை எப்படி அழைப்பது என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். ஏனென்றால், கோபியின் கதாபாத்திரம் இங்கு தேவையில்லாத ஒன்று. கோபியின் அண்ணன் விஷ்ணுவைப் பற்றி சொல்லவே, இங்கு கோபியை அறிமுகம் செய்தேன். ஆம், சரியாக கண்டுபிடித்து விட்டீர்கள் நமது கதையின் மற்றொரு ஹீரோவான விஷ்ணுவின் தம்பிதான் கோ.பி கோபி.

இந்த கதையை படிக்கும் உங்களுக்கு தெரிந்திருக்கும் இது "சவால்" சிறுகதைப் போட்டிக்காக எழுதப்படும் கதை என்பது. புகைப்படத்தைப் பார்த்து கதை எழுத வேண்டும் என்ற வீதியின் கீழ், அந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு கதாபாத்திரங்களை கதையில் அறிமுகம் செய்தாகிவிட்டது. இனி இவர்களை வைத்து கதையை உருவாக்க வேண்டும். ஆனால், அதில் "சார்" என்று ஒரு வார்த்தை வருகிறதே. அந்த சாரை எப்படி கதையில் கொண்டுவருவது என்பதுதான் எனக்கு இப்பொழுதைய குழப்பம். பார்ப்போம் கதை எழுதும் போது யாராவது ஒருவன் மாட்டாமலா போய்டுவான். அப்படியும் யாரும் மாட்டவில்லை என்றால், இருக்கவே இருக்கிறீர்கள் நீங்கள், அந்த சார் நீங்கள்'தான் என்று சொல்லிக்கூட கதையை முடித்துவிடலாம். என்ன உங்களுக்கு சார் கதாபாத்திரம் வேண்டாமா?? உலகத்திலேயே மிகவும் டீசன்டான மற்றும் அதிகம் உபயோகப்படுத்தபட்ட கதாபாத்திரம் "சார்" கதாபாத்திரம்தான். அந்த கதாபாத்திரம் உங்களுக்கு வேண்டாமா?? கதை முடிவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது, கொஞ்சம் யோசித்து சொல்லுங்கள்.

இன்னும் அவர்கள் இருவரும் நின்று பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள். தனது அண்ணன் தர சொல்லியதாக சொல்லி கோபி ஒரு துண்டு சீட்டை எஸ்.பி'யிடம் தருகிறான். அந்த சீட்டில் என்ன எழுதியிருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்ததே. இருந்தாலும் ஒரு முறை சொல்லிவிடுகிறேன்.

Mr.கோகுல்,
S W H2 6F - இதுதான் குறியீடு. கவனம்.

-விஷ்ணு.

இதை பரிசலின் வலைப்பதிவில் முதலில் படிக்கும் போது எப்படி நாம் அனைவரும் முழித்தோமோ, அதே போலதான் எஸ்.பியும் முழித்தான். விஷ்ணுவைப் பற்றி கோபியிடம் விசாரித்த போது, "அவன் வேலை விசயமாக வேலூர் வரை சென்று இருப்பதாகவும், நாளை காலைதான் வருவான்" என்றான். மேலும், விஷ்ணு செல்போனை மறந்து வீட்டிலேயே வைத்து விட்டான் என்ற கூடுதல் தகவலையும் சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து கோபி மறைந்து போனான்.

எஸ்.பி பல முறை யோசித்தும் அந்த துண்டு சீட்டில் என்ன எழுதி உள்ளது என்பதை சரியான முறையில் கணிக்க முடியவில்லை. ஒருவேளை "H2 6F" என்பது 'H' ப்ளாக் அப்பார்ட்மெண்டில் இருக்கும் ஆறாவது மாடியை குறிக்கலாம். ஆனால் அந்த ஆறாவது மாடி மொட்டை மாடி ஆயிற்றே. இந்த "S W" என்பது எதைக் குறிக்கிறது, சரி மொட்டை மாடிக்கு போய் என்னதான் உள்ளது என்பதை பார்த்துவிட முடிவுசெய்த எஸ்.பிக்கு அங்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது3.

அடுத்த நாள் காலை, விஷ்ணுவின் வீட்டுக்கு எஸ்.பி சென்ற போது, விஷ்ணுவிடம் 'B' ப்ளாக்கில் வசிக்கும் ஒரு பெரியவர் மிகவும் கோபமாக எதையோ பேசிக்கொண்டு இருந்தார். விஷ்ணு மிகவும் கஷ்டப்பட்டு அவரை சமாதானம் செய்துக்கொண்டிருந்தான். கடைசியில் அவர் சமாதானம் அடையாமல், வீட்டை விட்டு மிகவும் வேகமாக வெளியேறினார்.

விஷ்ணுவிடம் எஸ்.பி என்னவென்று விசாரித்த போது, விஷ்ணு ஒரு துண்டு சீட்டை எடுத்து எஸ்.பியிடம் நீட்டினான். .

Sir,

எஸ்.பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம்.

-விஷ்ணு

"எல்லாம் இந்த கோபியால'தான் மச்சி. நேற்று அந்த 'B' ப்ளாக் பெரியவரிடம் போய் இதை கொடுத்திருக்கிறான். அவருக்கு ஒன்னுமே புரியமா, நைட்டு முழுவதும் தூங்கவே இல்லையாம். கோபியிடம் விசாரித்தால், ஏதோ சைக்காலஜி ப்ராஜெக்ட்'காக இப்படி பண்ணுனேன் என்று கொஞ்சம் கூட வருத்தப்படாமல் சொன்றான். அப்படியே அறையலாம் போல வந்துச்சு. இவன் சைக்காலஜி படிச்சு முடிக்கிறதுக்குள்ளே நம்ம உயிரை வாங்கிடுவான் போல. உங்கிட்டயும் ஏதோ தந்தானாமே?? ரொம்ப சாரி மச்சி"

எஸ்.பி தன்னிடம் இருந்த துண்டி சீட்டை விஷ்ணுவிடம் தந்தான். அவன் படித்த பின், தலையில் அடித்துக்கொண்டே "பழசாவது பரவாயில்லை போல, இதுல ஒன்னுமே புரியலயே" என்றான். பின் இரண்டு சீட்டையும் அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு, இருவரும் ஆளுக்கு ஒரு சேரில் அமர்ந்தார்கள். அப்பொழுது விஷ்ணுவின் செல்போன் அடித்தது, அதில் "Vishnu Informer" Calling4 என்று வந்தது. 



இத்துடன் கதை முடிந்து விடுகிறது, உங்களுக்கு நேரமும் பொருமையும் இருந்தால், கீழே உள்ள குறிப்புகளையும் படிக்கவும். வெளியில் மழை வருவது போல் உள்ளது, மொட்டை மாடியில் துணிகளை காயப்போட்டு உள்ளேன். நான் துணிகளை துவைப்பதே வாரம் ஒருமுறைதான் அன்றுதானா இந்த மழையும் வர வேண்டும்???

குறிப்பு:

1) தட்டினால் சத்தம் வருமே, அந்த இசையை இங்கு குறிக்கவில்லை. இங்கு இசை என்பது 'H' ப்ளாக்கில் இரண்டாவது மாடியில் வசிக்கும் இசையினி என்ற பெண்ணை குறிக்கிறது. இசையினியின் அப்பா, முற்போக்கு எழுத்தாளர்கள் என்று தன்னைதானே சொல்லிக்கொண்டு இருக்கும் கூட்டத்தை சேர்ந்தவர் என்பதால், இசையினி என்ற பெயர் அவளுக்கு எதற்காக வைக்கப்பட்டது என்பதைப் பற்றி நாம் இங்கு ஆராயத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

2) உண்மையாகவே கோபியின் இனிஷியல் ஜி.பி. கதையின் சுவாரஸ்யத்துக்காக அதை தமிழில் மாற்றி கோ.பி என்று எழுதியிருக்கிறேன். இதைப்போல் கதையின் சுவாரஸ்யத்துக்காக பல இடங்களில் பலவற்றை சேர்த்து உள்ளேன். (எ.கா)5

3) எஸ்.பி மொட்டைமாடியில் ஏறி பார்த்தப்போது, அங்கு இசையினியும் அப்பார்ட்மெண்டிற்கு புதிதாக குடி வந்திருக்கும் குமாரும் மிகவும் நேருக்கமாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.

4) அந்த Vishnu Informer யார் என்பது உங்களுக்கு தெரிந்தாக வேண்டுமா?? சத்தியமா எனக்கும் தெரியாது சார். நான்தான் காய்ப்போட்ட துணிகளை எடுக்க வந்துவிட்டேனே. வேண்டுமானால் "A" ப்ளாக்கில் வசிக்கும் இன்னொரு விஷ்ணுவின் பெயர்தான் "Vishnu Informer" என்று வைத்துக்கொள்ளலாமா??. போதும் சார், இந்த புகைப்படத்துக்கு இந்த கதை போதும் சார்.

5) கதை 1500 வார்த்தைகளை தாண்ட கூடாது என்ற வீதியின் காரணமாக எ.கா பகுதி நீக்கப்பட்டு விட்டது6.

6) ஒற்றைப்படை எண்களில் குறிப்புகளை முடிக்க கூடாது என்று நண்பன் சொன்னதால், இந்த 6வது குறிப்பு. இதே நண்பன்தான், "கதையை சவால் போட்டிக்கு அனுப்ப வேண்டாம், இன்னொரு போட்டியில் பத்தாயிரம் ரூபாய் பரிசு தருகிறார்கள், அங்கு அனுப்புவோம்" என்று எனக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கிறான்.

கதையை படித்த அனைவரும் (பிடிக்கிறதோ இல்லையோ) கீழே உள்ள லைக் பட்டனை கிளிக் செய்யவும்.