Thursday, April 8, 2010

அங்காடித் தெரு

வசந்தபாலனின் "வெயில்" திரைப்படத்தை பார்த்துவிட்டு என் நண்பன் திரையரங்கில் உட்கார்ந்து அழுதுக்கொண்டு இருந்தது, இன்னும் என் நினைவில் இருக்கிறது. அதுவரை அவன் அழுது நான் பார்த்ததே இல்லை. இதுவே வசந்தபாலனின் அடுத்த படைப்பான "அங்காடித் தெரு" மீது எனக்கு ஒருவித ஈடுபாட்டை உண்டு பண்ணியது.

ஒருவித பயத்தோடுதான் இந்த திரைப்படத்தை பார்க்க போனேன். இதுவரை நான் எதிர்பார்ப்போடு பார்த்த எந்த திரைப்படமும் நன்றாக இருந்தது இல்லை. அப்படி நான் பார்த்து மறக்க முடியாத ஒரு திரைப்படம் "மாயக்கண்ணாடி". "தவமாய் தவமிருந்து"படத்தை எடுத்த சேரனா அது??.

"அங்காடித் தெரு"வை பற்றி எப்படி எழுதுவது என்றே தெரியவில்லை. முதலில் இந்த படத்தைப்பற்றி எழுதுவதற்க்கு, நான் முற்றிலும் தகுதியற்றவன். வாழ்வின் இன்பங்களை மட்டுமே பார்த்து வளர்ந்தவன் நான். ஆனால், வாழ்க்கையில் துன்பங்களை மட்டுமே கொண்டவர்களின் கதை இது. என் நண்பன் எப்பொழுதும் என்னிடம் ஒன்று சொல்வான் " For some ppls, life is more complicated".

ஜெயமோகனின் வசனங்கள் படம் முழுவதும் நம்மை கலங்க வைக்கின்றன. "இந்த உலகத்தில் அவன் ஒருத்தனிடமாவது, நான் சூடு, சொரனையுடன் இருக்கிறேனே!!" என்று தன் தோழியிடம், அஞ்சலி சொல்லும் வசனம் ஒன்றே போதும் ஜெயமோகனை பற்றி சொல்வதற்க்கு.

இரண்டே நிமிடங்கள் வந்தாலும் அஞ்சலியின் அப்பா கதாபாத்திரம் நம்மை முற்றிலும் பாதித்துவிடுகிறது. கேமராவும், பின்னனி இசையும் படத்திற்க்கு ஒரு பெரிய மைனஸ். இதன் காரணமாக திரைப்படத்தை பார்க்கும்போது ஒரு சலிப்பு உண்டாகிறது.

அஞ்சலியை பற்றி எதாவது கண்டிப்பாக சொல்லியாக வேண்டும். "கற்றது தமிழ்"க்கு பிறகு மீண்டும் அதை போன்றே சோகமும், குறும்பும் சேர்ந்த ஒரு கதாபாத்திரம். அருமையாக நடித்து உள்ளார்.

திரைப்படத்தின் கதை: இதை பற்றி ஏற்கனவே பலர் எழுதிவிட்டனர். எனக்கு சோகக்கதைகளை சோகமாக எழுத தெரியாது, ஆகவே கதையை இங்கே கொலை செய்ய விரும்பவில்லை.

திரைப்படத்தை பார்க்கும் யாரும் ஒரு நிமிடம் கூட தொடர்ந்து சிரித்துவிட கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் வசந்தபாலன் இந்த படத்தை எடுத்து இருக்கிறார். ஆனால், சங்கமம் திரையரங்கில் எனது அருகில் அமர்ந்து படம் பார்த்துகொண்டு இருந்த ஒரு காதல் ஜோடி படம் முடியும்வரை பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார்கள். எனது நண்பன் சொன்னது போல் " life is more complicated, only for some ppls "

1 comment:

N.Parthiban said...

//திரைப்படத்தை பார்க்கும் யாரும் ஒரு நிமிடம் கூட தொடர்ந்து சிரித்துவிட கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் வசந்தபாலன் இந்த படத்தை எடுத்து இருக்கிறார். ஆனால், சங்கமம் திரையரங்கில் எனது அருகில் அமர்ந்து படம் பார்த்துகொண்டு இருந்த ஒரு காதல் ஜோடி படம் முடியும்வரை பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார்கள். எனது நண்பன் சொன்னது போல் " life is more complicated, only for some ppls "//

great comment