Monday, October 17, 2011

கீழே உள்ள குறிப்புகளையும் படிக்கவும் - (சவால் சிறுகதை-2011)


கோகுல் என்ற கதாபாத்திரத்தை உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்த கதையை எழுதும் எனக்கே தெரியாத போது, உங்களுக்கு எப்படி தெரியக்கூடும்??. ஆகவே, எனக்கும் சேர்த்து அவனை இங்கு அறிமுகம் செய்துக்கொள்கிறேன். அதோ தெருமுனையில் ஆறு அடியில் நடந்து வந்துக்கொண்டு இருக்கிறானே அவன்'தான் எஸ்.பி கோகுல். நீங்கள் நினைப்பதுபோல் எஸ்.பி என்பது அவன் இனிஷியல்தான். ஒரே தெருவில் ஒரே பெயரில் நான்கைந்து நபர்கள் வசித்தால், அவர்களுடைய இனிஷியல் வைத்து அழைப்பது உங்களுக்கும் தெரிந்ததே. அதன்படி எஸ்.பி கோகுல், அவர்கள் தெருவில் எஸ்.பி என்றே அழைக்கப்பட்டான். இசையின்1 மீது தீவிர காதல் கொண்ட எஸ்.பி கோகுலும் மற்றவர்கள் தன்னை எஸ்.பி என்று அழைப்பதையே விரும்பினான். எஸ்.பி இப்பொழுது நின்று பேசிக்கொண்டு இருக்கிறானே அவன் பெயர் கோபி. அவன் இனிஷியல் கோ.பி (தமிழில்)2. இனிஷியல் வைத்து அழைப்பது என்ற கலாச்சாரத்தின்படி, அவனை எப்படி அழைப்பது என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். ஏனென்றால், கோபியின் கதாபாத்திரம் இங்கு தேவையில்லாத ஒன்று. கோபியின் அண்ணன் விஷ்ணுவைப் பற்றி சொல்லவே, இங்கு கோபியை அறிமுகம் செய்தேன். ஆம், சரியாக கண்டுபிடித்து விட்டீர்கள் நமது கதையின் மற்றொரு ஹீரோவான விஷ்ணுவின் தம்பிதான் கோ.பி கோபி.

இந்த கதையை படிக்கும் உங்களுக்கு தெரிந்திருக்கும் இது "சவால்" சிறுகதைப் போட்டிக்காக எழுதப்படும் கதை என்பது. புகைப்படத்தைப் பார்த்து கதை எழுத வேண்டும் என்ற வீதியின் கீழ், அந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு கதாபாத்திரங்களை கதையில் அறிமுகம் செய்தாகிவிட்டது. இனி இவர்களை வைத்து கதையை உருவாக்க வேண்டும். ஆனால், அதில் "சார்" என்று ஒரு வார்த்தை வருகிறதே. அந்த சாரை எப்படி கதையில் கொண்டுவருவது என்பதுதான் எனக்கு இப்பொழுதைய குழப்பம். பார்ப்போம் கதை எழுதும் போது யாராவது ஒருவன் மாட்டாமலா போய்டுவான். அப்படியும் யாரும் மாட்டவில்லை என்றால், இருக்கவே இருக்கிறீர்கள் நீங்கள், அந்த சார் நீங்கள்'தான் என்று சொல்லிக்கூட கதையை முடித்துவிடலாம். என்ன உங்களுக்கு சார் கதாபாத்திரம் வேண்டாமா?? உலகத்திலேயே மிகவும் டீசன்டான மற்றும் அதிகம் உபயோகப்படுத்தபட்ட கதாபாத்திரம் "சார்" கதாபாத்திரம்தான். அந்த கதாபாத்திரம் உங்களுக்கு வேண்டாமா?? கதை முடிவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது, கொஞ்சம் யோசித்து சொல்லுங்கள்.

இன்னும் அவர்கள் இருவரும் நின்று பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள். தனது அண்ணன் தர சொல்லியதாக சொல்லி கோபி ஒரு துண்டு சீட்டை எஸ்.பி'யிடம் தருகிறான். அந்த சீட்டில் என்ன எழுதியிருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்ததே. இருந்தாலும் ஒரு முறை சொல்லிவிடுகிறேன்.

Mr.கோகுல்,
S W H2 6F - இதுதான் குறியீடு. கவனம்.

-விஷ்ணு.

இதை பரிசலின் வலைப்பதிவில் முதலில் படிக்கும் போது எப்படி நாம் அனைவரும் முழித்தோமோ, அதே போலதான் எஸ்.பியும் முழித்தான். விஷ்ணுவைப் பற்றி கோபியிடம் விசாரித்த போது, "அவன் வேலை விசயமாக வேலூர் வரை சென்று இருப்பதாகவும், நாளை காலைதான் வருவான்" என்றான். மேலும், விஷ்ணு செல்போனை மறந்து வீட்டிலேயே வைத்து விட்டான் என்ற கூடுதல் தகவலையும் சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து கோபி மறைந்து போனான்.

எஸ்.பி பல முறை யோசித்தும் அந்த துண்டு சீட்டில் என்ன எழுதி உள்ளது என்பதை சரியான முறையில் கணிக்க முடியவில்லை. ஒருவேளை "H2 6F" என்பது 'H' ப்ளாக் அப்பார்ட்மெண்டில் இருக்கும் ஆறாவது மாடியை குறிக்கலாம். ஆனால் அந்த ஆறாவது மாடி மொட்டை மாடி ஆயிற்றே. இந்த "S W" என்பது எதைக் குறிக்கிறது, சரி மொட்டை மாடிக்கு போய் என்னதான் உள்ளது என்பதை பார்த்துவிட முடிவுசெய்த எஸ்.பிக்கு அங்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது3.

அடுத்த நாள் காலை, விஷ்ணுவின் வீட்டுக்கு எஸ்.பி சென்ற போது, விஷ்ணுவிடம் 'B' ப்ளாக்கில் வசிக்கும் ஒரு பெரியவர் மிகவும் கோபமாக எதையோ பேசிக்கொண்டு இருந்தார். விஷ்ணு மிகவும் கஷ்டப்பட்டு அவரை சமாதானம் செய்துக்கொண்டிருந்தான். கடைசியில் அவர் சமாதானம் அடையாமல், வீட்டை விட்டு மிகவும் வேகமாக வெளியேறினார்.

விஷ்ணுவிடம் எஸ்.பி என்னவென்று விசாரித்த போது, விஷ்ணு ஒரு துண்டு சீட்டை எடுத்து எஸ்.பியிடம் நீட்டினான். .

Sir,

எஸ்.பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம்.

-விஷ்ணு

"எல்லாம் இந்த கோபியால'தான் மச்சி. நேற்று அந்த 'B' ப்ளாக் பெரியவரிடம் போய் இதை கொடுத்திருக்கிறான். அவருக்கு ஒன்னுமே புரியமா, நைட்டு முழுவதும் தூங்கவே இல்லையாம். கோபியிடம் விசாரித்தால், ஏதோ சைக்காலஜி ப்ராஜெக்ட்'காக இப்படி பண்ணுனேன் என்று கொஞ்சம் கூட வருத்தப்படாமல் சொன்றான். அப்படியே அறையலாம் போல வந்துச்சு. இவன் சைக்காலஜி படிச்சு முடிக்கிறதுக்குள்ளே நம்ம உயிரை வாங்கிடுவான் போல. உங்கிட்டயும் ஏதோ தந்தானாமே?? ரொம்ப சாரி மச்சி"

எஸ்.பி தன்னிடம் இருந்த துண்டி சீட்டை விஷ்ணுவிடம் தந்தான். அவன் படித்த பின், தலையில் அடித்துக்கொண்டே "பழசாவது பரவாயில்லை போல, இதுல ஒன்னுமே புரியலயே" என்றான். பின் இரண்டு சீட்டையும் அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு, இருவரும் ஆளுக்கு ஒரு சேரில் அமர்ந்தார்கள். அப்பொழுது விஷ்ணுவின் செல்போன் அடித்தது, அதில் "Vishnu Informer" Calling4 என்று வந்தது. 



இத்துடன் கதை முடிந்து விடுகிறது, உங்களுக்கு நேரமும் பொருமையும் இருந்தால், கீழே உள்ள குறிப்புகளையும் படிக்கவும். வெளியில் மழை வருவது போல் உள்ளது, மொட்டை மாடியில் துணிகளை காயப்போட்டு உள்ளேன். நான் துணிகளை துவைப்பதே வாரம் ஒருமுறைதான் அன்றுதானா இந்த மழையும் வர வேண்டும்???

குறிப்பு:

1) தட்டினால் சத்தம் வருமே, அந்த இசையை இங்கு குறிக்கவில்லை. இங்கு இசை என்பது 'H' ப்ளாக்கில் இரண்டாவது மாடியில் வசிக்கும் இசையினி என்ற பெண்ணை குறிக்கிறது. இசையினியின் அப்பா, முற்போக்கு எழுத்தாளர்கள் என்று தன்னைதானே சொல்லிக்கொண்டு இருக்கும் கூட்டத்தை சேர்ந்தவர் என்பதால், இசையினி என்ற பெயர் அவளுக்கு எதற்காக வைக்கப்பட்டது என்பதைப் பற்றி நாம் இங்கு ஆராயத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

2) உண்மையாகவே கோபியின் இனிஷியல் ஜி.பி. கதையின் சுவாரஸ்யத்துக்காக அதை தமிழில் மாற்றி கோ.பி என்று எழுதியிருக்கிறேன். இதைப்போல் கதையின் சுவாரஸ்யத்துக்காக பல இடங்களில் பலவற்றை சேர்த்து உள்ளேன். (எ.கா)5

3) எஸ்.பி மொட்டைமாடியில் ஏறி பார்த்தப்போது, அங்கு இசையினியும் அப்பார்ட்மெண்டிற்கு புதிதாக குடி வந்திருக்கும் குமாரும் மிகவும் நேருக்கமாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.

4) அந்த Vishnu Informer யார் என்பது உங்களுக்கு தெரிந்தாக வேண்டுமா?? சத்தியமா எனக்கும் தெரியாது சார். நான்தான் காய்ப்போட்ட துணிகளை எடுக்க வந்துவிட்டேனே. வேண்டுமானால் "A" ப்ளாக்கில் வசிக்கும் இன்னொரு விஷ்ணுவின் பெயர்தான் "Vishnu Informer" என்று வைத்துக்கொள்ளலாமா??. போதும் சார், இந்த புகைப்படத்துக்கு இந்த கதை போதும் சார்.

5) கதை 1500 வார்த்தைகளை தாண்ட கூடாது என்ற வீதியின் காரணமாக எ.கா பகுதி நீக்கப்பட்டு விட்டது6.

6) ஒற்றைப்படை எண்களில் குறிப்புகளை முடிக்க கூடாது என்று நண்பன் சொன்னதால், இந்த 6வது குறிப்பு. இதே நண்பன்தான், "கதையை சவால் போட்டிக்கு அனுப்ப வேண்டாம், இன்னொரு போட்டியில் பத்தாயிரம் ரூபாய் பரிசு தருகிறார்கள், அங்கு அனுப்புவோம்" என்று எனக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கிறான்.

கதையை படித்த அனைவரும் (பிடிக்கிறதோ இல்லையோ) கீழே உள்ள லைக் பட்டனை கிளிக் செய்யவும்.

7 comments:

middleclassmadhavi said...

படித்து ரசித்தேன்! (தலைப்பைத் திரும்பவும்):-))

Unknown said...

கதை நல்லா இருக்கு. நல்லா கலாய்க்கிறீங்க...
வாழ்த்துகள்.
அப்படியே என்னோட கலாய்ப்பையும் படிச்சுடுங்க..
http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html

நம்பிக்கைபாண்டியன் said...

போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றதற்கு இனிய வாழ்த்துக்கள்!

சரவண வடிவேல்.வே said...

நன்றி பாண்டியன்..

இந்த கதைக்கு வந்துள்ள 35 லைக்'களில், 33 லைக்குகள் நானே போட்டது... மீதி உள்ள 2 லைக்குகளை போட்டவர்களுக்கு இந்த பரிசை பகிர்ந்து தரலாம் என்று இருக்கிறேன்... ஆகவே அந்த இரண்டு லைக் போட்டவர்கள் யாராக இருந்தாலும் மேடைக்கு வரவும்...

சுப்பிரமணி சேகர் said...

oh. இதை miss பண்ணிட்டேன். நாளைக்குப் படிக்கிறேன்... இப்போ ஒரு அவசர வேலை இருக்கிறது. ;)

புகழன் said...

உங்கள் தளத்திற்கு இன்றுதான் முதன் முறையாக வந்துள்ளேன்.
உங்கள் கதைகள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன.
எம்.ஜி. சுரேஷின் சாயலை உங்கள் எழுத்துக்களில் காண முடிகிறது.
ஒருவேளை வேறெந்த நாவல்கள், கதைகளையும் நீண்டகாலமாகப் படிக்காது பின்நவீன நடையை அதிகமதிகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சமீப நாட்களாக சமீபமாக அவரது நாவல்களை நான் படித்துக் கொண்டிருப்பதுகூட இவ்விதமான மாயைக்கு காரணமாக இருக்கலாம்.

சரவண வடிவேல்.வே said...

@புகழன்..

உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி.. இந்த புத்தகக் கண்காட்சியிலிருந்துதான் நான் எம்.ஜி.சுரேஷை படிக்க தொடங்கியுள்ளேன். அவருடைய 37 மற்றும் அவந்திகாவின் கொலைக்கு ஆறு காரணங்கள் ஆகிய புத்தகங்களைதான் தற்பொழுது படித்து உள்ளேன். அவருடைய மற்ற புத்தகங்கள் அலமாரியில் உள்ளது, இனிமேல்தான் படிக்க வேண்டும்.

ஆனால், பின்நவீனத்துவ எழுத்தில் எனக்கு மிகவும் பிடித்தது ரமேஷ்-பிரேம் எழுத்து தான்....