இந்த பதிவு உயிரோசையில் வெளிவந்துள்ளது.http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4944கடைசியாக நான் எனக்கான ஆயுதத்தை தேர்வு செய்துவிட்டேன். எனக்கு தெரிந்த எல்லா ஆயுதங்களையும் முயற்சி செய்த பின்னர்தான், நான் இந்த ஆயுதத்தை தேர்வு செய்தேன். நீங்கள் நினைப்பது போல், இது கத்தியோ, கோடாலியோ, சுத்தியலோ இல்லை. சுத்தியல் மீதான எனது நம்பிக்கை தவிடு போடியாகி பல வருடங்கள் ஆகிறது. என் பேச்சை கேட்டு இன்னும் சுத்தியலை தூக்கி கொண்டு இருப்பவர்களிடம் நான் இப்பொழுது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சுத்தியலை இறுக்கமாக பிடித்து இருக்கும் அவர்களிடம் ஒரே ஒரு கேள்வி "சுத்தியலை நீங்கள் பிடித்திருக்கிறீர்களா?? அல்லது, சுத்தியல் உங்களை பிடித்திருக்கிறதா??" இந்த கேள்விக்கான உண்மையான பதிலை நீங்களே உங்களுக்கு சொல்லிக்கொள்ளுங்கள். என்னிடம் வேறு வாக்குவாதங்கள் வேண்டாம். மேலும், உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதையே செய்யுங்கள். பேசி பேசி சலித்து விட்டேன். மனிதர்களிடம் இனி பேசுவதாக இல்லை. சலிப்பின் உச்சத்தில்தான் இதை சொல்கிறேன். இனி நான் பேச போவது எல்லாம் ஆகாயத்திடம், வானவில்லிடம், அம்மாவாசை அன்று நிலவில்லாமல் தனியாக அழைந்துக்கொண்டு இருக்கும் நட்சத்திரங்களிடம், பல வருடங்களாக என் வீட்டிலிருந்தும் - நான் கண்டுகொள்ளாத ரோஜா பூ செடியிடம், பேருந்துகளின் இரைச்சலுக்கிடையே தனியாக நின்றுக்கொண்டு இருக்கும் மரங்களிடம். இன்னும் இவைபோல் எத்தனையோ 'களிடம்'.
மீண்டும் இதன் ஆரம்ப வரிகளுக்கு செல்கிறேன். கடைசியாக நான் எனக்கான ஆயுதத்தை தேர்வு செய்துவிட்டேன். இந்த ஆயுதத்தால் நான் யாரையும் இரத்த காவு வாங்க போவதில்லை. ஏற்கனவே இந்த பூமி இரத்தங்களால் நிரம்பி உள்ளது, மனிதர்கள் பல நேரங்களில் எனக்கு இரத்த பின்டங்களாக மட்டுமே தோன்றுகிறார்கள். இரக்கம் அற்ற மனிதர்கள். எத்தனையோ முறை அவர்களுக்கு இரக்கத்தைச் சொல்லி தர முயற்சி செய்திருக்கிறேன். ஒருவன் தன் வாழ்க்கையில் கண்டிப்பாக இரண்டு வீதமான மனிதர்களை மட்டும்தான் பார்க்கிறான். அவனுக்கு கீழே உள்ள மனிதர்கள், அவனுக்கு மேலே உள்ள மனிதர்கள், அல்லது இப்படியும் சொல்லலாம், அவனுக்கு கீழ் படியும் மனிதர்கள், அவன் கீழ் படியும் மனிதர்கள். அவனுக்கு கீழே உள்ள மனிதர்களிடம் இரக்கம் இல்லாமல் நடந்துக்கொண்டு, அவன் கீழ் படியும் மனிதர்களிடம் இரக்கத்தை எதிர்ப்பார்க்கிறான். ஒருவன் கீழ் படியும் மனிதர்களின் எண்ணிக்கை எப்பொழுதுமே அதிகமாகவே இருக்கிறது என்பதை ஒரு மனிதன் உணர மறுக்கும் போது. அவன் சர்வாதிகாரியாக மாறுகிறான். எனக்கு தெரிந்த பல நண்பர்கள் இப்படி மாறி உள்ளார்கள். அவர்களிடம் சில முறை இதைப்பற்றி விளக்கியிருக்கிறேன். ஆனால் அந்த விளக்கங்கள் என்னை பார்த்து நகைக்கவே உதவியாக இருந்து உள்ளது. ஆகவே தான், நான் முதலிலேயே சொன்னேன், நான் சழித்துவிட்டேன் என்று.
மீண்டும் இதன் ஆரம்ப வரிகளுக்கு செல்கிறேன். கடைசியாக நான் எனக்கான ஆயுதத்தை தேர்வு செய்துவிட்டேன். இந்த ஆயுதத்தை நான் எனது எதிரிகளிடம் உபயோகப்படுத்த போவதில்லை. ஆயுதத்தை எதிரியிடம் தான் உபயோகம் செய்ய வேண்டும் என்பது தவறான கருத்து. ஒரு ஆயுதத்தை நீங்கள் உங்கள் நன்மைக்காக எப்பொழுது வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம். "உங்களுக்கான ஆயுதத்தை நீங்கள் தேர்வு செய்யும் போதே, நீங்கள் சுயநலவாதியாக மாறிவிடுவதாக" ஒரு புனித புத்தகம் சொல்கிறது. சரி, நான் சுயநலவாதியாக இருந்துவிட்டு போகிறேன். என்னை சுற்றி உள்ளவர்கள் அவர்களின் ஆயுதத்தின் மூலம் என்னை தோல்வியடைய செய்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்,, எனக்கான ஆயுதத்தை நான் தேர்வு செயவதில்லை எந்தவீத தவறும் இல்லை என்றே நினைக்கிறேன். ஒரு காதலி அவளின் காதலை ஆயுதமாக பயன்படுத்திக்கொண்டு இருக்கிறாள். ஒரு தந்தை, அவரின் தந்தை பாசத்தை ஆயுதமாக வீசுகிறார், ஒரு அம்மா, அவளின் அன்னை பாசத்தை, ஒரு நண்பன், எப்பொழுதோ கடனாக தந்த ஒரு பெரும் தொகையை, ஒரு நாய் தன் எஜமானிடம், நேற்று இரவு வீசுவாசமாக் குரைத்ததை நினைவு படுத்த முயற்சிக்கிறது. ஒரு பெரியவர் அவரின் நோயினை பயன்படுத்துகிறார், ஒரு பிச்சைக்காரன் அவனின் வயிற்றை, இப்படி ஒவ்வொருவரும் தனக்கான ஒன்றை ஆயுதமாகப் பயன்படுத்தும் போது, நானும் ஆயுதத்தை தேட வேண்டிய கட்டாயம் எற்படுகிறது.
மீண்டும் இதன் ஆரம்ப வரிகளுக்கு செல்கிறேன். கடைசியாக நான் எனக்கான ஆயுதத்தை தேர்வு செய்துவிட்டேன். இப்பொழுது உங்களுக்கு தெரிந்திருக்கும் நான் தேர்வு செய்து இருக்கும் ஆயுதம் மெளனம் தான் என்பது.
4 comments:
இவ்வளவு பேசிவிட்டு 'என் ஆயுதம் மௌனம்' என்கிறீர். வேண்டாம். மௌனம் சில சமயம் சம்மதம் என ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், பல சமயங்களில் மனங்களின் சாவுக்குச் சம்மதம் தெரிவிக்கிறது. இது தேவையா...?
மெளனம், மவுனம் இதில் எது சரி என்று யோசிக்கையில், கடைசியில் எனக்கு அமைதியே மிஞ்சுகிறது.
Really Nice :)
"ஒரு காதலி அவளின் காதலை ஆயுதமாக பயன்படுத்திக்கொண்டு இருக்கிறாள். ஒரு தந்தை, அவரின் தந்தை பாசத்தை ஆயுதமாக வீசுகிறார், ஒரு அம்மா, அவளின் அன்னை பாசத்தை, ஒரு நண்பன், எப்பொழுதோ கடனாக தந்த ஒரு பெரும் தொகையை, ஒரு நாய் தன் எஜமானிடம், நேற்று இரவு வீசுவாசமாக் குரைத்ததை நினைவு படுத்த முயற்சிக்கிறது. ஒரு பெரியவர் அவரின் நோயினை பயன்படுத்துகிறார், ஒரு பிச்சைக்காரன் அவனின் வயிற்றை, இப்படி ஒவ்வொருவரும் தனக்கான ஒன்றை ஆயுதமாகப் பயன்படுத்தும் போது, நானும் ஆயுதத்தை தேட வேண்டிய கட்டாயம் எற்படுகிறது. " அருமை டா நண்பா :) சரி எதோ இப்ப தான் இந்த ஆயுதத்தை தேர்வு செய்துவிட்டதா சொல்ர :) 8 yrs a இப்டி தான இருக்க :)
Post a Comment