Sunday, September 29, 2013

மீண்டும் சினிமாவைப் பற்றி ஒரு பதிவு

இரண்டு நாட்களுக்கு முன்னால் நண்பனிடம் டெலிபோனில் பேச நேர்ந்தது. இயக்குநர் ராமின் தீவிர பக்தன் அவன். கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஆனந்த விகடன் "தங்க மீன்கள்" திரைப்படத்திற்கு மார்க் குறைவாக போட்ட போது, இரவு இரண்டு மணிக்கு போன் செயது ஒரு மணி நேரம் அழுது தீர்த்தவன். நல்லவேளையாக ஒரு மணிநேரத்தில் போன் லைன் தானாகவே கட்டாகி விட்டது. போனில் பேட்டரி தீர்ந்துவிட்டதா அல்லது போதை தீர்ந்துவிட்டதா என்று தெரியவில்லை. இயேசுவின் பெயருக்கு நன்றிகள் சொல்லிவிட்டு நானும் தூங்கிவிட்டேன். அடுத்த நாள் காலையில் எழுந்தவுடனேயே மனைவியிடம் வந்த முதல் கேள்வி " நைட் இரண்டு மணிக்கு போனில் பேசுகிறளவுக்கு, அப்படி என்ன முக்கிய விசயம்??"

மீண்டும் அதே  நண்பனிடமிருந்து போன் வந்தவுடனேயே, ஒரு விசயத்தை மட்டும் மனதில் உறுதியாக நிலை நிறுத்திக்கொண்டேன், "இந்த முறை சினிமாவைப் பற்றி மட்டும் ஒன்றுமே பேசிவிட கூடாது".

ஆனால், இந்த பாழாய் போன நாக்கு எங்கே நாம் சொன்ன பேச்சை கேட்கிறது. வழக்கம் போல் சனியன், நாக்கில் வந்து ஸ்டூல் போட்டு உட்கார்ந்துக்கொண்டு என்னைப்பார்த்து கேலியாக சிரித்தது. என்னையும் அறியாமல் என் நாக்கிலிருந்து ஒருகேள்வி எழுந்தது,

"மச்சி, மூடர்கூடம் சூப்பரா இருக்காமே. பார்த்தியா?? நம்ப ஊருல இரண்டே நாளில் தூக்கிவிட்டான். என்னால் பார்க்க முடியாம போச்சு" என்றேன்.
இந்த கேள்விக்காக காத்திருந்தவன் போல், கடகடவென்று பேச தொடங்கிவிட்டான்.

"மூடர்கூடம் ஒரு ஆங்கில திரைப்படத்தின் காப்பி. அதற்கு ஆனந்த விகடனின் 50 மார்க் போட்டு உள்ளார்கள். ஆனால் தங்கமீன்கள் திரைப்படத்திற்கு 44 மார்க் தான். காப்பியடித்த திரைப்படத்திற்கு அதிக மார்க், ஆனால் ஒரிஜினலாக எடுத்தால் மரியாதை இல்ல"

இப்படி அரை மணிநேரம் புழம்பினான். அவனை ஒருவழியாக சமாதானம் செய்து போனை கட் செய்தேன்.

உண்மையை சொல்லவேண்டும் என்றால், இப்படி இயக்குனர் ராமின் மீது பைத்தியமாக இருக்கும் நண்பர்கள் பலரை எனக்கு தெரியும் (என்னையும் சேர்த்து). எங்கள் நண்பர் வட்டத்தில் இயக்குனர் ராமை எப்பொழுதுமே "எங்கள் இயக்குநர்" என்றுதான் அழைப்போம்.  எங்கள் அனைவருக்குமே "கற்றது தமிழ்" திரைப்படம் மீதும் இயக்குநர் ராமின் மீதும், ஏன்? அப்படி ஒரு பைத்தியம் என்று யோசித்து பார்த்த போது, எனக்கு தோன்றியது

"கற்றது தமிழ்" திரைப்படம் வந்தசமயம், நாங்கள் கல்லூரி முடித்து வேலைக்காக தீவிரமாக அழைந்துக்கொண்டு இருந்தோம். தொடர்ந்து எல்லா கம்பெனிகளில் இருந்தும் நிராகரிக்கப்பட்டு கொண்டு இருந்தோம். கல்லூரி காதல்கள் ஒவ்வொன்றாக 'குட் பை' சொல்லி பிரிந்துக்கொண்டு இருந்தது. இன்னும் எத்தனை நாட்களுக்கு அப்பாவிடமிருந்து பணம் கேட்பது என்று பயம். "கற்றது தமிழ்" திரைப்படத்தின் பிரபாகரன் கதாபாத்திரத்தை எங்களின் ஒருவனாக பார்த்தோம். அவன் தோல்வியை பார்த்து நாங்களும் அழுந்தோம். அவனைப் போலவே மரணம் ஒன்றுதான் சரியானது என்று நாங்களும் நம்ப தொடங்கினோம். (என் நண்பன் ஒருவன் பூட்டிய அறைக்குள் மர்மமான முறையில் தற்கொலை செய்துக்கொண்டதும் இதே காலத்தில்தான் நடந்தது).

படித்து பட்டம் முடித்துவிட்டு வேலைக்காக சென்னை வீதிகளில் அழைந்துக்கொண்டு இருக்கும் இன்றைய இஞைர்கள் கூட "கற்றது தமிழ்" திரைப்படத்தைப் பார்த்தால், பிரபாகரனை தங்களின் ஒருவனாக உணர்வார்கள். அதுவே எங்கள் இயக்குநரின் வெற்றி.

"தங்க மீன்கள்" திரைப்படமும் அப்படிப்பட்ட திரைப்படம் தான். குழ்ந்தைகளை பெற்ற எல்லா அப்பாக்களும் தங்களையும் எதாவது ஒரு சந்தர்பத்தில் கண்டிப்பாக கல்யாணியாக உணர்வார்கள். "தங்க மீன்கள்" திரைப்படத்தைப் பற்றி பலர் தெளிவாக எழுதிவிட்டதால் இந்த பதிவை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

குறிப்பு:
********
"ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" திரைப்படத்தைப் பற்றி எழுதுவதற்காகதான் இந்த பதிவினை எழுத தொடங்கினேன். ஆனால் எழுதி ரொம்ப நாட்களாகி விட்டதால், சொல்ல வந்த விசயத்தையே மறந்து எங்கோ சென்று விட்டேன்.

"ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம், இன்னும் மூடர்கூடம் திரைப்படம் பார்க்கவில்லை, ஆனால் எனக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்.