Thursday, July 11, 2013

கேள்வி-பதில்

கேள்வி:

"Gitanjali Gems ஷேரின் விலை தொடர்ந்து 20 நாட்களாக குறைந்துக்கொண்டே வருகிறதே, என்ன காரணம்?? இப்பொழுது இந்த ஷேரினை வாங்கினால், ஒரே மாதத்தில் நல்ல லாபம் பார்க்கலாம் என்று நண்பன் சொல்கிறான், நம்பி வாங்கலாமா??" -  கதிரேசன், விருதுநகர்

பதில்:

அன்பும், ஷேர்கள் வாங்க பணமும் உள்ள கதிரேசன் அவர்களுக்கு வணக்கம்.

மின்னஞ்சலில் நீங்கள் அனுப்பிய கேள்வியை பார்த்தவுடனேயே எனக்கு ஒரு அதிர்ச்சி, நீங்கள் எதற்காக இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள் என்று. இதற்கு இரண்டே காரணங்கள்தான் இருக்கக்கூடும. அவை,

1) ஒருவேளை நேற்று நான் எழுதிய MMTC'யை பற்றிய பதிவின் தலைப்பை மட்டும் நீங்கள் படித்து இருக்கலாம். ஆகவே என்னை நீங்கள் ஒரு பங்குசந்தை நிபுணர் என்று கருதி இந்த கேள்வியை கேட்டு இருக்கலாம். இதுதான் காரணமாக இருப்பின் தயவு செய்து அந்த பதிவினை முழுமையாக படிக்கவும். அதன் பின் நீங்களே இந்த மெயிலை Recall செய்துவிடுவீர்கள்.

அல்லது

2) இரண்டாவது காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை மீண்டும் நீங்கள் மெயில் செய்தால் அந்த காரணத்தை சொல்லிவிடவும். நானும் என்னை திருத்திக்கொள்ள வசதியாக இருக்கும்.

இனி உங்கள் கேள்விக்கான பதில்.

முதலில் Gitanjali Gems ஷேரின் விலை குறைய காரணம். வேறு என்ன அகலகால் தான். 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நம் வள்ளுவர் ஒரு குறளில் சொன்னாரே (நானும் படித்ததில்லை ஆனால் கண்டிப்பாக 1330 குறள்களில் எதாவது ஒன்றில் சொல்லி இருப்பார்) , அதன்படி நடந்து இருந்தால் இப்பொழுது பிரச்சனையே வந்திருக்காது. Gitanjali Gems நிறுவனம் கடனில் தந்தளித்துக்கொண்டு இருக்கிறது. யாரிடமோ வாங்கிய ஒரு பெரிய கடனை இன்னும் ஒரு மாதத்தில் அது கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த கடன் 500 கோடிக்கு அருகில் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த கடன்களை கொடுப்பதற்காக Gitanjali Gems நிறுவனம் 1 வருட, 2 வருட, 3 வருட Deposit'களை வாங்க தொடங்கிஉள்ளது. அந்த Deposit'களுக்கு வட்டி விகிதங்கள் முறையே  11.5%, 12%, 12.5%. இது கூட்டுவட்டி முறை என்பதால், நீங்கள் 3 வருடம் Deposit செய்தால் உங்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதம் 14.89% என்று இருக்கும். இதை எதற்காக இப்பொழுது சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம், எனக்கு தெரிந்தவைகளை யாரிடம் சொல்வது?? என் மனைவியிடமா சொல்ல முடியும்??சரி, Gitanjali Gems ஷேரினை இப்பொழுது வாங்கலாமா என்று கேட்கிறீர்கள், நானும் ஒரே வார்த்தையில் வேண்டாம் என்று சொல்லிவிட முடியும். ஆனால் அப்படி சொன்னால் நன்றாகவா இருக்கும்? ஆகவே "வேண்டாம்" என்பதை இப்பொழுது நான் சுற்றிவளைத்து சொல்ல போகிறேன்.

கதிரேசன் அவர்களே, நீங்கள் விருதுநகரிலிருந்து இந்த கேள்வியை கேட்கிறீர்கள். ஆகவே நீங்கள் கண்டிப்பாக எதாவது ஒன்றை மொத்த விற்பனையாளராக இருக்க வேண்டும். ஏனென்றால் விருதுநகரில் அவர்கள்தான் அதிகம். நீங்கள் சொல்லும் அந்த நண்பர் உங்கள் தொழில் Partner'ராக இருக்ககூடும். அல்லது உங்கள் கல்லூரி நண்பர், பள்ளி நண்பர், பக்கத்து வீட்டுகாரர், எதிர்வீட்டுகாரர் என்று இப்படி யாராவது ஒருவராக இருக்கலாம். எதிர்வீட்டுகாராக இருக்க வாய்ப்பு குறைவுதான். எனக்கும் ஒரு எதிர்வீட்டுகாரர் இருக்கிறார். வருடத்துக்கு இரண்டு கார்கள் மாற்றுவார். என்னை தவிர எல்லோரிடமும் சிரித்துதான் பேசுவார். என் மனைவியிடம் இதைப்பற்றி ஒருமுறை சொன்ன போது, அவள் சொன்னது "எல்லா எதிர்வீட்டுகாரர்களும் இப்படிதான்". உண்மைதானா??

முன்னரே சொன்னதுபோல், Gitanjali Gems ஷேரினை வாங்க வேண்டாம். அதன் விலை இன்னும் குறையும் என்று எல்லா டிவி, பேப்பரிலும் சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் பேச்சை எப்பொழுதும் நம்ப கூடாது. இரண்டு மாதங்களுக்கு முன்னால் Gitanjali Gems ஷேரின் டார்கெட் 800 ரூபாய் என்று சொன்னார்கள்.


கடைசியாக என்னுடைய பெரிய வேண்டுகோள், இந்த ஷேர் மார்க்கெட் பக்கம் போக வேண்டாம். அப்படி உங்களிடம் பணம் நிறையாக இருப்பீன் என்னிடம் கொஞ்சம் தரவும். வருடத்துக்கு 18 சதவீதம் வட்டி தருகிறேன். இன்றைக்குதான் KVB வங்கியில் 20 லட்சத்துக்கு பிஸினஸ் லோன் அப்ளை செய்து இருக்கிறேன். ஒருவேளை லோன் கிடைத்தல், லோன் கிடைத்த அடுத்த நாளே உங்களின் அசலை கொடுத்து விடுவேன். அப்படி லோன் கிடைக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கு  Gitanjali Gems நிறுவனத்தின் 1 வருட, 2 வருட, 3 வருட Deposit ஸ்கீம்கள்.

நன்றி,
வாழ்க வளமுடன்,
அசோக்.

(பின்குறிப்பு:
பேயோனின் கடிதம் பதிவுகளை படித்தபின் எழுதியது. பேயோனின் "கடிதம்" பதிவுகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும் )