Thursday, July 8, 2010

நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் - II

நீங்கள் கண்டிப்பாக நம்ப போவது இல்லை. இருந்தாலும் சொல்லிதான் ஆகவேண்டும். நேற்று என் கனவில் கடவுள் வந்தான். ஆம், வந்தவன் தன் பெயரை கடவுள் என்றுதான் சொன்னான். லீவைஸ் ஜீன்ஸும், லீ டீஷர்ட்டும் அணிந்து இருந்தான். காலில் ரீபக் ஷூ. கையில் 'எக்னாமிக் டைம்ஸ்' பேப்பரும் இருந்தது. எங்கேயோ பார்த்த முகம். ராவணன் திரைப்படத்தில், விக்ரம் தம்பியாக வந்து ஒருவன் இறந்துபோவானே, அந்த முகம். நன்றாக வெள்ளையாக இருந்தான். கடவுள்தானா?? என்று யாரும் சந்தேகபடக் கூடாது என்று தினமும் முகத்துக்கு 'பேசியல்' பண்ணுவான் போல. அவனுடைய வெண்மையான முகம், எனக்கு ஒரு வித வெறுப்பை தந்தது. இப்பொழுது எல்லாம் வெள்ளையாக இருக்கும் யாரை பார்த்தாலும் வெறுப்பாக இருக்கிறது.

"நீ தான் கடவுள் என்பதற்கு என்ன ஆதாரம்??" என்று கேட்டேன். அவனுடைய Driving licence'யை காட்டினான். கனரக வாகனம் ஒட்டுவதற்கு, அமெரிக்க அரசாங்கத்தால் தரப்பட்டது. பெயர் "கடவுள்" என்று எழுதப்பட்டு இருந்தது. அமெரிக்க லைசன்ஸ், கண்டிப்பாக இவன் ஏமாற்றவில்லை என்று நம்பிக்கை பிறந்தது.

கடந்த ஒருவாரமாக நான் தூங்குவதே இரண்டு மணிநேரம் தான், அதில் இவன் வேற வந்துவிட்டான். அவனுடன் நான் ரொம்ப நேரம் பேசவிரும்பவில்லை.

அவன்தான் ஆரம்பித்தான், "எதற்கு என் மீது இவ்வளவு கோபம்??"

நான் எதிர்பார்த்த கேள்விதான், "எனக்கு என் மீதே கோபம்" என்றேன்.

"நான் யாருக்கும் வஞ்சனை செய்யவில்லை, எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் வாழ்க்கை கொடுத்தேன். நீ தவறாக புரிந்துகொண்டு உள்ளாய்" என்ற அப்பட்டமான பொய்யை கூறினான்.

"நான் உன்னுடன் வாக்குவாதம் செய்யவிரும்பவில்லை, நீ போய்விடு" என்றேன்.

அவன் போவதாக இல்லை. ஏதோ ஏதோ காரணங்கள் சொன்னான். IIM'ல் M.B.A படித்து இருப்பான் போல, ஒவ்வொன்றுக்கும் ஒரு கதைசொன்னான். அவன் நல்லவன் என்பதைப் பத்து கதைகள் மூலம் விளக்கினான்.

என் அமைதி அவனை கொஞ்சம் கோபப்படுத்தி இருக்கவேண்டும. பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட்'யை எடுத்து பற்ற வைத்தான்.

"உன்னை இங்கே அனைவரும் கடவுள் என்கிறார்கள்" என்றேன். நான் பேசியதை ஒரு நோட்டில் குறிப்பு எடுத்துகொண்டான்.

"எல்லோரும் சொல்கிறார்கள். ஆகவே அதுவே உண்மையாக இருக்கும்" என்றான்.

"நீ கடவுள் என்றால் எனக்கு ஒரு வரத்தை கொடு. நான் இந்த உலகத்தில் இதுவரை வாழ்ந்ததுக்கு'கான எல்லா தடயங்களையும் அழித்துவிடு" என்றேன்.

அது முடியவே முடியாது என்றான். வாழ்க்கை ஒரு Butterfly Effect'யை போலவாம். ஒருவனின் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டு பண்ணினால், அது எல்லாருடைய வாழ்க்கையிலும் மாற்றத்தை எற்படுத்தும் என்றான்.

"சரி, எனக்கு மரணத்தைகொடு" என்றேன்.

அதுவும் முடியாது என்றான். ஒருவன் பிறக்கும் போதே அவன் மரணமும் முடிவு செய்யப்படுகிறதாம். அதையும் யாராலும் மாற்றமுடியாது என்றான்.

"உண்மையாகவே எந்த கடவுளாளும் வரங்கள் கொடுக்கமுடியாது என்றால், இந்த உலகத்தில் எதையும் உன்னால் மாற்ற முடியாது என்றால், எதற்கு நீ. நீ ஒரு மலை உச்சியில் கல்லாகவே இருந்துவிடு" என்றேன். நான் பேசியதை மீண்டும் குறிப்பு எடுத்துகொண்டான்.

இப்பொழுது நான் பேசிக்கொண்டு இருந்தேன். அவன் அமைதியாக கேட்டு கொண்டு இருந்தான். அந்த அமைதி என்னை கோபப்படுத்தியது.

"எனக்கு வேற வரங்கள் வேண்டாம், நீயும் வேண்டாம். போய்விடு" என்று கத்தினேன்.

விடைபெற தயாராகும் முன் அவன் மீண்டும் சொன்னான் "நான் யாருக்கும் வஞ்சனை செய்யவில்லை, எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் வாழ்க்கை கொடுத்தேன். நீ தவறாக புரிந்துகொண்டு உள்ளாய்"

நானும் மீண்டும் பதிலளித்தேன் "உன்னை இங்கே அனைவரும் கடவுள் என்கிறார்கள்".

டிரைவரை வண்டியை எடுக்கசொல்லிவிட்டு, மீண்டும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தான்.

2 comments:

நிலவுக்காதலன் said...

"அமெரிக்க லைசன்ஸ், கண்டிப்பாக இவன் ஏமாற்றவில்லை என்று நம்பிக்கை பிறந்தது." ultimate saga:) mmm hidden potentials coming up. keep going :)

சரவண வடிவேல்.வே said...

நன்றி நண்பா....