Monday, September 6, 2010

கதைகள்

கடந்த ஒரு மாதமாக எதுவும் எழுத முடியவில்லை. எதைப்பற்றி எழுத ஆரம்பித்தாலும் முதல் வரியை தாண்ட முடியாமல் தள்ளாடுகிறேன். இப்படி கடந்த ஒரு மாதத்தில் எழுத முடியாமல் நின்று போனவையின் எண்ணிக்கை கண்டிப்பாக நாற்பதை தாண்டி இருக்கும். எனக்குள் ஒரு பயமே வந்துவிட்டது, இனி நம்மால் எதுவும் புதிதாக எழுத முடியாதா என்று. அந்த ஒரு பயத்தில் எழுதியதுதான் கடந்த பதிவு. ஏதாவது எழுதியாக வேண்டும், என்று எழுதியது.

அது ஒரு சாதாரணப் பதிவாக இருந்த போதும்,. என்னால் தொடர்ந்து எழுத முடியும் என்ற நம்பிக்கையை எனக்கு அது தந்தது. இப்படி எல்லாவற்றிக்கும் நமபிக்கை ஏற்படுத்த, ஏதோ ஒன்று நமக்கு தேவைப்படுகிறது.

இந்த உலகமே கதைகளால் உருவாக்கபட்டது. ஆதி மனிதன் ஆதாமிடம் தொடங்கியது நமது கதைகள். இந்த உலகத்தின் முதல் கதையின், முதல் கதாநாயகன் அவன். அதன் பின் வந்த ஒவ்வொரு மனிதனுக்கும் நாம் ஒரு கதையை உருவாக்கி வைத்துள்ளோம். ஏன், உங்கள் தாத்தா, பாட்டி பற்றிக் கூட, யாரோ ஒருவர், யாரிடமோ கதை சொல்லிக்கொண்டு இருக்கலாம்.

ஒவ்வொரு மனிதனிடமும், அவனுக்கு மட்டுமே தெரிந்த, அவனைப்பற்றிய கதை ஒன்று இருக்கிறது. அதை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று ஒரு பக்கம் ஏங்குகிறான். இன்னொரு பக்கம், அது யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்று பயப்படுகிறான்.

உங்களுக்கே தெரியாமல், உங்களைப்பற்றி வெளியில் ஒராயிரம் கதைகள் உலாவிக்கொண்டு இருக்கின்றன. நீங்கள் பெண் என்றால், இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்ட கூட வாய்ப்பு இருக்கிறது.

கதைகளை போலவே புரளிகளுக்கும் நமக்கு பஞ்சம் இல்லை. புரளிகள் ஒரு கூறிப்பிட்ட காலக்கட்டத்தில் அழிந்துவிடுகிறது. ஆனால், கதைகள் அப்படி அல்ல, அது கால் முளைத்து, கை முளைத்து அந்த காலகட்டத்துக்கு தகுந்தால்போல் தனனை மாற்றிக்கொள்கிறது,

“ தியான வகுப்பில் சேர போகிறேன்” என்று விளையாட்டாக ஒருவனிடம் நான் சொல்ல, கொஞ்ச நாடகளில் “அவன் சாமியாராக மாறி, இப்பொழுது வெள்ளியங்கிரி மலையில் இருக்கிறான்” என்று ஒரு கதை உருவாகி என்னிடமே வந்தது. என்னைப்பற்றி நன்கு அறிந்த சிலர், இந்தக்கதையை எபபடி நம்பினார்கள் என்று இன்னும் எனக்கு வியப்பாகவே இருக்கிறது.

கதைகளை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். ஒரு கதையை உருவாக்குவதற்க்கு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை.

இரண்டாம் வகுப்பு படிக்கும் பக்கத்துவீட்டு பையன்கூட, என்னிடம் சொல்ல ஒரு கதை வைத்து இருக்கிறான். “ டோரா ஒரு நாள் காட்டுக்கு போச்சா. அங்கே காணாமல் போச்சு” இப்படித்தான் தொடங்குகிறது அவன்சொல்லும் கதைகள்.

இப்பொழுது என்னிடம் முதல் வரியை மட்டுமே கொண்ட நாற்பதுக்கும் மேற்பட்டக்கதைகள் இருக்கின்றன. இனி அவற்றை வார்த்தைகளால் நிரப்ப வேண்டும். என்னை சுற்றி உள்ள மனிதர்களோடு அந்த கதைகளை இனைக்க வேண்டும். சில உண்மைகளையும், பல பொய்களையும் சொல்லி படிப்பவர்களை கவர வேண்டும். தேவைப்பட்டால், எஸ்.ரா, சாரு, ஆதவன் போன்றோரின் வரிகளை திருடி எனது கதைகளில் இனைக்க வேண்டும். இதை சொல்வதற்க்கு எனக்கு எந்த ஒரு வெட்கமும் இல்லை. யாராலும் சொந்தமாகக் வார்த்தைகளை நிரப்பி, கதைகளை எழுத முடியாது, கண்டிப்பாக யாரோ ஒருவரின் உதவி தேவைப்படுகிறது. இதுதான் உண்மை.

3 comments:

தனி காட்டு ராஜா said...

//உங்களுக்கே தெரியாமல், உங்களைப்பற்றி வெளியில் ஒராயிரம் கதைகள் உலாவிக்கொண்டு இருக்கின்றன. நீங்கள் பெண் என்றால், இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்ட கூட வாய்ப்பு இருக்கிறது.//
உண்மைதான் ......
உலகம் ஆயிரம் சொல்லும் .....நமக்குள் ஒரு தெளிவு வர ஆரம்பித்து விட்டால் உலகத்தை பற்றி நாம் கவலை பட தேவை இல்லை ....
நல்ல பதிவு ....

நிலவுக்காதலன் said...

"அதை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று ஒரு பக்கம் ஏங்குகிறான். இன்னொரு பக்கம், அது யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்று பயப்படுகிறான்." fantastic. u got talent to feel others. n hav widen your thought. then only you cud write such stuffs. hats off :)

சரவண வடிவேல்.வே said...

நன்றி கோபி,

நன்றி சகா...