Sunday, August 28, 2011

நான் ஒத்துக்கொள்கிறேன்

நான் ஒத்துக்கொள்கிறேன், எனக்கு உங்களைப் போல் பேச தெரியாது என்பதை. நீங்கள் பேசுவதை பார்க்கும் போது எனக்கு உங்கள் மீது பொறாமைதான் வருகிறது. கண நேரத்தில் உங்களால் சிரித்தும் பேச முடிகிறது, சோகமாகவும் பேச முடிகிறது. நீங்கள் பேசும் போது உங்கள் முக மாற்றத்தை தான் நான் முதலில் கவனிக்கிறேன். அந்த முகத்தில் தான் எத்தனை பொழிவு. உங்கள் பேச்சைக் கூட கேட்க தோன்றவில்லை, உங்கள் முகத்தையே பார்த்துக்கொண்டு இருக்கலாம் போல் இருக்கும். அழும் குழந்தையை உங்களால் சிரிக்க வைக்க முடிகிறது, ஒரு குழந்தையை சிரிக்க வைப்பது எவ்வளவு கஷ்டமான காரியம் என்பது எனக்கும் தெரியும். அதில் பலமுறை தோற்றுப்போனவன் நான். இதுவரை நீங்கள் யாரிடமும் சண்டையிட்டு நான் பார்த்ததில்லை.

ஒருவன் அவனின் மகிழ்ச்சியை உங்களிடம் பகிரும் போது, உங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியை போல் உங்களாலும் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. ஒருவன் அவனின் கவலையைச் சொல்லி அழும்போது, நீங்களும் அவனுக்காக கவலைப்படுகிறீர்கள். நீங்கள் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் உங்களை தேடி வந்து பேசும் பலரை நான் பார்த்திருக்கிறேன். உண்மையாகவே சில நேரங்களில் எனக்கு உங்கள் மீது பொறாமையாக தான் இருக்கிறது.

நான் ஒத்துக்கொள்கிறேன், எனக்கு உங்களைப் போல் முடிவுகள் எடுக்க தெரியாது என்பதை. எந்த ஒரு பிரச்சனைக்கும் சுலபமான முடிவுகளை எடுக்கும் நீங்களும், ஒரு சின்ன பிரச்சனைக்கு கூட முடிவு எடுக்க முடியாமல் திணறும் நானும் ஏணி வைத்தாலும் ஒன்றாக முடியாது என்பதை. நீங்கள் எத்தனையோ பிரச்சனைகளை எதிர்கொண்ட போது நான் உங்கள் அருகில் நின்று அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்திருக்கிறேன். என்னால் செய்ய முடிந்தது அது மட்டுமே.

உங்களுக்கு கிடைக்கும் மரியாதைகள், எப்பொழுதும் எனக்கு கிடைக்க போவதில்லை. உங்கள் கழுத்தில் விழும் மாலைகளின் கனத்தை கூட என்னால் ஒருபொழுதும் தாங்க முடியாது.

நான் தெருவில் நடக்கும் போது என்னைப்பார்த்து யாரோ இருவர் வணக்கம் சொல்லுகிறார்கள் என்றால், அதற்கு காரணம் நான் உங்கள் அருகில் நின்று கொண்டிருப்பதால் மட்டுமே. நான் ஒத்துக்கொள்கிறேன், எனக்கு நீங்கள்தான் ரோல் மாடல் என்பதை. நான் செய்யும் சிறு அசைவு கூட உங்களின் பாதிப்புதான் என்பதை.

ஆனால், அன்று நான் கொஞ்சம் பதறிதான் போனேன், மாடியில் இருக்கும் கிழக்கு பக்க அறையில் நீங்கள் தனியாக உட்கார்ந்து அழுதுக்கொண்டிருப்பதைப் பார்த்தபோது. நான் ஒத்துக்கொள்கிறேன், என்னால் ஒருபொழுதும் உங்களுக்கு நல்ல மகனாக இருக்க முடிந்ததில்லை என்பதை. நான் இதுவரை எந்த வீதத்திலும் உங்களை சந்தோஷப் படுத்தியதில்லை என்பதை. அன்று அந்த அறையில் நீங்கள் அழுததற்கு நான் தான் காரணம் என்பதை. என்னை மன்னித்துவிடுங்கள்.

இதற்கு மேலும் என்னை நம்பாதீர்கள். என்னை மன்னித்துவிடுங்கள்.

No comments: