Monday, August 1, 2011

அன்புள்ள செல்வாவுக்கு

அன்புள்ள செல்வாவுக்கு,

நலம், நலம் அறிய ஆவல். சென்னை வழக்கம் போல் உள்ளது. துபாய் எப்படி உள்ளது என்பதை உன் மூலம் அறிந்துக்கொள்ள ஆவல். நம் செல்போன் உரையாடலில் மற்றவற்றை பேசிக்கொள்ளலாம்.

முதலில் உன்னிடம் ஒரு மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். "தெய்வத்திருமகள்" பற்றி நீ என்னிடம் பதிவு எழுத சொல்லி கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் முடியப் போகிறது. நானும் பதிவு எழுத கடந்த மூன்று வாரங்களும் முயற்சித்து கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் என்ன எழுதுவது என்று குழப்பம். நல்ல படம் என்றா??, அற்புதமான திரைப்படம் என்றா??, இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் என்றா??. ஆனால், இப்படி இதை எழுதினாலும் அதற்கு காரணம் வேண்டும், அந்த காரணங்களைதான் கடந்த மூன்று வாரங்களாக தேடிக்கொண்டு இருக்கிறேன்.


இருப்பதிலேயே மிகவும்  கஷ்டமன விசயங்களில் ஒன்று திரைப்படம் அல்லது புத்தகங்களைப் பற்றி கருத்து சொல்வது. ஒரு புனைவுகதையை எப்படி வேண்டுமானாலும் தொடங்கி, நமக்கு தோடாவதுப் போல் முடித்துக்கொள்ளலாம, ஆனால் ஒரு திரைப்படத்தைப் பற்றியோ ஒரு புத்தகத்தைப் பற்றியோ அவ்வளவு எளிதில் சொல்லிவிட கூடாது. சிலருக்கு இது ஒரு சென்சிடிவ் விசயம். நாம் சொல்லும் சில தவறானக் கருத்தால் அவர்கள் மனது பாதிக்க வாய்ப்புகள் அதிகம்.



இப்படி நான் குழப்பம் அடைவது, எனக்கு இது முதல் தடவை அல்ல. இதே போல் பல திரைப்படங்களுக்கு குழப்பம் அடைந்திருக்கிறேன். அந்த மாதிரி நேரங்களில், அந்த திரைப்படத்தைப் பற்றி எதுவுமே எழுதாமல் தப்பித்து விடுவேன். ஆனால், இந்த முறை நீ விருப்பப்பட்டு இரண்டாவது முறையும் கேட்ததால், இதை எழுத வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

கடந்த மூன்று வாரங்களாக இணையத்தில் தமிழ் மக்களால் அதிகம் பேசப்பட்ட திரைப்படம் எது என்பது உனக்கு தெரியுமா?? அது "I am Sam". நான் இன்னும் "I am Sam" திரைப்படத்தை பார்க்கவில்லை, டவுன்லோட் செய்து வைத்திருக்கிறேன், இனிமேல்தான் பார்க்க வேண்டும்.

"தெய்வத்திருமகள்" - "I am Sam" திரைப்படத்தின் காப்பி என்கிறார்கள் சிலர்.அப்படியே காப்பியாக இருந்தால்தான் இப்பொழுது என்ன??. எவ்வளவு அற்புதமாக தமிழில் எடுத்து இருக்கிறார் விஜய். நண்பா உனக்கு தெரிந்திருக்கும், அமீர் நடித்த 'யோகி' திரைப்படம் பற்றி, அது ''Tsosti" என்ற தென் ஆப்பிரிக்கா திரைப்படத்தின் காப்பி என்று. 'Tsosti' இயக்குநர் மட்டும் யோகியைப் பார்த்து இருந்தால், கண்டிப்பாக தூக்கு மாட்டி தொங்கியிருப்பார். அந்த வகையில் விஜய்'யை நாம் கோயில் கட்டிக் கும்பிடலாம்.

ஒரு ஆங்கிலத் திரைப்படத்தை காப்பி செய்து தமிழில் எதுக்க கூடாதா, நண்பா?? அதில் என்ன தவறு இருக்கிறது. "இல்லை இது தவறுதான்" என்று சொல்கிறான் நமது  நண்பன் அருண்.  இவர்கள் எதை தவறு என்று சொல்கிறார்கள் என்பதைதான் என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. சரி அப்படி காப்பி அடித்தால், டைட்டில் கார்டில் நன்றிகள் என்று அந்த ஆங்கிலப் திரைப்படத்தின் பெயரையும் போட வேண்டுமாம். கொஞ்சம் நினைத்துப்பார் நண்பா, நாம் நன்றிகள் என்று போட்டு அதை ஒருவேளை அந்த ஆங்கிலப் பட நிறுவனம் பார்த்தால், காப்பிரைட் என்ற பெயரில் எத்தனை கோடிகளை நாம் அவர்களுக்கு தர நேரிடும். அதை வைத்து பல எந்திரன் திரைப்படங்களை நாம் எடுத்துவிடலாம்.

சமீபத்தில் பாரபாஸ் என்ற புத்தகம் படிக்க நேர்ந்தது. பாரபாஸ் யார் என்று உனக்கு தெரிந்திருக்கும், இவருக்கு பதிலாகதான் இயேசு சிலுவையில் ஏற்றப்பட்டார். அந்த பாரபாஸ் பற்றிய புத்தகம் அது. இயேசுவை நம்பலாமா?/, அவர் உண்னையாகவே கடவுளின் குழந்தையா?? என்று தன் வாழ்நாள் முழுவதும் பாரபாஸ் குழம்பியதாக அந்த  புத்தகத்தில் சொல்கிறார்கள். அற்புதமான புத்தகம்,  இந்த புத்தகம் 1950'களில் நோபல் பரிசு வாங்கியுள்ளது, இது ஒரு சுவீடிஷ் மொழி நாவல். இதை க.நா.சு தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவர்கள் சொல்வது போல், காப்பியடிப்பது தவறு என்றால் இப்படிப்பட்ட ஒரு நல்ல நாவல் தமிழில் வந்தேயிருக்காது.

சரி, மொழிபெயர்ப்பு வேறு காப்பியடிப்பது வேறு என்று கூட சிலர் சொல்லக்கூடும். மொழிபெயர்ப்பு என்பதை சினிமாவில் டப்பிங் என்று வைத்துக்கொள்வோம். சமீபத்தில் அப்படி ஒரு டப்பிங் திரைப்படத்தை சன்'டிவியில் சில வாரங்களுக்கு முன்னால் பார்க்க நேர்ந்தது. அந்த படத்தின் பெயர் ""The Shawshank Redemption". என்ன அற்புதமாக டப்பிங்  செய்திருந்தார்கள் தெரியுமா?? கண்டிப்பாக ரஜினியின் பாட்டு எங்காவது நடுவில் வரும் என்று எதிர்ப்பார்தேன். அந்தளவு அற்புதமாக இருந்தது நண்பா.

"தெய்வத்திருமகள், நந்தலாலா" போன்ற திரைப்படங்கள் எந்த ஆங்கிலத் திரைப்படத்தின் காப்பியாக இருந்தாலும் சரி. நிச்சயமாக தமிழில் வரவேற்க வேண்டிய திரைப்படங்கள் என்றே நான் நினைக்கிறேன்.

எங்கோ ஆரம்பித்து எங்கோ சென்று விட்டேன், நண்பா. "தெய்வத்திருமகள்" உண்மையாகவே நல்ல திரைப்படம், கண்டிப்பாக ஆனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். இது இப்பொழுது அனைவருக்கும் தெரிந்த ஒன்றும் கூட. இந்த வார ஆனந்த விகடனில் சாராவை பேட்டி எடுத்திருந்தார்கள். நீ கூடப் படித்திருக்கலாம் நண்பா. என்னுடைய இப்பொழுதைய கவலை எல்லாம் சாராவை இது போல அபத்தங்களிலிருது காக்க வேண்டும் என்பதுதான்.

மீண்டும் சந்திப்போம் நண்பா.

இப்படிக்கு,
சரவண வடிவேல்.வே

No comments: