Saturday, July 23, 2011

விடுபட்டவை

எதைப் பற்றியாவது எழுத முடிவு செய்தால், உடனே எழுதி விட வேண்டும். நாளை எழுதலாம் என்று ஒருநாள் தள்ளிப்போட்டால் கூட, பின் அதைப் பற்றி என்றுமே நம்மால் எழுத முடியாமல் போகிறது. நாளை என்று தள்ளிப் போட்டதால், என்னால் எழுத முடியாமல் போனவை பல. அதில் முக்கியமானவை நகுலனைப் பற்றி நான் எழுத நினைத்தவை.

நகுலனின் “நாய்கள், இவர்கள், வாக்குமூலம், நவீனன் டைரி” இந்த நான்கு நாவல்களையும் கிட்டத்தட்ட நான்கு நாட்களில் படித்து முடித்தேன். சில பக்கங்களை நான்கு முறைக்குமேல் படித்தேன். அந்த நான்கு நாட்களில், ஒருநாள் நண்பனின் திருமணத்திற்காக சிவகாசி சென்று இருந்ததால். ”இவர்கள்” நாவலை சிவகாசியில் அறை ஒன்றில்தான் படித்து முடித்தேன். படித்த உடனேயே, யாரிடமாவது நகுலனைப் பற்றி பேச வேண்டும் என்று ஆசை. புத்தகத்தில் பல பக்கங்களில் நான் கண்ணீர் சிந்தினேன் என்று யாரிடமாவது சொல்ல ஆசை. அடுத்த நாளே நகுலனைப் பற்றி எதாவது எழுதியாக வேண்டும் என்று ஒரு வெறி. ஆனால், வழக்கம்போல் நாளை நாளை என்று தள்ளிப்போய் கடைசியில் அவரைப் பற்றி எழுத முடியாமல் போய் விட்டது.

இப்பொழுது நகுலனைப் பற்றி எழுத நினைத்தால்,. எதை எழுதுவது, எதை விடுவது என்று ஒரே குழப்பம். முதலில், நகுலனை முழுமையாக நான் புரிந்துக்கொண்டேனா?? என்று சந்தேகம். ”சுசீலா, நவீனன், தேரை, சிவன், ராமநாதன், கேசவமாதவன் ” இவர்கள் எல்லாம் உண்மையில் யார்??. இவர்கள் கதாபாத்திரம் மட்டும்தானா??. உண்மையாகவே சுசீலா என்று ஒருவள் இருந்தாளா??. நகுலன் தனது கதைகளில் ஒன்றில் சொன்னது. “நான் மறைந்தாலும், சுசீலா இருப்பாள்”.

நகுலனைப் பற்றிய கட்டுரைகளில், நகுலனின் பிம்பத்தைப் பற்றிதான் பேசுகிறார்கள். அவரின் எழுத்தையும், அவரின் வாழ்க்கையையும் யாரும் தனியாக ஆராயவில்லை. அவரின் எழுத்து, அவரின் வாழ்க்கை இரண்டுமே ஒன்று என்கிறார்கள். நகுலனைப் பற்றி யோசிக்க யோசிக்க எனக்குள் குழப்பமே மிஞ்சுகிறது. நகுலனை நேரில் சந்தித்த நண்பர் ஒருவரை விரைவில் சந்திக்க இருக்கிறேன், அதன் பின் நகுலனைப் பற்றி தெளிவாக ஒரு தனி பதிவு எழுதுகிறேன்.

********************************************************

இதைப்போல் எழுதாமல் போன இன்னொன்று ரமேஷ்-பிரேம் எழுதிய ”சொல் என்றொரு சொல்” என்ற புத்தகத்தைப் பற்றியது. இந்த புத்தகததை படிக்கும் முன்னரே ஒரு சந்தேகம், “எப்படி, இருவர் இனைந்து ஒரு புத்தகத்தை எழுத முடியும்??” என்று. நாம் அனைவரும் ஒரு கட்டத்துக்குள் சிந்தித்துக் கொண்டு இருக்க, இவர்கள் அந்த கட்டத்தை தாண்டி சிந்திக்கிறார்கள். அதுதான் அவர்களின் எழுத்து. நான் எழுதிக்கொண்டு இருக்கும் “வார்த்தைகளோடு அலைபவன்” பதிவு கூட அவர்கள் எழுத்தை படித்ததால் ஏற்பட்டப் பாதிப்புதான் என்று நினைக்கிறேன். பேரின்பா சொல்வது போல், மற்றவர்களின் பாதிப்பு இல்லாமல் என்னால் தனியாக இயங்க முடியாது போல.

இப்பொழுது ரமேஷ்-பிரேம் எழுதிய மகாமுனி புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு மேல் படித்துக்கொண்டிருக்கிறேன், தொடர்ந்து படிக்க முடியவில்லை. ரமேஷ்-பிரேமின் எழுத்தை தொடர்ந்து படிப்பது என்பது ஒரு விஷப்பரீட்சை, அப்படி தொடர்ந்து படித்தால், எதோ ஒரு பக்கத்தில், எதோ ஒரு கதாபாத்திரத்தில் நாம் காணாமல் போவது உறுதி.

மகாமுனி புத்தகத்தை நான் படித்து முடித்தவுடன், அந்த புத்தகம் பற்றி டிவிட்டர் நண்பர் ஒருவர் பதிவு எழுத சொல்கிறார். முயற்சிக்கிறேன்.
 கடைசியாக நகுலனின் இரண்டு கவிதைகள்

வந்தவன் கேட்டான்
"என்னைத் தெரியுமா?"
"தெரியவில்லையே"
என்றேன்.
"உன்னைத் தெரியுமா"?
என்று கேட்டான்.
"தெரியவில்லையே"
என்றேன்.
"பின் என்னதான் தெரியும்"
என்றான்.
"உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்"
என்றேன்!


அங்கு

"இப்பொழுதும்
அங்குதான்
இருக்கிறீர்களா?"
என்று
கேட்டார்
"எப்பொழுதும்
அங்குதான் இருப்பேன்"
என்றேன்.

No comments: