Monday, July 4, 2011

மனுஷ்யபுத்திரன் கவிதை

புத்தகங்களை எரிப்பதன் பலன்கள்

புத்தகங்களை எரிப்பதில்
நிறைய அனுகூலங்கள் இருக்கின்றன்

நமக்கு தேவையான
இடம் கிடைத்துவிடும்
அடைபட்டவர்கள் சொற்களின் வழியே
வெளியேறிச் செல்வதைத் தடுத்து விடலாம்
எரிப்பது சுலபம் என்பதால்
குளிர் காலங்களுக்கு உபயோகமானது
கெட்ட கனவுகள் வருவது
நின்று விடும்
நாம் வேறு சாத்தியங்களைப் பற்றி
யோசிக்கும் அவசியமில்லாமல் போகிறது
பிரச்சனைகளுக்கான காரணங்களை
நாம் நேரடியாகவே சந்திக்கலாம்
பூச்சிகளின் தொல்லை
வெகுவாகக் குறைந்துவிடும்
ஒருவர் என்ன நினைக்கிறார் என
இன்னொருவர் பயப்பட வேண்டியிராது
யாரும் ஒளிந்துகொள்வதற்கென்று
ஒரு இடம் இல்லாமல் போய்விடும்
உரையாடல்களில் புதிய சொற்களை
சந்திக்க வேண்டியிருக்காது
படிப்பவர், படிக்க மறுப்பவர்
என்ற கலாச்சார ஏற்றத் தாழ்வுகள்
அடியோடு ஒழிந்து விடுகிறது
எல்லாவற்றுக்கும் மேலாக
நமது வீட்டில்
நமது கண்ணுக்குத் தெரியாமல்
யாரோ வசிக்கிறார்கள் என்று
நாம் பயந்து பயந்து வாழ வேண்டியதில்லை

- மனுஷ்யபுத்திரன் (உயிர்மை, ஜூலை 2011)

இதே உயிர்மை இதழில் "சேனல் 4" என்ற தலைப்பில் மற்றொரு அற்புதமான கவிதை வந்துள்ளது. கண்டிப்பாக இந்த மாத உயிர்மை இதழை  வாங்கிப் படிக்கவும்.

No comments: