Saturday, September 3, 2011

கடவுளின் கோரிக்கை

இந்த முறை கடவுள் ஒரு கோரிக்கையுடன் என் முன்னால் வந்து நின்றான். கோரிக்கையுடன் இதுவரை எந்த கடவுளையும் நான் பார்த்ததில்லை என்பதால், நான் கொஞ்சம் விக்கிதான் போனேன். பிறகு சுதாரித்து கொண்டு, அவன் கோரிக்கையை நான் திட்டவட்டமாக மறுத்தேன்.

கடவுளின் கோரிக்கை மிகவும் சுலபமான ஒன்றுதான். அது "நான் அவனுக்காக ஒரு கதை எழுதி தர வேண்டும்".  இதுவரை எனக்காக எதுவும் செய்யாத கடவுளிடம் எனக்கு ஒருவித பகைமை உணர்வு எற்பட்டது உண்மையே.  அதுவே அவன் கோரிக்கையை நான் நிராகரித்தற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

அவன் பிடிவாதமாக இருந்தான். அவன் கோரிக்கையை ஏற்கும் வரை, எனது அறையை விட்டு வெளியேற போவதில்லை என்றான். இன்னும் சிறிது நேரத்தில் எனது தோழி வரும் நேரம் அது. அவள் வரும்பொழுது இவன் இங்கு இருந்தால் அது தேவையில்லாத பல பிரச்சனைகளை உருவாக்கும், நான் பல பொய்களை அவளிடம் சொல்ல நேரிடும். ஆகவே, அவள் வருகையின் போது, இவனின் இருப்பை நான் விரும்பவில்லை. எனது பெட்டியில் பல நாட்களாக உறங்கும் கதை ஒன்றை அவனுக்கு தர சம்மதித்தேன். என்னுடைய காதல் தோல்வியின் முதல் நாளில் எழுதிய நான்கு பக்க கதை அது. நான்கு பக்கங்களில் ஒரு பக்கம் முழுவதும் அவளின் பெயர் மட்டுமே இருக்கும்.

ஆனால், பழைய கதைகளை அவன் விரும்பவில்லை. ஒரு புதிய கதையை உடனே தனக்கு எழுதி தரும்படி வற்புறுத்தினான். கதைகளை உடனே எழுதிவிட முடியாது என்றும் அதற்கு பல நாட்களாகலாம் என்றும் விளக்கினேன். பரவாயில்லை, அதுவரை எனது அறையிலேயே காத்திருப்பதாக கூறினான். அவன் கட்டளையிடும் தோனியில் சொல்லவில்லை. அவனுக்கு தெரியும், என்னை கட்டளைகள் மூலம் அடிபணிய வைக்க முடியாது என்று.

நான் எவ்வளவு சொல்லியும் அவன் எனது அறையை விட்டு வெளியேறுவதாக இல்லை. இப்பொழுது இவனை எனது அறையிலிருந்து வெளியேற்றுவது மிகவும் முக்கியமான ஒன்று. அவனிடம் எனது தோழியின் வருகையைப் பற்றி கூறினேன். இந்த சந்திப்பை ஏற்பாடு செய்ய நான் பல நாட்கள் போராட வேண்டியிருந்தது என்றேன். அவன் அமைதியாக என்னைப் பார்த்து சிரித்தான். என்னை திருத்தவே முடியாது என்றான். என்னுடைய கவலை புரிகிறது என்றான். ஆனால், ஒரு சிற்றிதழ் ஆசிரியருக்கு கதையுடன் வருவதாக வாக்கு அளித்ததாகவும், இந்த அறையை விட்டு வெளியேறுவது என்பது, அது கதையுடன் மட்டுமே சாத்தியம் என்றான். கடவுள்களின் விதி 1810'ன்** கீழ், கோரிக்கைகளுடன் போகும் எந்த கடவுளும் கோரிக்கை நிறைவேறும் வரை திரும்ப கூடாது என்பதை மீண்டும் ஒரு முறை எனக்கு நினைவுப்படுத்தினான். 

கடைசியில் அவன் விருப்பத்திற்கு ஏற்ப அவனுக்காக ஒரு கதை எழுத தொடங்கினேன். அது இப்படி தொடங்கியது.

"இந்த முறை கடவுள் ஒரு கோரிக்கையுடன் என் முன்னால் வந்து நின்றான். கோரிக்கையுடன் இதுவரை எந்த கடவுளையும் நான் பார்த்ததில்லை என்பதால், நான் கொஞ்சம் விக்கிதான் போனேன். பிறகு சுதாரித்து கொண்டு, அவன் கோரிக்கையை நான் திட்டவட்டமாக மறுத்தேன்............"

குறிப்பு:
********
**விதி எண் 183 என்பதிலிருந்து 1810 என்று மாற்றப்பட்டு உள்ளது.

2 comments:

புகழன் said...

அச்சு அசலாக எம்.ஜி. சுரேஷின் 37C நாவலின் சிறுகதை வடிவமாகவே எனக்குப் படுகிறது.

சரவண வடிவேல்.வே said...

நன்றி புகழன்...