Sunday, September 11, 2011

நாம் வசிக்கும் பூமியின் வரலாறு என்னும் கட்டுக்கதை

இந்த பதிவு உயிரோசையில் வெளிவந்துள்ளது.
http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4808

 அசோக் பாதி எழுதி அறையில் வைத்திருந்த கதையை, அவனுக்கு தெரியாமல் திருடி, அந்த கதையை முழுதாக எழுதி இங்கே பதிவு செய்துள்ளேன். இதுவரை இந்த வலைப்பதிவில் எழுதியவை அனைத்துமே மற்றவர்களிடமிருந்து திருடியதுதான் என்பதால், அசோக்கின் கதையை திருடி இங்கே எழுதுவது என்னை எந்த வீதத்திலும் பாதிக்கவில்லை என்பதை மிகவும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.


நாம் வசிக்கும் பூமியின் வரலாறு என்னும் கட்டுக்கதை

தெற்கு பகுதியில் வசிக்கும் மக்களின் வரலாற்றைப் பற்றி ரகு ஆராய்ச்சி செய்ய தொடங்கிய சில நாட்களிலேயே, தெற்கு பகுதியில் எப்பொழுதோ வசித்த பழுப்பு நிற மனிதர்களைப் பற்றியும் அவனுக்கே தெரியாமல் ஆராய்ச்சி செய்ய தொடங்கிவிட்டான். பழுப்பு நிற மனிதர்கள் ஒரு காலத்தில் அங்கு ஆட்சி செய்தார்கள் என்ற செய்தி அவனுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. ஏனென்றால், ஒன்பது வருடங்களுக்கு முன்னால் ஜெர்மனியில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசிய ஜார்ஜ் பிட்டரியன் ருஸ்ட் என்ற ஆராய்ச்சியாளர், பழுப்பு நிறம் கொண்ட மனிதர்கள் ஜெர்மனியில் உள்ள வடக்கு பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக சொல்லியிருந்தார். மேலும் அவர், ஒரு காலத்தில் பழுப்பு நிற மனிதர்கள் மொத்தமாக ஜெர்மனியை விட்டு வெளியேறியதாகவும், பின்பு அவர்கள் எங்கு சென்றார்கள் என்பதைப் பற்றிய செய்தி குறிப்புகள் இதுவரை எந்த புத்தகத்திலும் கிடைக்கவில்லை என்றும், இதற்காக அவர் பல ஆராய்ச்சிகள் செய்தும் இதுவரை எந்த பலனும் இல்லை என்றும் பேசியிருந்தார்.

பொதுவாகவே நியாபக மறதி அதிகம் உள்ள ரகுவுக்கு, அன்று ஜார்ஜ் பிட்டரியன் பேசியது இப்பொழுதும் அவன் நினைவில் நிற்பதற்கு காரணம், அவன் கலந்துக்கொண்ட முதல் கருத்தரங்கம் என்பதால் மட்டும் அல்ல. ஜார்ஜ் பிட்டரியன் அந்த கருத்தரங்கில் பேசிக்கொண்டு இருந்த போதுதான், அவன் முதல் முதலாக அனாரியாவை நேரில் சந்தித்தான். இது இந்த கதைக்கு சற்றும் சம்மந்தம் இல்லாத விசயம் என்பதால், அந்த சந்திப்பின் போது ரகுவுக்கும், அனாரியாவுக்கும் நடந்த நட்பு கலந்த காதல் சம்பாஷனைகளை இந்த கதையிலிருந்து நீக்கிவிட்டேன்.

ஜெர்மனியில் வாழ்ந்த பழுப்பு நிற மக்கள் எப்படி இங்கே உள்ள தெற்கு பகுதிக்கு வந்தார்கள் என்று ரகு ஆராய்ச்சி செய்ய தொடங்கினான். பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஜெர்மனியிலிருந்து இங்கே நடைப்பயணம் மூலமாக மட்டுமே வருவது என்பது முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்று. அப்படியே நடைப்பயணமாக வந்திருந்தாலும், வரும் வழியில் கண்டிப்பாக பல ராஜ்ஜியங்களை தாண்டியே வந்திருக்க வேண்டும். ஆனால், எந்த நாட்டிலும் இந்த பழுப்பு நிற மனிதர்கள் பற்றிய குறிப்புகள் இல்லை. 

அனாரியாவின் உதவியுடன் ஜெர்மனியில் உள்ள நூலகத்தில் ஜார்ஜ் பிட்டரியன் எழுதிய நூல்களை தேடிப்பார்த்ததில், ரகுவுக்கு சில குறிப்புகள் கிடைத்தது. அதன்படி பழுப்பு நிற மனிதர்கள் ஜெர்மனியிலிருந்து கப்பலில் போனதாக ரகுவுக்கு தெரியவந்தது. சுமார் நாற்பது ஆயிரம் மக்கள் ஒரே நேரத்தில் கிளம்பியதாகவும், அந்த மக்கள் எதற்காக ஜெர்மனி நாட்டை விட்டு வெளியேறினார்கள் என்று தெரியவில்லை என்றும் ஜார்ஜ் பிட்டரியன் எழுதியிருந்தார். கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ள பழுப்பு நிற மக்கள், ஒருவேளை எதாவது அபச குணங்களை பார்த்து பயந்திருக்கலாம் என்றும், இந்த வெளியேற்றத்திற்கு சில ஆண்டுகள் முன்னர் ஜரோப்பாவில் ஏற்பட்டதாக சொல்லப்படும் மிக பெரிய நிலநடுக்கம் கூட காரணமாக இருக்கலாம் என்றும் ஜார்ஜ் பிட்டரியன் எழுதியிருந்தார்.

ஜார்ஜ் பிட்டரியனை நேரில் சந்தித்தால் பழுப்பு நிற மனிதர்களைப் பற்றி மேலும் விவரங்கள் கிடைக்கும் என்று அனாரியாவும், ரகுவும் முடிவு செய்துபோது, அவர்களுக்கு கிடைத்த செய்தி அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த கருத்தரங்கம் முடிந்த இரண்டாவது மாதமே லண்டனில் ஜார்ஜ் பிட்டரியன் ஏதோ ஒரு விஷ பூச்சி கடித்து மரணம் அடைந்துவிட்டதாகவும், அவர் மரணம் அடைந்தபொழுது அவர் உடல் முழுவதும் பழுப்பு நிறத்தில் இருந்ததாகவும் ஜார்ஜ் பிட்டரியனின் மனைவி கூறினார்.

அன்று இரவு ரகு தனது பழுப்பு நிற மனிதர்களின் ஆராய்ச்சி பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தான். வலைப்பதிவில் எழுதப்படும் கதைகள் ஒரு பக்கத்தை தாண்டியிருக்க கூடாது என்ற காரணத்தால், இந்த ஆராய்ச்சியை இத்துடன் முடித்துக்கொள்ள முடிவு செய்தான். இதன்படி, தனது ஆராய்ச்சியின் முடிவை எழுதி எனக்கு மெயில் செய்திருந்தான். அந்த மெயிலில் இப்படிதான் எழுதியிருந்தது.

"நாம் வசிக்கும் பூமியின் வரலாறு என்னும் கட்டுக்கதை"

2 comments:

Travis Bickle said...

Boss neegnalum aramichicha.

onume puriyala!

சரவண வடிவேல்.வே said...

:)

பாஸ், யாருக்கும் புரியாத மாதிரி எழுதுவதுதானே இப்பொழுதுதைய டிரண்ட்... அதான்