Saturday, January 21, 2012

புத்தகப் பட்டியல்



* துருக்கிக்தொப்பி - கீரனூர் ஜாகிர்ராஜா
* உப பாண்டவம் - எஸ்.ரா
* ஆத்மநாம் படைப்புகள் - ஆத்மநாம்
* கணையாழி கடைசிப் பக்கங்கள் - சுஜாதா
* ஸ்ரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா
* Notes from the Underground - Fyodor Dostoyevsky
* சிலுவையின் பெயரால் - ஜெயமோகன்
* திசை காட்டிப் பறவை - பேயோன்
* என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் - மனுஷ்ய புத்திரன்
* கரிசல் காட்டுக் கடுதாசி - கி.ரா
* ஜே.ஜே. சில குறிப்புகள் - சு.ரா
* The Trial - Kafka
* பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா
* தோட்டியின் மகன் - சு.ரா
* எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்சி பனியனும் - சாரு நிவேதிதா
* ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா

இவை எல்லாம் புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் அல்ல. என்னிடமிருந்து நண்பர்கள் கடனாக வாங்கி இது வரை என் கைக்கு திரும்பி வராத புத்தகங்களின் பட்டியல். இது ஒரு பகுதி மட்டுமே. கடனாக தந்த பல புத்தகங்களின் பெயர்களை மறந்து விட்டதால், என்னால் முழுமையான பட்டியலை தயார் செய்ய முடியவில்லை.

"அப்பாடி, நான் கடனாக வாங்கிய புத்தகம் தப்பியது" என்று நண்பர்கள் யாரும் சந்தோஷமாகயிருந்து விட வேண்டாம். ஏனென்றால், நான் கடனாக கொடுத்த புத்தகங்களின் பெயர்கள் நினைவில் வர வர இந்த பதிவில் அந்த புத்தகங்களின் பெயர்களை சேர்த்துக் கொண்டேயிருக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

இந்த பதிவை எழுதி பதிவிடும் போது, ஏழு புத்தகங்களே இருந்தது, இப்பொழுது எத்தனை புத்தகங்கள் உள்ளது என்பதை நீங்களே ஒரு முறை எண்ணி சரி பார்த்துக்கொள்ளவும். உங்களுக்கு நான் கடனாகக் கொடுத்த புத்தகத்தின் பெயர் கூட, ஒருநாள் இந்த பட்டியலில் சேரலாம். ஆகவே, என் வலைப்பதிவில் உள்ள இந்த பதிவை மட்டும் தொடர்ந்து சரி பார்த்துக்கொண்டேயிருக்கவும். ஒருவேளை உங்களுக்கு நான் கடனாகக் கொடுத்த புத்தகத்தின் பெயரைக் கடைசி வரை என்னால் நினைவில் கொண்டு வர முடியவில்லை என்றால், உங்கள் மனசாட்சியின் படி நீங்களே அந்த புத்தகத்தை என்னிடம் திரும்ப கொடுத்துவிடவும்.

நண்பன் ஒருவனுக்கு போன் செய்து நான் கடனாக கொடுத்த புத்தகங்களைப் பற்றி கேட்ட போது, " அய்யோ, மறந்துவிட்டேன் மச்சி.. இப்பொழுதே பார்சலில் உனது வீட்டுக்கு அனுப்பிவிடுகிறேன்" என்றான். ஆகவே அவனுக்கு கடனாக தந்த நான்கு புத்தகங்களின் பெயர்களை இங்கே சேர்க்கவில்லை. அவன் சொல்லி ஒரு மாதம் முடிய போகிறது, நேரிலேயே ஒருமுறை சந்தித்தும் விட்டோம். இன்னும் புத்தகங்கள் கைக்கு வந்த வழியைக்கானோம்.

நானும் பலரிடமிருந்து புத்தகங்களை கடனாக வாங்கி மீண்டும் அவர்களிடம் கொடுக்காமல் சமாளிப்பு போடுபவன் என்ற முறையில், ஒன்றை மட்டும் என்னால் தெளிவாக சொல்ல முடியும். "அவன் தான் இந்த புத்தகத்தை படித்துவிட்டானே, பின் எதற்கு அவனுக்கு மீண்டும் தர வேண்டும்" என்ற எண்ணமே பலரும் புத்தகத்தை திரும்பக் கொடுக்காமல் இருக்க காரணம். இந்த காரணம் எனக்கும் சேர்த்துதான்.

(நண்பர்களுக்கு முக்கிய அறிவிப்பு: "இந்தந்த புத்தகம் இந்தந்த நண்பரால் கடனாகப் பெறப்பட்டு இன்னும் திரும்ப தராமல் நிலுவையில் உள்ளது" என்ற பட்டியலை விரைவில் எனது வலைப்பதிவில் வெளியிட முடிவு செய்துள்ளேன்) 

1 comment:

Anonymous said...

நண்பர்களுக்கு முக்கிய அறிவிப்பு...ஹா.ஹா.. இதை படிச்சதும் இரவல் புத்தகம் தந்தவங்க உங்களை தேடி வர நீங்களே வாய்ப்பு குடுத்துட்டீங்க!!