Saturday, May 28, 2011

நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் - III

நான்காவது சந்திப்பு 

எனக்கும் கடவுளுக்குமான நான்காவது சந்திப்பு இன்று அதிகாலை சாந்தி காலனி சாலையில் நடந்தது. இதற்க்கு முன்னர் நடந்த எல்லா சந்திப்புகளிலும் அவன் தன்னை கடவுள் என்று  அறிமுகம் செய்துக்கொண்டதால், நானும் அவனை கடவுள் என்றே அழைக்கத் தொடங்கினேன். எங்கள் பழைய சந்திப்புகள் நடந்த இடங்கள் எதுவும், எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. நான்  மறைமலை நகரில் வசித்தபோது, ஒருமுறை எனது அறையை தட்டாமல் அவன் உள்ளே நுழைந்ததாக ஞாபகம். ஆனால் தெளிவாகத் தெரியவில்லை.

அவனுடைய வருகையின் போதெல்லாம் நான் சோகத்தில் மட்டுமே இருந்திருக்கிறேன். ஆனால் இந்தமுறை அப்படியில்லை. அவனின் தற்பொழுதைய வருகை எனக்கு ஆச்சரியத்தையும், சந்தேகத்தையும் தந்தது.

வழக்கம் போல், இந்த சந்திப்பும் அமைதியாகதான் ஆரம்பித்தது. அந்த அதிகாலையில், நடைப்பயிற்சி செய்துக்கொண்டிருந்த யாருமே எங்களைக் கண்டுக்கொள்ளவில்லை. அவனின் முதல் வார்த்தைக்காக நானும்,  என்னுடைய முதல் வார்த்தைக்காக அவனும் காத்துக்கொண்டிருந்தோம். அவன்தான் முதலில் ஆரம்பித்தான்,

"உன்னை இங்கு நான் எதிர்ப்பார்க்கவில்லை" என்றான்.

"நானும் தான்"  என்றேன்.

"இன்னும் நான் கடவுள் என்பதில் உனக்கு சந்தேகம் இருக்கிறதா??" என்றான்.

அவனுக்கு நன்கு தெரிந்திருந்தது, "எந்த மாதிரி கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல தயங்குவேன் என்று". நான் பேச்சை  மாற்றும் நோக்கில் "இப்பொழுதுலாம் நடைப்பயிற்சி செய்ய நிறைய பேர் வருவதாக சொன்னேன்". நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே இரண்டாவது அவென்யூ நோக்கி நடக்க தொடங்கினோம்.

என்னிடம் கேள்விகளை  அடிக்கிக்கொண்டே  போனான். என்னைப் பற்றி எல்லாம் தெரிந்தவன் என்பதை அவன் நிரூபிக்க விரும்பினான். தற்பொழுது நான் காதலிக்கும் என்னுடைய  நான்காவது காதலியைப் பற்றி விசாரித்தான். "நீ மீண்டும் ஏமாறப்போகிறாய். எனக்கு உன்னுடைய எல்லா காதல்கதைகளும் தெரியும்" என்றான். "இதில் என்ன விஷேசம் இருக்கிறது, என்னுடைய வலைப்பதிவைப் படிப்பவர்கள் அனைவருக்குமே என்னுடைய எல்லாக் காதல் கதைகளும் தெரியும்" என்றேன்.

"சென்ற வாரம் நாகூரில் நீ சந்தித்த அந்த எழுத்தாளர் உன்னை எந்தளவு பாதித்து உள்ளார் என்பதும் எனக்கு நன்கு தெரியும்" என்றான். "அவன் எழுத்தாளனே இல்லை, அவன் ஒரு ஏமாற்றுக்காரன்" என்றேன்.

ஒரு பெட்டிக்கடையில் சாய்பாபா படம் கொண்ட ஒரு தினசரி விளம்பரம் தொங்கிக்கொண்டிருந்தது.

அவனிடம் "சென்ற மாதம் ஒரு சாமியார் செத்தாரே  அது நீ இல்லையா??" என்றேன். அவன் சிறிது யோசித்தான். இப்பொழுது என் நேரம், இனி அவனை நான் கேள்விகளால் துழைக்கவேண்டும்.

மீண்டும் கேட்டேன் "அவன் இறந்தது உனக்கு தெரியும் தானே??"

"எனக்கு தெரியாது"

"எல்லா செய்திதாள்களிலும் போட்டு இருந்தார்களே"

"நான் செய்திகள் படிப்பதில்லை"

"முதலில் இறந்தது நீ தான், என்று நினைத்துவிட்டேன்"

"எனக்கு மரணம் இல்லை"

"அவனும் இதைதான் சொன்னான்" என்றேன்.

அவனுடைய செல்போன் சிணுங்கியது. Galaxy மாடல் போன், அவனுடைய உள்ளங்கையை விட பெரிதாக இருந்தது.

"நேரமாகி விட்டது, இன்று நான் கார் கொண்டு வரவில்லை, விரைவாகப் போகவேண்டும், காத்துக்கொண்டிருக்கிறாள். மீண்டும் உன்னை சந்திக்கிறேன்" என்று சொல்லி எனக்கு எதிர்ப்புறம் நடக்க தொடங்கினான்.

சிறிது நேரம் கழித்து நான் திரும்பி பார்க்கையில் ஒரு பெண்ணொருத்தி'யுடன் அவன் கைக்கோர்த்து நடந்துக்கொண்டிருந்தான். தொலைவிலிருந்து பார்க்கும் போது, அவள் எனது பழைய காதலிகளில் ஒருத்தியைப் போல் இருந்தாள்.

2 comments:

தருமி said...

நன்கிருக்கிறதே ... மற்ற பகுதிகளை வாசிக்கணும் ...

சரவண வடிவேல்.வே said...

நன்றி தருமி...