Friday, July 8, 2011

மீண்டும் ஒரு சதுரங்க ஆட்டத்தில் தோல்வியடைகிறேன், நான்

இந்த கதை உயிரோசையில் வெளிவந்துள்ளது. 
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4592

"You know what the Mexicans say about the Pacific? They say it has no memory. That's where I want to live the rest of my life. A warm place with no memory" - The Shawshank Redemption Movie

மீண்டும் ஒரு சதுரங்க ஆட்டத்தில் தோல்வியடைகிறேன், நான். நம் பிரிவுக்கு பின் நான் அடையும் நான்காவது தோல்வி இது. போன வாக்கியத்தில் ஒரு பிழை உள்ளது. அது இப்படிதான் இருந்திருக்க வேண்டும், "உன் பிரிவுக்கு பின் நான் அடையும் நான்காவது தோல்வி இது" என்று. மற்றவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ, உனக்கு கண்டிப்பாக புரியும் "நம், உன்" இதன் வித்தியாசம். மொத்தம் ஆறு முறை விளையாடி,  நான்கு முறை தோல்வியும், இரண்டு முறை வெற்றியும் அடைந்திருக்கிறேன். வெற்றி பெற்ற இரண்டு ஆட்டங்களும் எனக்குள் நானே விளையாடிய ஆட்டங்கள்.

இப்பொழுதுலாம், என்னுடைய எல்லா தோல்விகளும் உன்னையே நினைவுப்படுத்துகிறது. தோல்விகளுக்கு உன்னையே பழி சொல்கிறது எனது மனது. எனக்கு விரும்பம் இல்லைதான், உன்னை நினைவுப்படுத்தவும், உன் மீது பழி சொல்லவும்.  ஆனால் என்ன செய்வது, பாழாய் போன இந்த எண்ணங்கள் எப்பொழுதும் உன்னை சுற்றியே  இருக்கிறது. எனது படுக்கையறையில், செல்போனில், தலையனைக்கு அடியில், அலுவலகப் பேருந்தில், யாரும் உட்காராத ரயில்வே பிளாட்பாரப் பெஞ்சுகளில், மின்னஞ்சலில், மூன்றாவது தெருவில் இருக்கும் உனது பெயர் கொண்ட ஒரு கடையில், இப்படி எல்லாவற்றிலும் உனது எண்ணங்களே மிஞ்சியிருக்கும் போது, என்னால் எப்படி உன்னை விட்டு முழுமையாக வெளிவர முடியும்.

நான் சிலநேரங்களில் நினைப்பது உண்டு, நமது பிரிவுக்கு அடித்தளமாக அமைந்த அந்த நாளைப் பற்றி,  அந்த உரையாடலைப் பற்றி. அந்த நாள், அந்த உரையாடல் எல்லாம் காற்றோடு மறைந்தால் எப்படி இருக்கும் என்று. அது மட்டும் நடந்திருந்தால், இந்நேரம் உன் வெற்றிக்கு நானும், என் வெற்றிக்கு நீயும் மாறி மாறி இனிப்புகள் கொடுத்திருப்போம். எனது தோல்விக்கு நீயும், உனது தோல்விக்கு நானும் ஆறுதல் சொல்ல நமது தோள்பட்டைகளை தந்திருப்போம். அவை எல்லாம் இப்பொழுது கானல்நீரை போல் மாறிவிட்டது. இனி நீ, நகுலன் கதைகளில் வரும் கதாபாத்திரம் போல்தான் எனக்குள் இருக்க போகிறாய்.

இன்றைய சதுரங்க ஆட்டத்தில், என்னுடைய எல்லா சதுரங்க காய்களிலும் உனது பிம்பமே தெரிகிறது. இன்று நான் தோற்பது உறுதி. இன்றைய தோல்விக்கு கண்டிப்பாக உன்னைப் பழி சொல்லக் கூடாது என்று முடிவோடு இருக்கிறேன். நானே எனது மந்திரியை இழக்க முன் வருகிறேன். அதோ எனது மந்திரி, கட்டங்களை விட்டு வெளியில் சென்று விட்டது. என்னுடைய தவறான முடிவால் எற்பட்டது அது, என்று என்னை நானே திட்டிக்கொள்கிறேன். எனது இன்றைய தோல்விக்கு கண்டிப்பாக எனது தவறான ஆட்டமே காரணம் என்பதை மீண்டும்  மீண்டும் மனதுக்குள் சொல்லிப் பார்க்கிறேன். என்னுடைய சக ஆட்டக்காரனா எனது நண்பன் என்னைப் பார்த்து சிரிக்கிறான்.  ஒருவேளை அவனுக்கு தெரிந்திருக்கலாம், "என்னை  நானே ஏமாற்றிக் கொள்வதைப் பற்றி". ஒருவன் தெரிந்தே  காய்களை நகர்த்தினானா??, அல்லது தெரியாமல் நகர்த்தினானா? என்பதை ஒரு சதுரங்க ஆட்டத்தில் நீங்கள் மிகவும் சுலபமாக கண்டுபிடித்து விடலாம்.

"என்னை மன்னித்துவிடு நண்பா, எனக்கு தெரியும் ஒரு சதுரங்க ஆட்டத்தில் எந்த ஒரு வீரனும் தனது எதிரி அவனுடைய காய்களை அவனே விட்டுதர விரும்ப மாட்டான் என்று. எனக்கு வேறு வழி தெரியவில்லை  நண்பா. இன்றைய தோல்விக்கு நான் என்னைப் பழி சொல்ல வேண்டும். நினைவுகளிலிருந்து மொத்தமாக வெளியில் வர வேண்டும" 

உனது நினைவுகள அழிப்பதற்க்கு எனக்கு தெரிந்த அனைத்தையும் செய்துவிட்டேன். இப்பொழுது என்னிடம் உன்னுடைய புகைப்படங்கள் எதுவும் இல்லை. உனது குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், Orkut Scrap என்று எல்லாவற்றையும் அழித்துவிட்டேன். உனக்கும் எனக்கும் தெரிந்த சில நண்பர்களை சந்திப்பதைக் கூட  தவிர்த்து விட்டேன். நீ  எனக்கு தந்த பரிசுப் பொருள்கள் இப்பொழுது எங்கேயிருக்கும் என்று எனக்கு தெரியாது. இது இத்தனையும் செய்த பின்னாலும் உன் நினைவுகளிலிருந்து என்னால் வெளியில் வர முடியவில்லை. இதோ  இப்பொழுது இந்த சதுரங்க ஆட்டம் நடைபெரும் அறையில் மேலே சுற்றிக்கொண்டிருக்கும் மின்விசிறி கூட எனக்கு உன்னைதான் நினைவுப்படுத்துகிறது.

இந்த சதுரங்க ஆட்டத்தில் அடுத்து ஒரு தவறான முடிவை எடுக்க தயாராகிறேன். இந்த முறை எனது ராணியை  இழக்கப் போகிறேன். கண்டிப்பாக இன்றைய தோல்விக்கு நானே காரணம். ஆனால், என்ன செய்கிறான் அவன்??.  நண்பா என்ன சொன்னாய் நீ  "தோல்வியை  ஒத்துக்கொள்கிறேன் என்றா??" அப்படி செய்யாதே,  இன்றைய போட்டியில் நான் தோல்வியடைந்தே  தீரவேண்டும். போகாதே நண்பா போகாதே, உனக்கும் தெரிந்திருக்கும் "ஒரு சதுரங்க ஆட்டத்தில் எந்த ஒரு வீரனும் அனுதாபங்களை விரும்ப மாட்டான்" என்று. நண்பா, தயவு செய்து என்னை வீழ்த்திவிட்டு போ அல்லது அந்த நினைவுகளிலிருந்து என்னை மீட்டாவது போ.  

2 comments:

நிலவுக்காதலன் said...

no comments til now for the best ever post of my dear frnd. actually read it one month before ey machi in office :) felt so deep inside ma heart machi.. so touchin.. but how u writin such kind only with imagination da.:)to make this luv happ in past, orkut scrap nu la sollirukka (no fb :)) nic thinkin da :)

hmmm finally இந்த பதிவை படிக்கும் போதும் உன் நியாபகமே..

சரவண வடிவேல்.வே said...

பின்னூடம் எதுவும் வராத காரணத்தால், நான் கூட நல்லா இல்லையோ என்று நினைத்தேன்.

மிகவும் நன்றி நண்பா..

என்னதான் பாராட்டுகள் நம்பிக்கை இல்லை என்றாலும், இது போன்றவைதான் தொடர்ந்து எதாவது எழுத உதவுகிறது என்பது நிதர்சனமான உண்மை