Monday, February 28, 2011

புரிந்தும் புரியாமலும் - IV


  நான் எழுத வேண்டும், உன்னைப் பற்றி மிகவும் உயர்வாக.

உன்னைப் பற்றி எழுதும் போதெல்லாம், நான் நூறு முறையாவது யோசித்துதான் எழுதுகிறேன். எழுதியதை மீண்டும் மீண்டும் படித்து பார்க்கிறேன். நான் எழுதியது, உன்னைப் பற்றிய தவறான எண்ணத்தை  ஏற்படுத்திவிடுமோ என்று கவலைப்படுகிறேன். நான் எழுதியதுமேல் எனக்கே திருப்தியில்லாமல், எழுதியதை அழித்துவிட்டு, ஒரு சில சிறந்த வாக்கியங்களின் உதவியால் உன்னைப் பற்றி மீண்டும் எழுதுகிறேன். மீண்டும் அதே யோசனை, அதே எண்ணம், அதே கவலை, மீண்டும் மீண்டும் அழித்துவிட்டு, திரும்ப திரும்ப எழுதிப்பார்க்கிறேன்.

இதை தொலைவிலிருந்து பார்க்கும் ஒருவன் "என்னைப் பைத்தியம்" என்கிறான். எனக்கு அதைப் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லை, நான் எழுத வேண்டும், உன்னைப் பற்றி மிகவும் உயர்வாக. அவனுக்கு என்ன தெரியும் உன்னைப்பற்றி??. ஆனால், அவன் பார்க்கும் எல்லாரிடமும் சொல்கிறான் "நான் பைத்தியம்" என்று. உன்னிடம் கூட அவன் பலமுறை சொல்லியிருக்கலாம். அவன் எதையும் தெளிவாக செய்கிறான், பயமில்லாமல் செய்கிறான், அனைவரும் நம்பும்படி செய்கிறான். அவனை எல்லாரும் நம்ப தொடங்கினார்கள். ஏன்?, அதை நீ கூட நம்பியிருக்கலாம். மீண்டும் சொல்கிறேன், எனக்கு அதைப் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லை, நான் எழுத வேண்டும், உன்னைப் பற்றி மிகவும் உயர்வாக. அவனுக்கு என்ன தெரியும் உன்னைப்பற்றி?

எனக்கு நம்பிக்கை இருக்கிறது, நான் உனக்காக படைப்பேன் - உலகின் மிகச் சிறந்த காவியங்களை, உலகின் மிகச் சிறந்த அதிசயங்களை, உலகின் மிகச் சிறந்த இதிகாசங்களை. ஆனால், அதற்கு சில வருடங்கள் ஆகலாம், சில நூற்றாண்டுகள் ஆகலாம்,  ஏன், சில யுகங்கள் கூட ஆகலாம். உன்னால் அது வரை காத்திருக்க முடியுமா?? எதையும் என்னால் தெளிவாக சொல்ல முடியாது, நான் சொல்வதை நீருபிக்க கூட என்னால் முடியாது. இப்பொழுது சொல், அதுவரை உன்னால் காத்திருக்க முடியுமா??.

எனக்கு பயமாக இருக்கிறது. காரணமில்லாத பயம் அது, என்னை நானே கேட்கும் ஓராயிரம் கேள்விகளால் ஏற்பட்டப் பயம். அந்த கேள்விகள் உன்னைப் பற்றியே, அந்த கேள்விகளுக்கான பதிலை நீ சொல்வதாக நினைத்து எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்.

'உன் பதில் என்ன என்பது எனக்கு தெரியும். அந்த பதில், என்னை எந்த விதத்திலும் மகிழ்ச்சி அடைய செய்யபோவதில்லை என்பதும் எனக்கு தெரியும்."

எடுத்துக்கொள் எல்லாவற்றையும். என்னிடம் எனக்காக ஒன்றுமே இல்லை. எனக்கு உன் அன்பின் மீது எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை. நான் கைவிடப்பட்டவன். இன்று இல்லையென்றாலும் என்றோ ஒரு நாள், யாரோ ஒருவரால் நீயும் கைவிடப்படுவாய். அப்பொழுது எனக்காக நீ வருத்தப்படலாம் அல்லது என் நினைவுகள் உன்னிடம் அழிந்திருக்கலாம். எனக்கு அதைப் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லை. நான் எழுத வேண்டும், உன்னைப் பற்றி மிகவும் உயர்வாக.

5 comments:

Travis Bickle said...

Why so much pain, please do not write like this again, it may hurt people who believe in love.

சரவண வடிவேல்.வே said...

தெரியல நண்பா, ஒருவேளை நகுலன் புத்தகங்களை படித்ததின் பாதிப்பாக இருக்கலாம்!!

இந்த பதிவின் Comment'க்காக காத்துக்கொண்டிருந்தேன். உங்கள் Comment'க்கு ரொம்ப நன்றி நண்பா.

Travis Bickle said...

Nanriya ethuku.

But, really very good post, but its very hard to digest, very raw and i dont want to read it one more time.

SBS said...

உண்மையிலேயே என்னை என்னால் நம்பமுடியவில்லை. ஒருவேளை எனக்குத் தேவையான ஆறுதல்கள் உங்கள் வாய்மொழியாய் இருக்க வேண்டும் என விதிக்கப்பட்டுள்ளதோ? எனத் தோன்றுகிறது. உணர்வுகளின் உச்சக்கட்டம் உங்கள் உள்ளத்தில் ஊறித் திளைக்கிறது என எண்ணுகிறேன். இன்னும் எவ்வளவோ சொல்ல வேண்டும் என்று என் உள்ளம் விழைகிறது. எண்ணங்கள் உள்ளத்தில் மட்டுமே எவரெஸ்ட்டுக்குச் செல்கின்றன. எழுத்துகள் ஆழ்கடலுக்குள் அமிழ்ந்து போய்விட்டன. "அமிழ்தினும் ஆற்ற இனிதே தமையன் தமிழ்ச்சொல் உணர்வின் வளம்"

சரவண வடிவேல்.வே said...

நன்றி நண்பா...

///***உணர்வுகளின் உச்சக்கட்டம் உங்கள் உள்ளத்தில் ஊறித் திளைக்கிறது என எண்ணுகிறேன்***//

எப்படி நண்பா, வார்த்தைகளை தேடி அதற்க்கு தகுந்த இடத்தில் போடுகிறீர்கள்??